ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

நடராஜன் மீதான புகார் திடீர் வாபஸ் ஏன்...

Karunanidhi
சென்னை: சசிகலா மீது புகார் கூறிய ஜெயலலிதா தனது புகாரினை திரும்ப பெற்றுக்கொண்டு சசிகலாவை மீண்டும் வீட்டிற்குள் அனுமதித்த பிறகு, யாரோ ரங்கராஜன் என்பவர் தஞ்சையில் நடராஜன் மீது கொடுத்த புகாரை வாங்குவதா ஆச்சர்யம்? ஆனால் பொய்ப்புகார் கொடுத்து அதன்மீது காவல்துறை வழக்கு தொடுத்து, நடராஜன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்காமல் இத்தனை நாட்கள் அவர் சிறையில் இருந்திருக்கிறார். இதற்கெல்லாம் யார் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
கேள்வி- கலைவாணர் அரங்கம் புனரமைப்புக்காக இடிக்கப்பட்ட அந்த இடத்தில் விரைவில் கலையரங்கம் கட்டப் போவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
பதில் - புதிய தலைமைச் செயலகத்தில் ஏ பிளாக் கட்டடத்திற்கு ரூ623.99 கோடி அனுமதிக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. 73,363 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் பிளாக் பி கட்டட வளாகம் கட்டுவதற்கு ரூ279 கோடியே 56 லட்சம் அனுமதிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த பணிகள் முடிவடைந்ததும் அதில் தலைமைச் செயலகத்தில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் அங்கு செயல்படும். இந்த இரண்டு கட்டிடங்கள் தவிர ஓமந்தூரார் வளாகத்தில் கலைவாணர் அரங்கத்தை புதிதாக வடிவமைத்து கட்டுவதற்கு ரூ60 கோடியே 86 லட்சமும், புதிய அரசு விருந்தினர் இல்லம் கட்டுவதற்கு ரூ39 கோடியே 68 லட்சமும், பல அடுக்கு கார் நிறுத்துமிடம் கட்டுவதற்கு ரூ26 கோடியே 28 லட்சமும் மற்ற துறைகளின் மூலமாக நிறைவேற்றப்பட்ட பணிகளுக்காக ரூ61 கோடியே 63 லட்சமுமாக மொத்தம் ரூ 1092 கோடியில் பல்வேறு கட்டங்களாக திமுக ஆட்சியில் பணிகள் நடைபெற்றன.

அந்த செய்திகளையெல்லாம் மறைத்துவிட்டு புதிதாக ஒரு கலையரங்கம் கட்டப் போவதை போல முதலமைச்சர் கூறியிருக்கிறார். அந்த அரங்கிற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் வைக்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி -சசிகலாவின் கணவர் நடராஜன் மீது புகார் கொடுத்தவரே திடீரென்று மனுவினை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டாரே?

பதில்- சசிகலா மீது புகார் கூறிய ஜெயலலிதா தனது புகாரினை திரும்ப பெற்றுக்கொண்டு சசிகலாவை மீண்டும் வீட்டிற்குள் அனுமதித்த பிறகு, யாரோ ரங்கராஜன் என்பவர் தஞ்சையில் நடராஜன் மீது கொடுத்த புகாரை வாங்குவதா ஆச்சர்யம்? ஆனால் பொய்ப்புகார் கொடுத்து அதன்மீது காவல்துறை வழக்கு தொடுத்து, நடராஜன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்காமல் இத்தனை நாட்கள் அவர் சிறையில் இருந்திருக்கிறார். இதற்கெல்லாம் யார் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?

இன்னும் சில நாட்களில் நடராஜனும் சசிகலாவும் ராவணனும் மிடாஸ் மோகனும், திவாகரனும் தோட்டத்தில் முதலமைச்சரோடு புகைப்படம் எடுத்து அதையும் தமிழ்நாட்டு ஏடுகள் வெளியிடலாம். அம்மையாரின் ஆட்சியில் மானும் புலியும் ஒரே குளத்தில் தண்ணீர் குடிக்கும் காட்சியை காணுங்கள் என்று அந்த படத்திற்கு தலைப்பு கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

கேள்வி - கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே தர வேண்டுமென்று பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை வைத்திருக்கிறாரே?

பதில் - இந்த பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படும் வரையில் கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தொடர வேண்டாம் என்று முதலில் கடிதம் எழுதினார். அவசரமாக அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அதன் விளைவாகத்தான் அங்கே பணிகள் எட்டு மாதமாக நடைபெறவில்லை. அதற்கு காரணமாக இருந்த ஜெயலலிதா தற்போது அதே பிரதமருக்கு கடிதம் எழுதி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க கேட்டு தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள முயலுகிறார்
கேள்வி - அதிமுக ஆட்சியில் காவலர்கள் சிறப்பாக பணியாற்றுவதாக ஜெயலலிதா பெருமை அடித்துக் கொண்டிருக்கிறாரே?

பதில் - அந்த பேச்சுவந்துள்ள அதே ஏடுகளில் மற்றொரு செய்தியை பார்த்தேன்.

திருவள்ளூர் அருகே ஊராட்சி தலைவர் வீரன் படுகொலை சம்பந்தமாக இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களாம். அம்மையார் பெருமை அடித்து கொண்டது பொருத்தம்தானே.

கேள்வி - துறைமுகம், மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டதே?

பதில் - ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ள மற்றொரு திட்டம் இது. ரூ1,816 கோடி செலவில் இந்த பணி தொடங்கப்பட்டது. பிரதமரே வந்து அடிக்கல் நாட்டினார். அதை முடக்கியுள்ளனர். மத்திய அரசின் செயலாளர் நம் தலைமை செயலாள ருக்கு கடிதம் எழுதினார். நேரிலும் வந்து பேசினார். பலனில்லை. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

கேள்வி - கூட்டுறவு அமைச்சர் பேரவையில் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டாராமே?

பதில் - அமைச்சர்களே கவிஞர்களை அழைத்து வந்து ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அம்மையாரை புகழ்ந்து கவிதை எழுதச் சொல்லி அதைத்தான் கொண்டு போய் படிக்கிறார்களாம். கவிஞர்களுக்கு நல்ல வருமானமாம்.

கேள்வி - புதுக்கோட்டையில் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு ஆளுங்கட்சியினருக்கு இலவச பொருள்கள் வழங்கப்பட்டிருக்கிறதே?

பதில் - தேர்தல் ஆணையம் என ஒன்று இருந்தால் அதுதான் கவனிக்க வேண்டும். தேர்தல் நடைமுறை சட்டத்தினை இன்னும் புதுக்கோட்டையில் நடைமுறைப்படுத்தவே முயற்சிக்கவில்லையாம்.

கேள்வி - முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக்குக்கு தமிழக அரசின் சார்பில் நினைவு மண்டபம் எழுப்ப ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருக்கிறாரே?

பதில்
- வரவேற்க வேண்டிய காரியம். ஆனால் பென்னி குவிக் சிலையை ஏற்கனவே திமுக ஆட்சியில் மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தலைமையில் நானே திறந்து வைத்தேன். அதிலே ஏதாவது குறை சொல்லி அம்மையார் அதை அகற்ற சொல்லாமல் விட்டாரே அதற்காக நன்றி என்று கூறியுள்ளார் கருணாநிதி

கருத்துகள் இல்லை: