வெள்ளி, 9 நவம்பர், 2012

மல்லையாவின் கம்பெனியை வாங்குகிறது ஜானி வாக்கர் விஸ்கி

மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை உலகனின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான இங்கிலாந்தின் டியாகோ நிறுவனம் விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் மல்லையா
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் பெரும் நட்டத்தை சந்தித்து உரிமத்தை தற்காலிகமாக இழந்திருக்கும் விஜய்மல்லையாவுக்கு அவரது மதுபான நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் கடன் கொடுத்து மீண்டும் கிங்பிஷர் நிறுவனத்தை இயக்க வைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. விஜய் மல்லையாவின் நிறுவனமானது பேக்பைப்பர், ராயல் சேலஞ்ச், சிக்நேச்சர் போன்ற மதுபானங்களை ஆண்டுக்கு 9 ஆயிரம் லிட்டர் என்ற அளவில் தயாரிக்கிறது. இந்நிலையில் உலகின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான டியாகோ, மல்லையாவின் நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

டியாகோ
புகழ்பெற்ற ஜானி வாக்கர் விஸ்கியை தயாரிக்கும் நிறுவனம்தான் டியாகோ. இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பே மல்லையா நிறுவன பங்குகளை வாங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விவகாரத்தில் அப்படியே அமுங்கிப் போய்கிடந்தது. இந்நிலையில்தான் இரண்டு தரப்பும் மீண்டும் பேச்சுகளை முனைப்புடன் தொடங்கி முடியும் நிலையில் இருக்கிறது. அனேகமாக 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்குகளை டியாகோ நிறுவனம் வாங்கக் கூடும்.
டியாகோ நிறுவனத்தின் chief operating officer ஆக இருப்பவர் இந்தியரான இவான் மென்ஜெஸ். இவர்தான் டியாகோ நிறுவனத்தின் அடுத்த சி.ஈ.ஓ.வாக பொறுப்பேற்பார் என்ற நிலையில் இப்பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பங்குகள் கைமாறினாலும் விஜய் மல்லையாவே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவராக நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
பங்குச்சந்தையில் ஏற்றம்
இந்தத் தகவல்கள் வெளியான நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன பங்குகள் மதிப்பு 5% விழுக்காடு அதிகரித்தது

கருத்துகள் இல்லை: