புதன், 7 நவம்பர், 2012

நான் சிறையில் இருப்பதையே சிலர் விரும்புகின்றனர்: வீரபாண்டி ஆறுமுகம்

சேலம்:""சிலர் நான் உள்ளே இருப்பதையே விரும்புகின்றனர், அவர்களெல்லாம் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் இல்லை,'' என, தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசினார்.சேலம் மாவட்ட, தி.மு.க., சார்பு அணிகளைச் சேர்ந்த, புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்து பேசியதாவது:
தலைமை அறிவிப்பின்படி, புதிய அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என்னுடைய உடல் நிலை எப்படி உள்ளது என்பதை பார்ப்பதற்காகவே, இங்கு கட்சியினர் பலர் திரண்டு வந்துள்ளனர்.திருச்சி, கோவை, சென்னை, வேலூர் என, தடுப்புக் காவல் சட்டத்தில் என்னை அலைக்கழித்தபோதும், பிற மாவட்டங்களில் இருந்து, தி.மு.க., தொண்டர்கள் நேரில் வந்து பார்த்தனர். மற்ற மாவட்டங்களை விட, சேலம் மாவட்டத்தில் தான், தி.மு.க.,வினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்படுகிறது. http://www.dinamalar.com/
கொங்கணாபுரம் பரமசிவம், சுரேஷ்குமார், ஜிம்ராமு, ராஜா, நான் உள்பட பலர் மீது வழக்கு போடப்பட்டது. அவற்றை துச்சமாக கருதி, கட்சி தான் முக்கியம் என இருந்தோம். அதன் விளைவாக, சென்னை உயர்நீதிமன்றம் எங்களுக்கு விடுதலை அளித்தது. அ.தி.மு.க., அரசு, எங்கள் மீது எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும், பொதுமக்களின் கண்ணீருக்கு இந்த அரசு பதில் சொல்லியாக வேண்டும்.

கடந்த, 1976ல், என் மகள் திருமணத்தின்போது, என்னை கைது செய்து, சேலம், மதுரை சிறையில் அடைத்தனர். ஒன்றரை ஆண்டுகள் உள்ளே இருந்தேன். தற்போது, 178 நாள் சிறையினுள் இருந்தேன். மிசா காலத்தில் கூட இவ்வளவு நாள் இருந்ததில்லை.சிறையில் இருந்தபோது, நான் உள்ளே இருப்பதையே சிலர் விரும்பினர், அவர்கள் எல்லாம், ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

ராஜேந்திரன் கோஷ்டிக்கு "தடா':சேலத்தில் நடந்த, தி.மு.க., சார்பு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டத்தில், மேடையில் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய மகன் வீரபாண்டி ராஜா, மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம், அவைத்தலைவர் சூடாமணி ஆகியோர் அமர்ந்திருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், மாநகர செயலாளர் கலையமுதன், அவைத்தலைவர் சுபாஷ், முன்னாள் மண்டல தலைவர் மோகன் உள்ளிட்டோர் மேடைக்கு அனுமதிக்கப்படவில்லை.

சார்பு அணி நிர்வாகிகளை, தன்னுடன் நிறுத்தி, வீரபாண்டி ஆறுமுகம் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். ராஜேந்திரன் தரப்புக்கும், மாஜி தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், அங்கு வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் நிலவியது. மண்டபத்தின் முன், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: