புதன், 25 டிசம்பர், 2013

முருங்கைக்காய் திருடிய ஏழைகளிடம் போலீஸ் அராஜகம் கூடவே Ex MLA ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்)


சென்னை திருவான்மியூரிலுள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த செல்வம், சக்தி ஆகிய இருவரும் இ.பி.கோ. 385-வது பிரிவின் கீழ் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு நபரையேனும் பணம் பறிக்கும் நோக்கில் தாக்கிக் காயப்படுத்துவதாக மிரட்டினால் தொடரப்படும் வழக்கின் பிரிவுதான் 385 என்பதாகும். இந்த வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டு சிறைவாசம் விதிக்கமுடியும்.
குற்றமும் தண்டனையும்
திருவான்மியூர் பகுதியில் குடியிருப்பவர் முன்னாள் கூடுதல் போலீசு தலைமை இயக்குனர் (ஏ.டி.ஜி.பி.) வெங்கடேசன். அவரது மனைவி ராணிவெங்கடேசன் முன்னாள் சாத்தான்குளம்   காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராவார். மகள் பியூலா ஒரு போலீசு அதிகாரி. மருமகனோ சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாஸ். செல்வமும் சக்தியும், மழையால் சரிந்து கிடந்த வெங்கடேசன் வீட்டு முருங்கை மரத்திலிருந்து கொஞ்சம் முருங்கை இலையையும் சில காகளையும் பறித்ததும், அக்குடும்பத்தினர் போலீசிடம் புகார் தந்தனர். இந்த மாபெரும் குற்றத்திற்காகத் தரப்பட்ட புகாரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மேலிடத்திலிருந்து அழுத்தம் தரப்பட்டது. அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்குமே! உடனே இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.கள், 10 போலீசார் உள்ளிட்ட ஒரு படையே சென்று கைது நடவடிக்கையில் இறங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணிவெங்கடேசன், “நூறு கோடி திருடினா என்ன, முருங்கையைத் திருடினா என்ன,எல்லாமே திருட்டுதானே” என்று ‘நியாயம்’ பேசுகிறார்.

அதே சென்னையில், அடகுக்கடை நடத்தி வந்த நிக்ஷாசந்த் என்பவர் திருட்டு நகைகளை வாங்கியதாகக் கூறி, அவரிடமிருந்து 203 கிராம் தங்கத்தை நான்காண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சென்றார், மயிலாப்பூர் போலீசு நிலைய தலைமைக் காவலர் சம்பத். இச்செயல் சட்டவிரோதமானதென்றும் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செயவேண்டுமென்றும் நிக்ஷாசந்த் புகார் கொடுத்தார். ஆனால், போலீசாரோ வழக்குப் பதிவு செயாததால், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார், அடகுக் கடைக்காரர். 2012-இல் தலைமைக் காவலர் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டாகியும் இதனை போலீசு நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நிக்ஷாசந்த் தொடுத்தார். தங்கத்தை அபகரிக்க முயன்ற வழக்கிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் நியாயப்படி தலைமைக் காவலரை கம்பி எண்ண வைத்திருக்க வேண்டும். ஆனால் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டதை காரணம் காட்டி அவரை மன்னித்துள்ளது, நீதிமன்றம். போலீசிடம் கருணை காட்டும் ‘சட்டம்-ஒழுங்கு’, ஏழைகளிடம் முருங்கைக்காய் பறித்த அற்பக் குற்றத்தையும் மன்னிக்கத் தயாராக இல்லை.

கருத்துகள் இல்லை: