சனி, 10 நவம்பர், 2012

150 நபர்களிடம் மட்டும் சோதனை ஏன்? : சுவிஸ் வங்கியில் பதுக்கிய தொழிலதிபர்கள் பட்டியல்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி அனு டான்டன் பெயரில் சுவிஸ் வங்கியில் உள்ள ரூ.125 கோடி பணம் யாருடையது என அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது போல், இந்தியாவில் யார், யார் என்ன முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார் ஊழலுக்கு எதிராக போராடி வரும் அரவிந்த் கேஜ்ரிவால். மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் அறக்கட்டளை முறைகேடுகளை சமீபத்தில் வெளியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கி, இந்தியாவில் துணிச்சலாக ஹவாலா பணபரிமாற்றம் செய்வதையும், அந்த வங்கியின் வாடிக்கையாளர் பட்டியலில் முகேஷ் அம்பானி, காங்கிரஸ் எம்.பி அனு டான்டன் ஆகியோர் உள்ளனர் என்ற தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கேஜ்ரிவால் கூறியதாவது:கடந்த 2006ம் ஆண்டு கணக்குப்படி ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் 700 பேரின் பட்டியல், மத்திய அரசிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொடுக்கப்பட்டது. இவர்கள் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள மொத்த தொகை ரூ.6 ஆயிரம் கோடி. இது குறித்த தகவலை நாடாளுமன்றத்தில் அறிவித்த அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தப் பட்டியலில் எம்.பி.க்கள் யாரும் இல்லை என கூறினார்.

ஆனால், எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி, காங்கிரஸ் பெண் எம்.பி அனு டான்டனுக்கு சுவிஸ் வங்கியில் ரூ.125 கோடி பணம் உள்ளது. இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். அனு டான்டனின் கணவர் சந்தீப், வருமான வரித்துறை அதிகாரியாக இருந்தபோது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தினார். பின்னர் சந்தீப், ரிலையன்ஸ் நிறுவனத்திலேயே வேலைக்கு சேர்ந்து பின் இறந்து விட்டார். அனு டான்டன் பெரில் உள்ள பணம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பணமா அல்லது காங்கிரஸ் கட்சியின் பணமா அல்லது ராகுல் காந்தியின் பணமா?சுவிஸ் வங்கி கொடுத்த பட்டியலில் முகேஸ் அம்பானியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதனால் அவர் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திந்து ரிலையன்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்த வேண்டாம் எனவும், செலுத்த வேண்டிய வரியை செலுத்துவதாகவும் கூறினார். சுவிஸ் வங்கி கொடுத்த 700 பேர் பட்டியலில் முகேஸ் அம்பானி, ஜெட் ஏர்வேஸ் உரிமையா ளர் நரேஷ் கோயல் போன்ற பெரும்புள்ளிகளை எல்லாம் விட்டு விட்டு, வெறும் 150 நபர்களிடம் மட்டுமே சோதனை நடத்தியது ஏன் என அரசு விளக்க வேண்டும். இவ்வாறு கேஜ்ரிவால் கூறியுள்ளார் http://www.dinakaran.com/

கருத்துகள் இல்லை: