கம்போடிய அரசுகளுக்கு எப்போதும் சுமத்திராவில் ஆட்சி செய்த ஸ்ரீ
விஜயா அரசாலும், ஜாவாவில் ஆட்சி செய்த சைலேந்திரர்களாலும் ஆபத்து
இருந்து கொண்டே இருந்தது. சைலேந்திரர்கள் இந்து மன்னர்களாக
இருந்த போதும் ஆட்சியை விஸ்தரிக்கும் நோக்கில்
கம்போடியாவிற்குள் புகுந்து மன்னனைக் கொன்று ஆட்சியைக்கைப்பற்றி
இரண்டாம் ஜெயவர்மனைச் சிறை பிடித்து ஜாவாவிற்கு கொண்டு போனார்கள்.
ஆனால் அவன் எப்படியோ ஜாவா சிறையில் இருந்து தப்பி கடல் மார்க்கமாக
கம்போடியா வந்தான். பிறகு சைலேந்திரர்களைப் பழிவாங்கும் எண்ணத்தோடு
சிதறிக்கிடந்த வீரர்களைத் திரட்டி கெமர் ராச்சியத்தைக்
கட்டியெழுப்பி 790 இல் ஆட்சிக்கு வந்தான். ஜாவா சிறையில் இருந்து
தப்பி வந்ததனால் இவன் செல்வாக்கு மக்களிடையே பரவியது.
இந்தோனேஷியாவின் சைலேந்திரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த
பகுதிகளை மீட்டு சுதந்திரமான கெமர் பேரரசை வலுவாக்கினான்.
மன்னர்களே கடவுள் என்ற « இறையரசன் » God king எனும்
மதக்கோட்பாடுகளை மக்களிடையே பரப்பினான்.
தலைநகரத்தை முதலில்
‘இந்திரபுரா’
என்ற இடத்திலும் பிறகு
‘ஹர்தராலயா’
என்ற இடத்திலும் கடைசியாக மகேந்திரபர்வத மலையில் அமைந்த
‘மகேந்திரபுர’ என்ற இடத்திலும் அமைத்தான். ஆனால் காலப்போக்கில்
ஹர்த்ராலயாவிற்குத் தலைநகரத்தை மீண்டும் கொண்டு போய் 45 ஆண்டுகள்
ஆட்சி செய்தான்.
இந்த 45 ஆண்டிற்குள் கெமர் ராச்சியத்தை வலுவான
பேரரசாக்கியதோடு கெமர் பேரரசின் கட்டடக்கலையைத் தொடங்கி
வைத்தது போல் குடீஸ்வரா (Kutisvara) என்ற கோயிலைக் கட்டினான்.
இக்கோவிலில் சிவா, விஷ்ணு, பிரமா ஆகிய உருவச் சிலைகள் இருந்தன.
அது சிறிய கோயிலாக இருந்த போதும் அதுதான் கெமர் பேரரசின் மாபெரும்
கோயில்கள் கட்ட தொடக்கமாக அமைந்தது. 45 ஆண்டுகள் கெமர் பேரரசை
வலுவானதாக்கி கடைசிக்காலத்தில் பரமேஸ்வரா என்ற பெயரோடு மறைந்தான்
இண்டாம் ஜெயவர்மன்.
இரண்டாம் ஜெயவர்மனுக்கு பிறகு மூன்றாவது ஜெயவர்மன் (835–-877
முதலாவது இந்திரவர்மன் 877-–886) முதலாவது யசோவர்மன் (889–-915)
முதலாவது ஹர்ஸவர்மன் (915–-923) இரண்டாம் இஷானவர்மன் (923–-928)
நாலாவது ஜெயவர்மன் (928-–941) இரண்டாவது ஹர்ஸவர்மன் (941-–944)
ராஜேந்திர வர்மன் (944–-968) ஐந்தாவது ஜெயவர்மன் (968–-1000)
முதலாவது உதயாதித்தியவர்மன் (1001-–1002) ஜெயவீரவர்மன்
(1002–-1010) என்று அடுத்தடுத்து கெமர் பேரரசைத் தொடர்ந்து ஆண்டு
வந்தார்கள்.
இவர்களில் முதலாவது இந்திரவர்மன், முதலாவது யசோவர்மன்,
ராஜேந்திரவர்மன் ஆகிய மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்கள் ஒன்றிரண்டு
கோயில்களை மட்டுமே கட்டினார்கள். இவர்களில் முதலாவது
இந்திரவர்மன் இந்திரடடகா (Indra Taka) பகுதியில் ‘பகொங்’ என்ற
பெயரில் முதலாவது மலைக் கோயிலைக் கட்டி அதில் கெமர் பேரரசின்
மன்னர்களின் விபரத்தையும் அவர்கள் கட்டிய கோயில்களின் விபரத்தையும்
ஆட்சியையும் பதிவு செய்தான்.
இவனுக்குப் பின் வந்த மன்னர்களும் இவனைப்பின்பற்றி தங்கள் ஆட்சி
குறித்து பதிவு செய்தனர். அநேகமாக இந்தப் பதிவுகள் சமஸ்கிருதத்திலும்
பாளியிலும், கெமர் மொழியிலும் இருந்தன. முதலாவது
இந்திரவர்மனுக்குப் பிறகு முதலாவது யசோவர்மன் எட்டு இந்து
கோயில்களைக் கட்டினான்.
அவற்றில் முக்கியமானது
‘நொம் பெகங்’
(Khnom Bakeng) என்ற மலைக்கோயில், மன்னனின் ஆலயமான இந்தக்கோயிலை
‘அங்கோர் கோயில்’
கட்டுவதற்கு முன்னர் கட்டியதால் முதலாவது அங்கோர் என்று அழைத்திருக்கிறார்கள்.
ஒளியின் கடவுளான சூரியனுக்காகக் கட்டப்பட்டது என்பதை உறுதி
செய்வது போல் இந்த மலைக் கோயிலில் சூரிய உதயத்தையும் மறைவையும் கண்டு
மகிழலாம் அங்கிருந்து, சூரிய ஒளியில் இப்போது அங்கோர் வாட்டைக்
காணலாம். ஆனால் அது கட்டியபோது அங்கோர் வாட் கட்டப்படவில்லை.
முதலாவது இந்திரவர்மனுக்குப் பிறகு வந்த முதலாவது யசோவர்மன்
எட்டு இந்து கோயில்களைக் கட்டி வைத்தான். தந்தை இந்திரவர்மன்
விட்டுப்போன கோயில்களையும் கட்டி முடித்தான். ஆனால் அவனுடைய
சகோதரனால் ஏற்பட்ட தகராறில் தனது தலைநகரை அங்கோர் என்ற
இடத்திற்குக் கொண்டு போனான். அங்கு (Baheng) பாக்ஹெங் என்ற மலையில்
‘யசோத புர
’ புதிய தலைநகரை உருவாக்கினான்.
ஜெயவீரவர்மனுக்குப் பிறகு முதலாவது சூரியவர்மன் (1002–1049)
ஆட்சிக்கு வந்தான். ஆனால் 9 வருடங்கள் ஜெயவீரவர்மனுக்கும் முதலாம்
சூரியவர்மனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் சகோதர யுத்தம் நடந்தது.
அதில் வெற்றி பெற்றது முதலாம் சூரியவர்மன். அவன் வெற்றி பெற்றது
சரியானது என அங்கோர் சரித்திரம் சொல்கிறது. அவன் உள்நாட்டுப்
பாதுகாப்பைப் பெருக்கி, மிகப்பெரிய வலுவான படைகளை உருவாக்கினான்.
பிறகு கெமர் பேரரசிற்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கும். தாய்
இருக்கும் தாய்லாந்தின் வடபகுதியையும் லாவோ என்ற அரசையும் லாவோஸ்
நாட்டின் தென்பகுதியையும் கைப்பற்றி சயாம் வளைகுடா (இன்று
தாய்லாந்து வளைகுடா) வில் தனது ஆதிக்கத்தை நிறுவினான்.
14 ஹெக்டேயர் பரப்பில் அரச மாளிகையை கட்டுவித்து பிராந்தியத்தில்
புத்த மதம் செல்வாக்காய் இருந்ததால், இந்து பிராமணர்களை தன் பக்கம்
வைத்திருந்த போதும் புத்தத்துறவிகளோடு தொடர்பும் வைத்திருந்தான்.
எட்டு கிலோ மீட்டர் சுற்றளவில் செயற்கையாக குளத்தைக் கட்டினான்.
இந்தக் குளத்தின் நடுவில் ஒரு விஷ்ணு கோயிலைக்கட்டுவதற்காக ஒரு
செயற்கை குளந்தை உருவாக்கினான். இந்தக்குளம் குறித்து ஒரு கர்ண
பரம்பரைக் கதை உண்டு.
ஒரு நாள் இந்தக் குளத்தில் உள்ள முதலையொன்று மன்னரின் சிறிய மகளைப்
பிடித்து விழுங்கியது. ஆனால் அதைக் கண்ட அரசின் பாதுகாவலர்கள் அந்த
முதலையைப் பிடித்துக்கொன்று அதன் வயிற்றில் இருந்து அந்த இளவரசியை
உயிரோடு மீட்டனராம். அந்தக் குளம் இப்போதும் மக்களின் பயன்பாட்டில்
உள்ளது. பெரியகுளம் என்பதால் நீரில் இறங்கி மிதக்கும் விமானங்கள்
இப்போதும் இறங்குகின்றன. இளவரசன் சிஹானுக் காலத்தில் அவருடைய
வெளிநாட்டு பயணிகள் கடல் விமானத்தில் வந்து இறங்கியிருக்கின்றனர்.
முதலாவது சூரியவர்மனுக்குப் பிறகு இரண்டாவது உதயாதித்தவர்மன்
(1050–-1066) ஆட்சிக்கு வந்து பாபூன் (Bapuon) என்ற பெயரில் சிவனுக்கு
ஒரு கோயிலைக்கட்டினான். அதன் வடக்கு கோபுரம் தங்கத்தாலும் அதனை விட
உயரமாக இன்னொரு கோபுரத்தை வெண்கலத்திலும் கட்டியதாக
சீனத்தூதுவர் Zhoudagun என்பவர் 13 ஆம் நூற்றாண்டில் தெரிவித்தார்.
இந்துக்கோயில் ஐந்தடுக்கில் பிரமிட் பாணியில் உருவானது. மேற்கு
கோபுரச் சுவர்களில் ராமாயணம், மகாபாரதத்தின் முக்கிய காட்சிகள்,
சிவன் அர்சுனனுக்கு வில் அம்பு கொடுக்கும் காட்சி என்பன தத்ரூபமாக
செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரச் சுவர்களில் ராமன் அயோத்தி
திரும்புதல், பீஸ்மரின் மரணம் என்பன செதுக்கப்பட்டுள்ளன.
தென் பகுதி கோபுரச் சுவர்களில் கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு, கம்ஷன்
வதம் செய்தல் என்பன மிக அழகாகத் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் செதுக்க நூற்றுக்கணக்கான சிற்பிகள் மாதக்கணக்கில்
வேலை செய்திருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தமிழ் நாட்டிலிருந்து
போயிருக்கவேண்டும். ஆனால் இன்று அந்தக் கோயிலின் பல பாகங்கள் சிதைந்து
கிடக்கின்றன. அவற்றைப் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இரண்டாம் உதயாதித்தவர்மனுக்கு பிறகு மூன்றாவது ஹர்சவர்மன்
(1066–1080) ஆறாவது ஜெயவர்மன் (1080–1107) தரணீந்திரவர்மன்
(1107-–1112) ஆகியோர் கோயில்கள் எதுவும் கட்டாது இருக்கிற கோயில்களைப்
பராமரித்து ஆட்சியை சிதையாது காத்து வந்தனர்.
ஆனால் இவர்களுக்குப் பிறகு அவர்கள் வாரிசுகளுக்கு ஆட்சி போதாமல் வேறு
ஒருவர் கைக்குச் சென்றது. அரசு என்றாலும், இன்றைய அரசாங்கம் என்றாலும்,
கட்சி என்றாலும், கழகம் என்றாலும் பதவியைப் பறிக்கும் சதி நடந்து கொண்டே
இருக்கும் என்பதை எல்லாம் நாட்டு வரலாறுகளும் சொல்கின்றன. இதற்கு அங்கோர்
பேரரசு மட்டும் விதி விலக்கா? என்ன?
ஆறாவது ஜெயவர்மனும், தரணீந்திரவர்மனும் சகோதரர்களாக இருந்த
போதும் அவர்கள் வாரிசுக்கு ஆட்சி போக முடியாமல் திடீரென்று சதியொன்றை
செய்து மருமகன் முறையான இரண்டாம் சூரியவர்மன் ஆட்சிக்கு வந்தான். அவன்
வந்த விதத்தில் குற்றம் இருந்த போதும் குற்றமெல்லாம் மறைந்து போகக்கூடிய
மாபெரும் சாதனையை இன்றும் உலமே வியந்து பார்க்கக்கூடிய ஒன்றைச் செய்து
காட்டினான்.
(தொடரும்…)
மாத்தளை சோமு, அவுஸ்திரேலியா ilakkiyainfo.com
மாத்தளை சோமு, அவுஸ்திரேலியா ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக