வியாழன், 12 ஜனவரி, 2012

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரியும், மத்திய அரசின் தடையை அமல் படுத்தக்கோரியும் விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பான மனுவில், 'மாநில கால்நடைத்துறை செயலாளரின் அனுமதியின் பேரில், ஜல்லிக்கட்டு நடத்த திருச்சி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது, மத்திய அரசின் உத்தரவை மீறுவது மட்டுமின்றி, மாடுகளை கொடுமைப்படுத்தும் செயல். அத்துடன், மனித உயிர் இழப்புகளுக்கும் இது வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்லப்பா பாண்டி வாதிட்டிருந்தார்.
அதேவேளையில், ஜல்லிகட்டை தடை செய்வதில் உறுதியாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் தனித்தனியே விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது.
அதேவேளையில், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முழுமையாக வீடியோ படம் எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த வீடியோ படங்கள், வரும் 20-ம் தேதி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கருத்துகள் இல்லை: