திங்கள், 9 ஜனவரி, 2012

பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்கும்

தமிழர்கள், ஆங்கிலேயர்களின் ரத்தமும், சதையும் கலந்து உருவான முல்லைப் பெரியாறு அணை! 

நூற்றுக்கணக்கான மக்களால் நன்றியுடன் வழிபடப் போகிறார். அப்படிப்பட்ட பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்கும் என்ற செய்தி தென் தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
1841ம் ஆண்டு புனே நகரில் பிறந்த வெள்ளைக்கார இந்தியர்தான் கர்னல் ஜான் பென்னிகுயிக். இங்கிலாந்து ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். சென்னை மாகாண சட்டசபை கவுன்சிலில் உறுப்பினராகவும் இருந்தவர். இந்தியாவின் பல பகுதிகளில் இவர் நீர்ப்பாசனத் திட்டங்களி்ல பணியாற்றியுள்ளார். ஆனால் இவர் ஈடுபட்ட மிக முக்கிய நீர்ப்பாசனத் திட்டம் தான் முல்லைப் பெரியாறு அணைத் திட்டம்.
ஒரு அரசாங்க ஊழியராக இல்லாமல், தனது சொத்துக்களையெல்லாம் விற்கும் அளவுக்கு இந்தத் திட்டத்தை நேசித்து, இறுதி வரை உறுதியுடன் இருந்து கட்டிக் கொடுத்ததுதான் முல்லைப் பெரியாறு அணை

தமிழக பொதுப்பணித்துறையில் இவர் பணியாற்றிய காலம் 6 ஆண்டுகளாகும். இந்த சமயத்தில் முல்லைப் பெரியாறு அணை திட்ட தலைமைப் பொறியாளராக இவர் செயல்பட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைத் திட்டப் பணிகளுக்கு பெரும் பொருட் செலவு தேவைப்பட்ட போது, அதற்கான நிதி கிடைக்காமல் போனபோது அந்தத் திட்டத்தை கைவிடாமல் தானே சொந்தமாக நிதி திரட்டி அதைக் கட்டி முடிக்க முடிவு செய்தார் பென்னிகுயிக்.

இதற்காக தனது நாட்டில் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றார். வீட்டில் இருந்த கட்டிலைக் கூட அவர் விடவில்லை, அதையும் விற்றார். தனது மனைவியின் நகைகளையெல்லாம் விற்றார். அந்தக் காலத்தில் இருந்த பல்வேறு பெரும்பணக்காரர்களிடம் கையேந்தி நிதி சேகரித்தார். தனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத பூமியில், தனக்கு சற்றும் தொடர்பே இல்லாத மக்கள் மத்தியில், தென் தமிழக மக்கள் வறட்சியில் வாடக் கூடாது, அவர்கள் தண்ணீரின்றி தவிக்கக் கூடாது, அவர்களது தாகம் அடங்க வேண்டும், காய்ந்து கருகிப் போன தென் தமிழக வயல்களெல்லாம் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இப்படி மெனக்கெட்டார் பென்னிகுயிக்.

இப்படி வியர்வை சிந்தி நிதி சேகரித்து அதைக் கொண்டு அணையை கட்டி முடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் பென்னிகுயிக்.

அணை கட்டுமானப் பணியின்போது பலர் உயிரிழந்தனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும், காலரா வந்தும் பலர் பலியானார்கள். அவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல பல ஆங்கிலேயர்களும் கூட இருந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட என்ஜீனியர்கள், உயிரிழ்நதுள்ளனர். இவர்களுக்கான கல்லறை கூட இன்றும் அங்கேயே உள்ளது.

நான்கு வருடமாக தனது தந்தையைப் பார்க்க முடியாமல் தவித்த ஒரு வெள்ளைக்கார சிறுமி தனது தாயாருடன் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு வந்தபோது ஒரு பெரிய கல் அந்தச் சிறுமியின் தலை மீது விழுந்து சம்பவ இடத்திலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அந்த சிறுமியின் கல்லறையும் கூட அணைப் பகுதியில்தான் இன்றும் உள்ளது.

இப்படி தமிழர்களின் ரத்தமும், ஆங்கிலேயர்களின் ரத்தமும் கலந்து உருவாகி மாபெரும் தியாகச் சின்னமாக, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் தெய்வமாக மெளனமாக நின்று கொண்டிருக்கிறது முல்லைப் பெரியாறு அணை.

தென் தமிழக மக்களின் வாடிய வயிறுகளையும், சுருண்டு விழுந்து அவர்கள் செத்த பரிதாபத்தையும், கருகிப் போன வயல்களையும் பார்த்து வேதனைப்பட்டு, இந்த அணையை தனது உழைப்பையும், சொத்தையும் கொட்டி உருவாக்கிய பென்னிகுயிக் தென் தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறார். அவரது படங்களை வைத்து தென் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் வணங்கி வருகின்றனர்.

அணை கட்டி முடிக்கப்பட்டவுடன் தனது மனைவியோடு அங்கு சென்று பொங்கிப் பெருகி அணை வழியாக ஓடி வந்த தண்ணீரைப் பார்த்து பென்னிகுயிக் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று செய்திகள் கூறுகின்றன. அந்தக் கண்ணீரில் அணை கட்டி விட்டோம் என்பது மட்டுமல்லாமல், தென் தமிழக மக்களின் வாழ்க்கையைக் காப்பாற்றி விட்டோம் என்ற பெருமிதமும் நிச்சயம் கலந்திருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எங்கிருந்தோ வந்த பென்னிகுயிக் தனக்குச் சற்றும் சம்பந்தமில்லாத, தனது நாடு அடிமைப்படுத்தி வைத்திருந்த மக்களுக்காக இப்படி ஓடாகத் தேய்ந்து உழைத்து அணையைக் கட்டிக் கொடுத்தது இன்று நினைத்தாலும் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

பென்னிகுயிக்கை கெளரவிக்கும் வகையில், அவரது சிலையை தமிழக அரசு மதுரை பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நிறுவியது. 2011ம் ஆண்டு பென்னிகுயிக் குறித்த புத்தகத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் வெளியிட்டார்.

தேனி உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் இன்றும் கூட தங்களது வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முதல் பெயராக பென்னிகுயிக் என்று பெயர் சூட்டுவது பாரம்பரியமாக தொடர்கிறது.

தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின்போது பென்னிகுயிக்குக்கு படையலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பென்னிகுயிக் கோவில்களும் கூட தேனி மாவட்ட கிராமங்களில் ஏராளமாக உள்ளன.

நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு மிகப் பெரிய காரியத்தை செய்த பென்னிகுயிக்குக்கு மணிமண்டபம் கட்ட அரசு முடிவெடுத்தது மிகவும் தாமதமானது ஒன்றுதான் என்றாலும் அதற்கு மிகவும் பொருத்தமானவர், உகந்தவர், உரியவர் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை: