தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் சிலரும், குறிப்பிடத்தக்க
முயற்சிகள் மூலம் கவனம் பெற்று தமிழ் சினிமாவில் கால் பதித்தவர்களும்
ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் இந்த வருடம் மிகப் பெரிய
ஏமாற்றத்துக்கு உள்ளாக்கினார்கள். நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக்
கலைஞர்கள், நடிகர்கள் என்று பலரின் பங்குள்ள சினிமாவில், வெற்றிக்குப் பல
பங்காளிகள் சேர்ந்துகொண்டாலும் தோல்வியின் முழுப் பொறுப்பும் பல சமயம்
இயக்குநர் மீதே விழுகிறது. பெரிய நட்சத்திரங்களால் வெற்றிக்கு உத்தரவாதம்
அளித்துவிட முடியும் என்றால் தமிழில் ஆண்டுக்கு 15 படங்களாவது பெரும்
வெற்றி அடைய வேண்டும். ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது. காரணம், பெரிய
நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் வைத்து ஒரு படைப்பை
உருவாக்க வேண்டிய இயக்குநரின் பங்களிப்பே வெற்றி, தோல்வியைப் பெரிதும்
தீர்மானிக்கிறது. இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றிய
சில இயக்குநர்களின் தோல்விகளை அலசுவோம்.
தமிழ் சினிமாவின் போக்கையே தீர்மானித்தவரும், தனது சீடர்கள் வழியே ஒரு
திரைப்படப் பாரம்பரியத்தைக் கட்டமைத்தவருமான பாரதிராஜா, சில வருட
இடைவெளிக்குப் பின்னர் ‘அன்னக்கொடி’யுடன் முகம் காட்டினார். தொடக்கம் முதல்
படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பல முறை மாற்றப்பட்டனர்.
முதலில் இசை இளையராஜா என்று சொல்லப்பட்டது. இரண்டு ராஜாக்களும் பாடல்
கம்போஸ் செய்யும் வீடியோகூட இணையதளத்தில் வெளியானது. ஆனால் பல
மாற்றங்களுக்குப் பின்னர் வெளியான படம், போதிய வரவேற்பைப் பெறவில்லை.
தெளிவற்ற திரைக்கதை மற்றும் திறமையற்ற நடிகர்களால் படம் ரசிகர்களின்
கவனத்தை ஈர்க்கத் தவறிவிட்டது.
ஆண்மையற்ற வில்லனுக்கு மனைவியாகும் நாயகி, அவள் மீதான மாமனாரின் காமம்
போன்ற அசாதாரணமான விஷயங்களை படத்தில் அவர் கையாண்டிருந்தார். எதை
வேண்டுமானாலும் கையாளலாம். ஆனால் குறைந்தபட்ச நம்பகத்தன்மையும்
நேர்த்தியும் இருக்க வேண்டும்; அல்லது சுவாரஸ்யமாகவாவது இருக்க வேண்டும்.
எதுவுமே இல்லையென்றால், யாருக்குமே பிடிக்காது. இதுதான் அன்னக்கொடிக்கு
நேர்ந்தது. நாயகனின் விரலை நாயகி சுவைக்கும் காட்சியை குளோஸ் அப்பில்
காட்டினால், அது ரசனையான காட்சியாகக் கொண்டாடப்படும் என்று இயக்குநர்
நினைத்திருக்கலாம். நாயகியின் உதடுகளை மட்டும் திரையில் காட்டுவது, அவரது
திறந்த முதுகைக் காட்டுவது போன்ற காட்சிகளும் யாரையும் கவரவில்லை. ஒரு
காட்சிகூட அழகியல் ரீதியாகவோ பொழுதுபோக்கு சார்ந்தோ தேறவில்லை.
அன்னக்கொடியில் ரசனை, புதுமை, புதிய அம்சங்கள், சுவாரஸ்யம் என எதுவும்
இல்லை.
இணையத்தில் ஒரு விமர்சகர் எழுதினார் “ஒரு காவியத்துக்குண்டான அனைத்து
தகுதிகளும் ‘அன்னக்கொடி’ படத்துக்கு உள்ளது. காவியம் படைத்தவுடன் கலைஞன்
ஓய்வெடுக்க வேண்டும். பாரதிராஜாவுக்குத் தேவை அதுதான்!”.
முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் மணி ரத்னம் இயக்கிய
‘கடல்’ ரசிகர்களைப் பெரும் சலிப்புக்குள்ளாக்கியது. தமிழ் சினிமாவின்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்திய மணி,
அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றி பெறலாம் என்று நினைத்துவிட்டார்
போலும். மேம்போக்கான கதை, திரைக்கதையில் நேர்த்தியின்மை, கதையின்
தன்மைக்குத் தொடர்பில்லாத நடிகர்கள் தேர்வு, பொருத்தமற்ற பாடல்கள்,
குறுக்கும் நெடுக்கும் துணை நடிகர்கள் நடந்து செல்ல தாவித்தாவி ஆடும் குழு
நடனம் போன்றவை ‘கடல்’ படத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணங்கள்.
’காட்ஃபாதர்’ படத்தின் தழுவல் என்றாலும் தமிழின் மைல் கல் படைப்பான
‘நாயகன்’ படத்தைத் தந்த மணி ரத்னம் அடுத்த இருபது வருடங்களில் அடைந்திருக்க
வேண்டிய உயரம் வேறு. ஆனால், தனது பலம் என்ன என்பதை அறியாத காரணத்தால்
அவரது தேக்க நிலை தவிர்க்க முடியாததானது. ‘அலைபாயுதே’ படம் வரை அவர்
தக்கவைத்திருந்த கதை சொல்லும் திறன் வற்றிவிட்டதோ என்ற எண்ணம்
ரசிகர்களுக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது. அதை ‘கடல்’ உறுதியாக
நிரூபித்தது.
கடல் படத்தின் கதை ஜெயமோகன். ஒரு நாவலாகப் படிக்கும்போது ஆழமான அதிர்வுகளை
ஏற்படுத்தக்கூடிய கதை இது. உளவியல் நுட்பங்கள் கூடிய இந்தக் கதையை வெகுஜன
ரசனைக்கேற்ற படமாக மாற்றுவது பெரிய சவால். அந்தச் சவாலில் மணி
வெற்றிபெறவில்லை.
‘மரியான்’ படத்தை இயக்கிய பரத்பாலா பாரதிராஜா, மணிரத்னம் போன்ற புகழ்பெற்ற,
அனுபவம் மிகுந்த இயக்குநர் அல்ல. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானின் ‘வந்தே மாதரம்’
பாடலை அவர் படமாக்கிய விதமும் விளம்பரத் துறையில் அவர் செய்த சாதனைகளும்
‘மரியான்’ படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இசை ரஹ்மான், நாயகன்
தனுஷ் ஆகிய அம்சங்கள் அந்த எதிர்பார்ப்பைக் கூட்டின. ஆனால் புதுமை அற்ற
கதை, தெளிவு அற்ற திரைக்கதை ஆகியவற்றால் படம் தோல்வியடைந்தது. அரசியல்
பிரச்சினைகள் காரணமாக நாயகன் கடத்தப்படும் ‘ரோஜா’ பாணிக் கதையை, எப்படிக்
கையாள்வது என்று தெரியாமல் ரசிகர்களைச் சோர்வடைய வைத்தார் பரத்பாலா. மிகச்
சிறந்த ஒளிப்பதிவு, தனுஷ், பார்வதியின் நடிப்பு ஆகியவை படத்தின் பலம்
என்றாலும் வழக்கமான நாயக ஆராதனை, வழக்கமான வில்லன் போன்றவை படத்தின் மிகப்
பெரிய பலவீனங்கள். ரஹ்மானின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் இசை மீனவ
கிராமத்தின் வாசனையைப் பிரதிபலிக்கவில்லை.
கிராமிய அழகியலை அதன் வன்முறையுடன் சேர்த்து யதார்த்தமாகக் கையாண்ட படமான
‘பருத்தி வீரன்’ தந்த மாபெரும் வெற்றியின் நிழலில் நீண்ட காலம்
ஓய்வெடுத்ததன் விளைவாகவோ என்னவோ, அமீரின் படைப்புத் திறனில் தொய்வு
ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. இது ‘ஆதி பகவன்’ படத்தில் அப்பட்டமாகத்
தெரிந்தது. போதைப் பழக்கம், அதனால் விளையும் கொலையின் பின்னணியில் ‘ராம்’
படத்தை சிறப்பாக இயக்கியிருந்த அமீர், இரட்டை வேடம், ஆக்ரோஷமான சண்டைகள்
என்ற கதைப் பின்னணியில் இயக்கியிருந்த இப்படம் பெரும் தோல்வியைச்
சந்தித்தது. படம் வெளியாவதில் இருந்த சிக்கலைவிட கதையில் இருந்த
சிக்கல்தான் படத்தை பாதித்தது. திரைக்கதையும் பலவீனமானதாக இருந்தது.
அமீரின் முந்தைய படங்களில் கைகொடுத்த யுவன் ஷங்கர் ராஜாவும் இப்படத்தில்
ஏமாற்றினார். ஜெயம் ரவியின் உழைப்பும் நீத்து சந்திராவின் நடிப்பும்
வீணாயின.
காதல், சுய இரக்கம், இளம் பிராயத்தில் சந்தித்த வன்முறைகளால் வாழ்வு
அடையும் கோர முகம், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை என்று அதிகம்
பயணிக்காத பாதையில் தமிழ் சினிமாவை அழைத்துச் சென்ற செல்வராகவனும்
‘இரண்டாம் உலகம்’ மூலம் இந்த ஆண்டு பெரிய ஏமாற்றம் தந்தார். ஒரே நேரத்தில்
இயங்கும் வெவ்வேறு உலகங்களைக் கதைக் களமாகத் தேர்வு செய்ததில் நம்பிக்கை
தந்த செல்வராகவன், அதைப் படமாக்கிய விதத்தில் தந்தது சோர்வைத்தான். இந்திய
சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இருந்துவரும் ஃபாண்டஸி என்ற அம்சத்தைக்
கையாள்வதில், தொழில்நுட்பத்தின் மேன்மை சாத்தியப்பட்டுள்ள இக்காலத்திலும்
நம்மவர்கள் தடுமாறுகின்றனர் என்பதற்கு உதாரணம் இப்படம். சாகசப் பயணமா, ஒரு
இனத்தின் உயிர்ப் போராட்டமா என்ற தடுமாற்றம் நிறைந்த படமாக இருந்தாலும்
‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பல்வேறு நுட்பங்களைக் கொண்டிருந்தது. ஆனால்
இரண்டாம் உலகம் தட்டையாக அமைந்து சலிப்பூட்டியது.
பாரதிராஜாவும் மணி ரத்னமும் தங்கள் திரை வாழ்வில் சாதித்தவை ஏராளம்
என்பதால் புதிய உடைப்புகளை அவர்களிடம் ரசிகர்கள் இப்போது
எதிர்பார்க்கவில்லை. கதை சொல்லலில் முதிர்ச்சியும் நேர்த்தியும் கொண்ட
நிறைவான படங்களையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இளைஞர்களான அமீரிடமும்
செல்வராகவனிடமும் புதிது புதிதான களங்களையும் அணுகுமுறைகளையும்
எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் படைப்பூக்கம் குறையாமல்
பார்த்துக்கொள்வதுடன், அசலான வாழ்விலிருந்து தங்கள் கதைகளைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். அப்போதுதான் அவர்களால் மீண்டும் கம்பீரமாக எழுந்து நிற்க
முடியும். தமிழ்த்திரைக்குப் புதியவரான பரத்பாலா நல்ல திரைக்கதையாசிரியர்
துணையுடன் மீண்டும் முயன்றால் சிறப்பான படைப்பைத் தர முடியும்.
இந்த எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் புத்தாண்டில் நிறைவேறும் என்று நம்புவோம். tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக