கம்போடியா போகிற விமானம் பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு
வெள்ளைக்காரன் கண்களை ஒரு கறுப்புத்துணியினால் கட்டி தூங்கிக்
கொண்டிருந்தான். எனக்குத் தூக்கம் வரவில்லை. எப்படித் தூக்கம் வரும்?
கடந்த பல வருடங்களாக கைநழுவிப்போன ‘அங்கோர்வாட்’ பயணம் இன்று
கைகூடியதில் தூக்கம் எங்கே வரும்? கண்களை மூடினால் மூடிய
கண்களுக்குள்ளே இரண்டு நாட்களுக்கு முன் படித்துப்பார்த்த
கம்போடியா பற்றிய புத்தகங்களின் நினைவு வந்தது.
புதிதாக ஒரு நாட்டிற்குப் போவதற்கு முன்னர் அந்த நாட்டைப் பற்றிய பல
விபரங்களைத் தெரிந்து கொண்டு போனாலே பயணத்தில் பாதி வெற்றி கிடைத்து
விடும் என்று ஒரு சுற்றுலா பயண எழுத்தாளர் சொல்லியிருக்கிறார். ஆகவே
புதிதாகப் பயணம் போகிற ஒரு நாட்டைப் பற்றிய விபரங்களை புத்தகங்கள்,
நூலகங்கள், இணையத்தளங்கள் மூலம் தேடி எடுத்துப் படிப்பேன். அவ்வாறு
படித்த ஒரு புத்தகம் அது அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் மொனாஸ்
பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் சான்ட்லர் எழுதிய A History of
Cambodia என்ற புத்தகமாகும்.
தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளின் எல்லைகளையும்
தாய்லாந்து குடாக்கடலின் பழைய பெயர் சயாம் குடாக்கடல்,
எல்லையையும் எல்லைகளாகக் கொண்ட நாடு கம்போடியா. அது 1,81,040
சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. மக்கள் தொகை 14,952,662
(2012ஆண்டு வரை) ஆகும்.
இவர்களில் திராவிட பெளத்தர்கள் என அழைக்கப்படும் பெளத்தர்கள் 86
வீதமானவர்கள். ஏனையவர்களில் சீனர் 3 வீதம், சாம் (Chaam) இனத்தவர் 2
வீதம், இஸ்லாமியர் 2 வீதம், வியட்நாமியர் 5 வீதம் ஏனையோர் 2 வீதம்.
ஆதிகால தமிழ் எழுத்தின் வரி வடிவங்களைப் போன்ற சமஸ்கிருதம், பாளி
ஆகிய மொழிகள் கலந்து எழுத்துகளைக் கொண்ட கம்போடியாவின்
‘கெமர்’ (Khmer)
என்ற மொழியே கம்போடியாவின் தேசிய மொழியாகும். 1863 முதல் 1954வரை
பிரான்ஸின் ஆட்சியில் இருந்ததால் பிரெஞ்சு மொழி இன்றும் அங்கு
செல்வாக்காக இருக்கிறது.
முழுக்க முழுக்க விவசாய நாடான கம்போடியா அரிசி முன்னணி நாடுகளில்
ஒன்றாக இருந்த போதும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடு.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் அதிகமானவர்கள்
வாழ்கிறார்கள். 1954 இல் பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்ற
கம்போடியா அரசியல் சண்டையில் பலவீனமாகியது. பக்கத்து நாடான
வியட்நாமின் உள்நாட்டு யுத்தத்தினாலும் நாட்டுக்குள் மோதல்கள்
உருவாகின.
கம்போடியா சுதந்திரம் அடைந்த போது மன்னர் நொரோடொம் சிஹானுக்
(Norodom Sihanouk)
தலைமையில் முடியாட்சி மலர்ந்தது. 1960இல் மன்னர் மரணத்தைத் தொடர்ந்து
அவரின் மகன் கம்போடியாவின் தலைவனாக வந்தான். வியட்நாம் வடக்கு,
தெற்கு எனப்பிரிந்து யுத்தம் செய்ய கம்போடியத் தலைவர் வடக்கு
கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள் தெற்கு வியட்நாமிற்கு கம்போடியா வழியாக
ஆயுதங்கள் எடுத்து (கடத்திச் செல்ல) செல்ல உதவினார்.
இது கம்போடியா மக்களுக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவிற்கும்
பிடிக்கவில்லை. 1967இல் கம்போடியாவின் எல்லைப்புறங்களில்
பதுங்கியிருக்கும் கெரில்லாக்கள் மீது குண்டு வீசப் போவதாகவும்,
இதனால் கம்போடியா மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமென அமெரிக்கா
எச்சரித்தது. ஆனால் இளவரசர் சிஹானுக் அதனை காதில் போட்டுக்
கொள்ளாமல் 1970இல் சீனாவுக்குப் போய் சீனத் தலைவர்களைச் சந்தித்தார்.
அச்சமயம் கம்போடியாவில் இராணுவ புரட்சி நடந்து கம்போடிய அரசின்
தலைமைப் பொறுப்பிலிருந்து சிஹானுக் நீக்கப்பட்டார். இப்புரட்சியின்
பின்னணியில் இன்னொரு இளவரசன் சிசோவத் சிறிக் மடாக் இருந்தான். ஆனால்
இந்தப் புரட்சி அமெரிக்க உளவுப்படையின் உதவியோடு நடந்தது.
கம்போடியாவில் ஆட்சி மாற்றம் வந்ததும் அமெரிக்கா ஆதரவு
தென்வியட்நாமுக்கு எதிராக சண்டை போடும் வடவியட்நாம் கெரிலாக்களை
நாட்டை விட்டுப் போகும்படி உத்தரவு இடப்பட்டது. ஆனால்
கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு பெருகியது. வடவியட்நாம் கம்போடியா
கம்யூனிஸ்டுகளுக்கு ஆயுத உதவி செய்தது. அதன் விளைவாக கம்பூஜா
கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் பயிற்சி கொடுத்து வீரர்களை உருவாக்கியது.
1973இல் CPK (Communist Party of Kmpucha) என அழைக்கப்படும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுத வீரர்கள் வட வியட்நாமின் ஆதரவோடு
கம்போடியாவின் 60 சதவீதமான நிலப்பரப்பைக் கைப்பற்றி தமது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். 1975இல் தலைநகரை 115 நாட்கள்
சுற்றி வளைத்துப் போராடினார்கள் அவர்கள். பிறகு தலைநகர் அரசியல் தலைமை
சரணடைய கம்போடியா CPK இயக்கத்தின் கைகளில் விழுந்தது.
அதன் தலைமைப் பொறுப்பை
‘பொல்பெட்’
ஏற்றான். நாட்டைப் பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் நடத்தப் போவதாகச்
சொன்ன போதும் சர்வாதிகாரம் தலைதூக்கியது. அரசை விமர்சித்தவர்கள்,
அரசுக்கு எதிரானவர்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் தொகை (எவராலும் நம்பமுடியாது. ஆனால்
நம்பித்தான் ஆக வேண்டும்) இருபது இலட்சம் மக்கள் இவர்களில்
கம்போடியாவில் இருந்த சீனர்களும் வியட்நாமியர்களும்,
இஸ்லாமியர்களும் அடங்குவர்.
1981இல் வெளிநாட்டில் இருந்த இளவரசர் சிஹானுக்கு ஆதரவோடு ஜனநாயகக்
கம்பூஜா என்ற கூட்டணியை உருவாக்கி நாட்டுக்கு வெளியே ஒரு அரசை
அமைத்தன. இதனை ஐ.நா. அங்கீகரித்தது. சர்வாதிகாரி பொல்பெட் ஆட்சி
தடுமாறியது. பாரிஸ் நகரில் 1989இல் கம்போடியாவிற்கான சமாதான
மாநாடு நடந்தது. கம்போடியாவில் மக்கள் ஆட்சி கொண்டு முயற்சி
மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அது 1993இல் வெற்றியடைந்தது. நாடு கடந்து வாழ்ந்த இளவரர்
சிஹானுக் மறுபடியும் கம்போடியாவின் மன்னனாக ஏற்கப்பட்டாலும்
அவரின் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு
நடந்த தேர்தல் மூலம் 1997இல் ஹன்சென் (Hunsen) என்பவர் பிரதமராக
வந்தார். ஆனால் அவர் முன்னாள் கம்யூனிஸ்ட் இயக்கப் போராளி என்பதால் கடந்த
காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களையும், யுத்தக் குற்றங்களையும்
விசாரிக்கத் தயங்கினார். ஆயினும் கம்போடிய மக்கள் அவரை
ஏற்றுக்கொண்டனர்.
புத்தக நினைவுகளில் இருந்து என் எண்ணங்களை அறுத்துக் கொண்டு
சிந்தித்தேன். உலகில் இருக்கிற ஜப்பான், பூட்டான் ஆகிய பெளத்த
நாடுகளைத்தவிர ஏனைய பர்மா, இலங்கை, கம்போடியா, வியட்நாம், சீனா,
மங்கோலியா, லாவோஸ், தாய்லாந்து, வடகொரியா, தென்கொரியா ஆகிய பெளத்த
நாடுகளில் இருக்கிற மத அரசியல் பொது மக்களைப் பழி வாங்கும் (குறிப்பாக
சிறுபான்மை மக்களை) ஒன்றாக இருப்பதாக வரலாறு கள் தெரிவிக்கின்றன.
மதத்தில் அரசியலும், கட்சியும் கலந்து விட்டால் அதற்கு முதலில்
பலியாவது பொதுமக்கள் தான். இந்தத் தருணங்களில் புத்த தர்மத்தைக்
கடைப்பிடிக்க வேண்டிய பெளத்த மதத்துறவிகள் மத அரசியலைக்
கையிலெடுத்தால் இனங்களுக்கிடையே பகைமையே உருவாகும். நோபல் பரிசு
பெற்ற தலாய்லாமா பர்மாவிலும் இலங்கையிலும் பெளத்த துறவிகளின்
நடவடிக்கைகள் புத்த மதத்திற்கு எதிரானவையென எச்சரித்துள்ளமை
இதனை எண்ணித்தான்.
உள்நாட்டு யுத்தத்தில் இருபது இலட்சம் மக்களைப் பலி கொடுத்து
இரத்தக்கறை படிந்த வரலாறு கம்போடியாவிற்கு இருந்த போதும் அது இன்று
உலக மக்களின் பார்வையில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக
இருப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஆசியாவின்
அதிசயம் என கூறப்படும்
‘அங்கோர்வாட்’
கோயில்களே காரணமாகும்.
அங்கோர்வாட் இல்லையென்றால் கம்போடியா இல்லை வேறு என்ன இங்கே
இருக்கிறது. பார்ப்பதற்கு? என்று கம்போடியர்களே சொல்கிறார்கள்.
அது முற்றிலும் உண்மைதான். மீனாட்சியம்மன் கோவில் இல்லாத மதுரையைக்
கற்பனை செய்ய முடியுமா?
மதுரை என்றால் மீனாட்சி, காஞ்சி என்றால் காமாட்சி. திருச்சி என்றால்
மலைக்கோட்டை, டில்லி என்றால் தாஜ்மஹால் கோலாலம்பூர் என்றால்
இரட்டைக் கோபுரம் என்பன தான் நெஞ்சில் தோன்றும். அதேபோன்று கம்போடியா
என்றால் உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோயில் அங்கோர்வாட் நினைவில்
தோன்றும்.
அந்த அங்கோர்வாட் கோயி லோடு 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு சரித்திரம்
பின்னிப்பிணைந்திருக்கிறது. அதனை முழுமையாக அறிந்து கொள்ள அங்கோர்வாட்
குறித்து எழுதப்பட்ட புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன்.
(தொடரும்…)
மாத்தளைசோமு, அவுஸ்திரேலியா ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக