கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் திருக்கோவிலில் சித்திரை விழா ஏப்ரல் 17ம் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. இன்று முக்கிய நிகழ்ச்சியான அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். நாளை தேரோட்டம் நடைபெறவுள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான அரவாணிகள் கூவாகத்தில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மாவட்ட அரவாணிகள் நலச் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் 2012 அழகிப் போட்டி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சம்பத் போட்டியைத் தொடங்கி வைத்தார். மாநில சமூக நல வாரிய தலைவி நடிகை சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வினாடி விடைப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது. மாலையில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, பெங்களூர், மதுரை, மும்பை, செகந்திராபாத் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அரவாணிகள் கலந்து கொண்டு ஒய்யார நடை போட்டனர்.
கவர்ச்சிகரமானது முதல் கண்ணைக் கவரும் பளிச் உடைகள் வரை விதம் விதமான உடைகளில் கலந்து கொண்டு அரவாணி அழகிகள் நடை போட்டு அனைவரையும் அதிசயப்படுத்தினர்.
இறுதிச் சுற்றுக்கு 12 பேர் தகுதி பெற்றனர். இவர்களிடம் எய்ட்ஸ், எச்ஐவி உள்ளிட்டவை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறப்பாக பதிலளித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹரினி மிஸ் கூவாகம் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2வது இடத்தை சென்னை தீபிகாவும், 3வது இடத்தை தர்மபுரியின் சாயாசிங்கும் பெற்றனர்.
டான்ஸ் போட்டியில் மும்பை ரோஜாவுக்கு முதல் இடம் கிடைத்தது. நாகர்கோவில் நிஷா 2வது இடத்தையும், விசாகப்பட்டனம் ஐஸ்வர்யா 3வது இடத்தையும் பிடித்தனர். மிஸ் கூவாகம் ஹரினிக்கு திரைப்பட நடிகை மதுமிதா கிரீடம் அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக