ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

அன்புமணி ராமதாஸ், சி.பி.ஐ.-யிடம் வசமாக சிக்கியது எப்படி?


Viruvirupuபா.ம.க. ‘சின்ன ஐயா’ அன்புமணி ராமதாஸ், சி.பி.ஐ. வலையில் சிக்கியிருக்கிறார். இந்தோர் மெடிகல் காலேஜ் அனுமதி தொடர்பாக டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள சார்ஜ் ஷீட்டில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பட்டியலில் அன்புமணியின் பெயரும் உள்ளது.
போதிய வசதிகள் அற்ற நிலையில் இருந்த கல்லூரிக்கு ‘எப்படியோ’ அனுமதி கொடுத்ததுதான் குற்றச்சாட்டு.
‘சில காரணங்களுக்காக’ இந்த விவகாரம் தமிழக மீடியாக்களில் அடக்கி வாசிக்கப்படுகிறது. ஆ.ராசா மீதோ, கனிமொழி மீதோ சிறியதாக ஒரு விசாரணை என்றாலும் விலாவாரியாக வெளியிட்ட மீடியாக்கள் சில, அன்புமணி விவகாரத்தை ‘சிறிய விஷயமாக’ காட்டுவதற்காக பெட்டிச் செய்தி அளவுக்கே வெளியிட்டுள்ளன.

ஆனால், சிறிய விஷயமல்ல இது. அன்புமணி ராமதாஸை எக்கச்சக்கமாக மாட்டிவைக்கக் கூடிய அளவுக்கு இந்த வழக்கில் சரக்கு உள்ளது என்கிறார்கள்.
சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள சார்ஜ் ஷீட் 36 பக்கங்களால் ஆனது. அன்புமணி ராமதாஸ் உட்பட 10 பேரின்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த 10 பேரில் இருவர் மத்திய அரசு சினியர் உயரதிகாரிகள், இருவர் சஃப்தர்ஜங்க் ஹாஸ்பிடல் டாக்டர்கள்,  மீதி ஐந்து பேரும், சாச்சைக்குரிய இந்தோர் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள்.
அன்புமணி ராமதாஸ், இரு அரசு உயரதிகாரிகள், இரு சஃப்தர்ஜங்க் ஹாஸ்பிடல் டாக்டர்கள் ஆகியோர் மீது செக்ஷன் 120-B (கிரிமினல் கான்ஸ்பிரசி), மற்றும் ஊழல் தடைச் சட்டத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. மற்றைய ஐவருக்கும், போலியான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றுதல் என்ற சற்று லேசான செக்ஷனில் சார்ஜ் ஷீட் உள்ளது.
வழக்குப் பதிவுக்கு முன்னர் சி.பி.ஐ. நன்றாகவே ஹோம்-ஒர்க் செய்துள்ளது என நீதிமன்ற வட்டாரங்களில் கூறுகிறார்கள். பிராசிகியூஷன் தரப்பில் 117 சாட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். 218 ஆவணங்கள் சார்ஜ் ஷீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்திய மெடிகல் கவுன்சிலால் அனுமதி மறுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு, அந்த மறுப்பை மீறி அனுமதி கொடுக்கப்பட்டதற்கு சாலிடான ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. “அமைச்சரும் (அன்புமணி) அவருக்கு கீழிருந்த அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் இணைத்து, தமது பதவியை துஷ்பிரயோகம் செய்து, போதிய வசதிகளற்ற மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியுள்ளனர். பணம், அல்லது வேறு லாபங்களுக்காகவே இந்த அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது” என்கிறது சார்ஜ் ஷீட்.
டில்லி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த வழக்கில் அன்புமணி ராமதாஸ் வசமாகச் சிக்கியுள்ளதாகவே கூறுகிறார்கள். வட நாட்டு மருத்துவக் கல்லூரி விவகாரங்களில் பெரிய அனுபவமற்ற அன்புமணி, இதில் சிக்கல் ஏற்படாது என்று நினைத்து செய்த காரியம் இது என்கிறார்கள்.
தென்னிந்தியாவில், ஒரு மருத்துவக் கல்லூரியின் விவகாரங்களில், மற்றைய மருத்துவக் கல்லூரிகள் தலையிடுவது அபூர்வம். அவரவர் சொந்தமாக தமது காரியங்களை கவனித்துக் கொள்வார்கள்.
ஆனால் வடக்கே நிலைமை அப்படியல்ல. ஒரு கல்லூரி என்ன செய்கிறது, எப்படி அனுமதி பெறுகிறது, யாரைப் பிடித்து காரியத்தை முடித்துக் கொள்கிறது என்று மற்றைய கல்லூரிகள் கண்களில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அதுவும், கிட்டத்தட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் பின்னணியிலும் ‘பெரிய கைகள்’ இருக்கும்.
இப்படியான ‘பெரிய கை’ ஒன்று, இந்தோர் மருத்துவக் கல்லூரியை போட்டுக் கொடுக்க, அனுமதி கொடுத்த நம்ம சின்ன ஐயா, வசமாக சிக்கிக் கொண்டார்!
இதனால், வாங்க வேண்டியதை வாங்கி, செய்ய வேண்டியதை செய்து கொடுக்கும் வட மாநில அரசியல்வாதிகள், மற்றைய கல்லூரிகளுக்கு எதை, எப்படி செய்து கொடுத்தாலும், மருத்துவக் கல்லூரி என்று வரும்போது, உஷாராகி விடுவார்கள். “இந்த நடைமுறை புரியாத தென்னிந்திய அமைச்சர் அன்புமணி, அசட்டுத் தைரியத்தில்  செய்த காரியமே, அவரை சிக்க வைத்திருக்கிறது” என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
சரி, இந்த வழக்கு எதுவரை போகும்?
சி.பி.ஐ. வட்டாரங்களில் விசாரித்தவரை, அன்புமணிக்கு சம்மன் அனுப்புவார்கள் என்று தெரியவருகிறது. தம்மிடம் உள்ள ஆதாரங்கள் சாலிடாக இருப்பதால், விசாரணைக்கு வரும் அன்புமணியை, விசாரணையின் முடிவில் கைது செய்யவும் சந்தர்ப்பம் உள்ளதாக கூறுகிறார்கள்.
அதே நேரத்தில் அன்புமணியை கைது செய்யாமல் இருப்பதற்கான ‘ஏற்பாடுகளை’ செய்வதற்காக டாக்டர் ராமதாஸ் சார்பில் இருவர் டில்லியில் இறங்கி வேலை செய்கிறார்கள். இவர்களில் ஒருவர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. மற்றையவர் நீதித்துறையைச் சேர்ந்தவர். இந்த இருவரில் ஓய்வு பெற்ற அதிகாரி, டில்லியில் சில லாபி வேலைகளை செய்யும் அனுபவசாலி.
பார்க்கலாம், இந்த இருவரும், ‘பெரிய ஐயா’வுமாக சேர்ந்து, சின்ன ஐயாவை காப்பாற்றுகிறார்களா என்பதை!

கருத்துகள் இல்லை: