புதன், 2 மே, 2012

கேலிக்கூத்து கொலை வழக்கில் சமரசம் நீதிமன்றத்துக்கு வெளியே

ஒரு கொலைக் குற்றத்துக்காக நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் காணும் நடைமுறை அரசியல் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற நடவடிக்கைகளையே கேலிக்கூத்தாக்கும் நடைமுறை. இந்த விஷயத்தில் கேரள நீதிமன்றத்தின் தவறான நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.  இத்தாலி நாட்டுக் கொடி தாங்கிய என்ரிகா லெக்ஸி கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் பிப்ரவரி 15-ஆம் தேதி தங்கள் அருகில் வந்த மீனவர்களைக் கடல்கொள்ளையர் என்று கருதி, துப்பாக்கியால் சுட்டதில் இந்திய மீனவர்கள் இருவர் - பிங்கி, ஜெலஸ்டின் - இறந்தனர். இது தொடர்பாக இத்தாலியக் கப்பல் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரை கேரளக் காவல்துறை கைது செய்துள்ளது.  இந்த மீனவர்கள் இருவருடைய குடும்பத்துக்கும் மாநில அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கி இருப்பது மட்டுமல்லாமல், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெலஸ்டின் மனைவி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், பிங்கியின் சகோதரி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் அனுமதித்ததுடன், கப்பல் நிறுவனம் ரூ.3 கோடியை வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  ஒரு கொலை வழக்கில், கொலையுண்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு கோருவது சரியான அணுகுமுறை அல்ல. வழக்கமாக இத்தகைய அணுகுமுறை சாலை விபத்து, தொழிற்கூடம் அல்லது ஆலை விபத்துகள் போன்ற விபத்து மரணங்களில் மட்டுமே சாத்தியமாகும். கொலை வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு, கொலைக்கான காரணம், தூண்டுதல் யாவும் முழுமையாக விசாரித்த பின்னர் அதனடிப்படையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுவதுதான் நடைமுறை.  பாதிப்படைந்த குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதினால், ஒரு தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு நிதியிலிருந்து அல்லது குற்றவாளி நீதிமன்றத்தில் செலுத்தும் தொகையிலிருந்து வழங்கப் பரிந்துரை செய்யலாம். ஒரு கொலை வழக்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் மனுவைக் கேரள நீதிமன்றம் எப்படி, ஏன், எதற்காக ஏற்றுக்கொண்டது என்பது புரியவில்லை.  இந்த முதல் தவறு, இன்னொரு தவறுக்கும் வழி வகுத்தது. இறந்த மீனவர்களின் இரு குடும்பங்களும் இத்தாலி அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தலா ரூ.1 கோடி பெற்றுக்கொண்டு, இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்ள லோக் அதாலத்தை அணுகுவதற்கு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டனர். உயர் நீதிமன்றமும் அதை அனுமதித்தது. இதனால், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்துகொண்டனர். இரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீட்டுக்கான காசோலையும் கொடுக்கப்பட்டது.  இந்த நடவடிக்கையைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருப்பதுடன், இது சட்டத்துக்கு விரோதமானது, இது செல்லாது என்று கூறியுள்ளது. கேரள நீதிமன்றத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.  இந் நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாம் பாராட்டியாக வேண்டும். பிரபல ஓட்டல் உரிமையாளர் ஒரு கொலை வழக்கில் கைதாகி, வழக்கு நடந்துகொண்டிருந்த நிலையில், கொலையானவரின் குடும்பத்துடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோரியபோது, நீதிமன்றம் மறுத்தது. கொலை வழக்கைப் பொருத்தவரை நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். சமரசங்களுக்கு இடம் இல்லை என்று தெளிவாக மறுத்துவிட்டது.  கொலைக் குற்றத்துக்கான விசாரணையில் நீதிமன்றத்துக்கு வெளியே சில பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வாயடைக்கும் விவகாரம் அனுமதிக்கப்படுமேயானால், அதன் பிறகு பணம் படைத்தவர்கள் எந்தக் கொலையை வேண்டுமானாலும் செய்துவிட்டு, அதற்கான விலையைக் கொடுத்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முடியும்.  இத்தாலி நாட்டினர் தொடக்கம் முதலே, இந்தச் சம்பவம் இந்திய கடல் எல்லைக்கு வெளியே நடந்திருப்பதால், இதை இந்திய நீதிமன்றம் விசாரிக்க முடியாது, சர்வதேச நீதிமன்றத்தில்தான் விசாரணை நடத்த முடியும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த வழக்கு கேரளக் காவல்துறையின் எல்லைக்குள் வருகிறதா என்ற கேள்வியே இல்லாமல், சம்பவம் நடந்த இடத்தை ஊர்ஜிதம் செய்யாமல், வழக்கைக் கேரள நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதுவே தவறு.  என்ரிகா லெக்ஸி கப்பலை விடுவிக்க வேண்டும் என்ற வழக்கில், அரசுத் தரப்பில் வாதிடும் தலைமைக் கூடுதல் அரசு வழக்குரைஞர் ஹரீன் ராவல், இந்தச் சம்பவம் 15 கடல் மைல்களுக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. ஆகவே, இந்தக் கப்பலை நிறுத்தி வைக்க கேரள அரசுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.  அடுத்தநாளே கேரள முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க கடல்வழிப் போக்குவரத்து அமைச்சகம், இது வழக்குரைஞரின் சொந்தக் கருத்து என்கிறது. நீதிமன்றத்தில் சொந்தக் கருத்தையா சொல்லிக்கொண்டிருப்பார்கள்?  இந்த வழக்கில் இதுவரை நிரூபிக்கப்படாமல் இருக்கும் விஷயம், இந்தச் சம்பவம் கடலில் எங்கே நடந்தது என்பதுதான். சாட்டிலைட் உதவியுடன் ஜிபிஎஸ் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வையுங்கள் என்று கேரள நீதிமன்றம் கேட்டு, பிறகு இந்த வழக்கை எடுத்துக்கொண்டிருந்தால் பல சிக்கல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். கேரள நீதிமன்றம் ஏன் இந்த வழக்கின் அடிப்படைக் கேள்விகளைக் கேட்கத் தயங்கியது? ஏன் இந்தக் கொலை வழக்கை, நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண அனுமதித்தது?  இந்த வழக்கில் அடுத்தடுத்து உச்ச நீதிமன்றம் கேட்கப்போகும் கேள்விகள் இப்படித்தான் இருக்கக்கூடும். இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: