வெள்ளி, 13 ஜனவரி, 2012

3 Idiots நண்பன் ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் பிரமாண்ட ரிலீஸ்

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முதல் படமான நண்பன், பொங்கல் ஸ்பெஷலாக இரு தினங்களுக்கு முன்பே ரிலீசாகியுள்ளது.
பொதுவாக விஜய் படங்களுக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்பை ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே நடக்கவில்லை. விஜய் நடிப்பில் நண்பன் என்று ஒரு வெளியாகுதுப்பா என்ற அளவுக்குதான் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.சத்யராஜ் தவிர வேறு யாரும் இந்தப் படம் இப்படியாக்கும் அப்படியாக்கும் என தம்பட்டம் அடிக்கவில்லை.
காரணம்... இந்தப் படத்தை மக்கள் எப்படி வரவேற்பார்களோ என்ற தயக்கம்தான். இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் பெரும் வெற்றியைக் குவித்தது. வசூலும் பிரமிக்க வைத்தது.
ஆனால் தமிழில் இந்த மாதிரி கதைகள் எப்படி வரவேற்கப்படும் என கணிக்க முடியாத நிலை. அதனால் அமைதி காத்தனர். இதற்கிடையில், 3 இடியட்ஸுக்கு அடுத்து பெரும் வசூல் குவித்த படம் என இந்தியில் கொண்டாடப்பட்ட தபாங் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் வெளியாகி குப்புற கவிழ்ந்துபோனது.
எனவே படம் குறித்து எதுவும் சொல்லாமல், மக்கள் முடிவுக்கே விட்டுவிடலாம் என அமைதியாகிவிட்டது ஷங்கர் அண்ட் கோ.
இந்த நிலையில் படம் இன்று காலை வெளியாகிவிட்டது. உலகமெங்கும் மிகப்பெரிய அளவில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். ஜெமினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமை சன் டிவிக்கு தரப்பட்டிருந்தாலும் அதை வெளியில் சொல்லாமல் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சன் டிவியை எதிர்த்துதான் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் நேற்றே நண்பன் சிறப்புக் காட்சிகள் தொடங்கிவிட்டதால், படம் குறித்து கருத்துகளை பரப்பி வருகின்றனர் பார்த்தவர்கள்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் இந்தப் படம் குறித்து பெரும்பாலும் எதிர்மறையான கருத்துக்களே வெளியாகியுள்ளதால், நண்பன் குழு பெரும் கலக்கத்துக்குள்ளாகியுள்ளது.

படம் சுமார் என்றும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டிய படம் என்றும் கலவையாக கருத்து தெரிவித்துள்ளனர் வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்கள். கதை வழக்கமானது, பாட்டு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை என்பது இன்னும் சிலரது கருத்து.

ஆனால் இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கே புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என விஜய், ஷங்கர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

இன்று மாலைக்குப் பிறகு படத்தின் நிலைமை தெரிந்துவிடும். நாளை காலை தட்ஸ்தமிழில் படத்தின் சிறப்பு விமர்சனத்தை எதிர்பாருங்கள்!

கருத்துகள் இல்லை: