செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

நீதி வளையுமா ? பார்பானுக்கு , கல்வி கொள்ளையனுக்கு அல்லது இந்துதத்வா ?

ஜனநாயகம்ந்த நாட்டில போலீசு, கோர்ட்டு, அதிகாரிகள் யாரும மக்களுக்காக வேலை செய்றது கெடையாது. சாதாரண குடிமகன் ஏதாவது ஒரு பிரச்சனைன்னு போலீஸ் ஸ்டேசனுக்குப் போனா, இழுத்தடிப்பானுங்க, லஞ்சம் கேட்பானுங்க. நீதிமன்றங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். நம்ம கேச விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே பல மாதங்கள் பிடிக்கும். அதற்கு பிறகும் வாய்தா வாங்கி இழுத்தடிப்பாங்க. அதனால, எந்த வம்புதும்புலையும் மாட்டிக்காம, நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போக வேண்டியதுதான்.”
ஏய், அவரு மட்டும் ஐடி கார்டு காட்ட மாட்டாரா? ஐயா அவரு ஓட்டு போட போகல, வாங்க போறாரு!
இதுதான் நாட்டின் பெரும்பான்மை குடிமக்களின் நிலைமை.
ஆனால், இத்தகைய பிரச்சனை இல்லாத குடிமக்களும் உள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று அரசியல் சட்டம் சொன்னாலும், இந்த குடிமக்கள் மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் சமமானவர்கள்.
உதாரணமாக, பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியைச் சேர்ந்த ராதா ராஜன் திருவண்ணாமலை கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த பசுக்கள் உயிரிழந்தது தொடர்பான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தாராம். தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் பராமரிப்பில் உள்ள பசுக்கள் மற்றும் கன்றுகளின் மிக மோசமான நிலையை உணர்த்துவதாக இந்த சம்பவம் இருந்ததாம்.
சாதாரண குடிமகனாக இருந்தால் தனது குறைகளை பகவான் மீது போட்டு மனபாரத்தை இறக்கிக் கொள்ள வேண்டியதுதான் என்பது மனுநீதி. ஆனால், ராதா ராஜன், தமிழகக் கோயில்களில் உரிய பராமரிப்பின்றி உள்ள பசுக்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்தத் திட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்திட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக சிந்திக்கும் குடிமக்களின் துயர் துடைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்கும் நீதித்துறை, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிற நூற்றுக்கணக்கான வழக்குகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு ராதா ராஜனின் அதிர்ச்சியை போக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. தமிழகமெங்கும் கோசாலைகளின் நிலை குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அது தொடர்பான அறிக்கையை 2 மாதத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
நீதித்துறை
இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக சிந்திக்கும் குடிமக்களின் துயர் துடைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்கும் நீதித்துறை.
சமச்சீர் கல்வி வழக்கிலோ, தில்லை கோயிலை தீட்சிதர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் வழக்கிலோ தப்பித் தவறி ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தீர்ப்புகள் வந்து விட்டால் அவற்றை எதிர்த்து எங்கெல்லாம் மேல்முறையீடு செய்வது, மேல் முறையீட்டிலும் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து விட்டால் அதை அமல்படுத்தாமல் எப்படியெல்லாம் அலட்சியம் செய்வது, என்று ஜனநாயகத்தை தூக்கிப் பிடிக்கும் ஜெயா அரசு கோசாலை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு செய்து, அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்து, மனுதாரர் ராதா ராஜனை அலைக்கழித்திருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.
கோசாலை பாதுகாப்புக்காக, அரசுத் தரப்பு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அனந்த பத்மநாபனையும், இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் கால்நடை மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.சுமதியையும் உறுப்பினர்களாக நியமனம் செய்து விட்டனர். மூன்றாவது உறுப்பினராக மனுதாரரே இருக்கலாம் என்று நீதிமன்றமே முடிவு செய்து விட்டது.
இதே கோமாதா தொடர்பான இன்னொரு நிகழ்வு இந்தியாவை வல்லரசாக்கியே தீருவது என்று உறுதி பூண்டுள்ள சில குடிமக்கள் பற்றி அறியத் தருகிறது. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியைச் சேர்ந்த அமீன் என்ற 27 வயது இளைஞர் ஈரோடு மாவட்டத்தில் இருந்து லாரிகளில் மாடுகளை ஏற்றிக் கொண்டு ஒசூர் வழியாக சென்று கொண்டிருந்தாராம். இந்த தகவல் அறிந்த விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சாந்தகுமார், பஜ்ரங்தள மாவட்ட அமைப்பாளர் தேவராஜ், பசுமை பாதுகாப்பு படை நிர்வாகிகள் சேதுமாதவன், கிரண்குமார் ஆகியோர் மாடுகளை ஏற்றிவந்த லாரிகளை சிறைபிடித்திருக்கின்றனர்.
11 லாரிகளில் ஏற்றப்பட்டிருந்த 196 மாடுகளையும், லாரிகளுடன் சிப்காட் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். சிப்காட் காவல்துறையினரும் அமீன் உட்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
முதலாளிகளின் சேவையில் அரசு
முதலாளிகளுக்காக L போல வளையும் அரசு.
மணல் கொள்ளையர்கள் ஆற்று மணலை அள்ளிச் செல்லும் போதோ, தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் லாரிகளையோ யாராவது தடுக்க முயற்சித்தால், அவ்வாறு, முதலாளிகளுக்கு எதிராக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டவர்கள் மீது போலீஸ் பாய்ந்து குதறியிருக்கும். ஆனால், கோமாதா விவகாரத்தில் இந்துத்துவ குண்டர்களின் அடாவடியை அங்கீகரித்து, 196 மாடுகளையும் போலீஸ் ஸ்டேஷனில் கட்டிப் போட்டு தீனி போடும் அவஸ்தையோடு வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் போலீஸ்.
இங்ஙனம், 196 மாடுகளை பறிமுதல் செய்து இந்தியாவின் வல்லரசு பாதையை செப்பனிட்டிருக்கின்றனர் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற சங்கபரிவார அமைப்பினர்.
உயர்நீதிமன்றத்தின் அக்கறை கோசாலை பசுக்களோடு நின்று விடுவதில்லை. தனியார் கல்விநிறுவனங்கள் நடத்தும் முதலாளிகளின் தேவைகளும் அவர்களால் ஜரூராக நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.
புதிய மனுதர்மம்
கல்லூரிக் கல்வி இயக்குநரக இணையதளத்தில் சுயநிதி கல்லூரிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பி.ஏ. படிப்புக்கு ரூ.1,350, பி.எஸ்சி. பயில ரூ.2,850 என எல்லா படிப்புகளுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளனராம். இதன் அடிப்படையில் மாணவர்களும் பெற்றோரும் குறைந்த கட்டணத்தில் படித்து தம்மை ஏமாற்றி விடுவதாக கல்வி வியாபாரிகள் மனம் குமுறியிருக்கின்றனர்.
எனவே, பெரியார் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்ற சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவின் பேரில், அவர்களது துயர் துடைக்க, போதுமான அளவு அதிகக் கட்டணத்தை நிர்ணயித்து தருவதற்கான குழு ஒன்றை நியமிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுத் தரப்பு, நீதிமன்றம் மற்றும் கல்வி முதலாளிகளின் கோரிக்கையை மறுக்கா விட்டாலும், இத்தகைய குழு அமைக்க 6 மாத அவகாசம் வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். ஆனால், நீதிபதி வி. ராமசுப்பிரமணியனோ 3 மாதங்களுக்குள் குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, சுயநிதி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி முதலாளிகளின் கண்ணீரை உடனடியாக துடைக்க ஆவன செய்துள்ளார்.
ஆனால், நீதிமன்றம் நாட்டு குடிமக்கள் சிலர் மீது கருணையுடன் செயல்படும் என்பது மதுரையில் நிரூபணமாகியிருக்கிறது. சென்ற வாரம் மதுரை அதிமுகவினர் அக்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கின்றனர். அதை ஒட்டி நகரெங்கும் 500-க்கும் மேற்பட்ட பிளெக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்களை அமைத்துள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று வழக்கறிஞர் ஏ பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அரசு தரப்பிலோ, அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்றுவதற்கு அரசாணையின் அடிப்படையிலும், சட்டப்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசே ‘மனம் திருந்தி’ நடவடிக்கை எடுப்பதாக சொல்லி விட்டதால் இந்த மனு மீது வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை என்று ஜெயலலிதா என்ற குடிமகனுக்கு உறுதுணையாக நின்றிருக்கின்றனர்.
இந்த 4 செய்திகளையும் வெளியிட்ட தி இந்து நாளிதழ், “மிகக் குறைந்த கட்டணத்தை உயர் கல்வித் துறையினர் தன்னிச்சையாக நிர்ணயம் செய்துள்ளனர். இதனால், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.” என்று தனியார் கல்வி முதலாளிகளுக்கும், “கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக் களை விற்பனை செய்யக் கூடாது; கோசாலைகளில் உள்ள மாடுகளுக்கு தேவையான மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும்; கோசாலைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்” என்று ராதா ராஜனுக்கும், “மாடுகளைக் கொண்டு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும், அதை மீறி லாரிகளில் அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பல மாடுகள் நெரிசலில் சிக்கி வழியிலேயே இறக்கும் நிலை உள்ளது.” என்று இந்துத்துவ மாடுகளுக்கும் பரிந்து பேசியுள்ளது.
கோயம்பேடு மளிகைக் கடைகளில் ஓரத்தில் தொங்கும் கருவாட்டு பேக்குகளுக்கு எதிராக கர்ஜனை புரிந்த மகாவிஷ்ணுவிடமிருந்து, மதுரை வீதிகளை ஆக்கிரமித்த அம்மாவின் போர்டுகளை எதிர்த்து ஒரு முனகல் கூட வெளியாகவில்லை.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீதிமன்றம், போலீஸ் அல்லது அரசு அதிகாரிகளிடம் உங்கள் வேலையை சாதித்துக் கொள்ள வேண்டுமானால், அதற்கு தி இந்துவின் ஆதரவும் வேண்டுமானால்.
1. நீங்கள் ஒரு பார்ப்பனராக இருக்க வேண்டும். அல்லது பார்ப்பனர்களுக்கு கவலை அளிக்கும் கோசாலை போன்ற விஷயத்தை கையில் எடுத்திருக்க வேண்டும். (அல்லது)
2. நீங்கள் தனியார் கல்வி முதலாளி போன்று மக்களிடம் கொள்ளை அடித்து லாபம் சம்பாதிக்கத் துடிப்பவராக இருக்க வேண்டும். (அல்லது)
3. நீங்கள் இந்துத்துவ அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்திருக்க வேண்டும்.
உங்கள் கோரிக்கை கோமாதா, அகண்ட பாரதம், வேதத்தின் புனிதம் போன்ற இந்துத்துவ புனிதப் பசுக்களில் ஒன்றாகவோ, வைகுண்டராஜனின் நலவாழ்வு, மிடாஸின் ஆரோக்கியம், ஜெயலலிதாவின் வறுமை போன்ற முதலாளிகளின் நலனுக்கானதாகவோ இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- செழியன். vinavu.com

கருத்துகள் இல்லை: