திங்கள், 9 ஜனவரி, 2012

நக்கீரன் கோபால் மீது நெல்லை தொழிலதிபர் திடீர் போலிப் புகார்!

நெல்லை: நக்கீரன் ஆசிரியர் கோபால், தன்னிடம் ரூ. 20 லட்சம் பண மோசடி செய்து விட்டதாக திடீரென நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் புகார் கொடுத்துள்ளார்.போலிப்

நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தி வெளியாகி அதுதொடர்பாக அதிமுகவினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் திடீரென இந்தப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நெல்லை ராஜாஜி நகரை சேர்ந்த ராமன் என்பவர் நெல்லை போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் கொடுத்த புகாரில்,
எனது நண்பர் பாளையை சேர்ந்த டாக்டர் சுப்பிரமணிய பாலு லண்டன் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது லண்டன் போலீசார் பாலியல் குற்றவழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுபற்றிய விவரம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இதனை பார்த்து தெரிந்து கொண்ட நக்கீரன் கோபால், எனது நண்பர் டாக்டர் சுப்பிரமணிய பாலுவை தொடர்பு கொண்டு உங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு செய்தியை நக்கீரன் வார இதழில் வெளியிட உள்ளோம். செய்தி வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டினார். இதனால் பயந்துபோன எனது நண்பர் ரூ.20 லட்சத்தை தர சம்மதித்தார். இதையடுத்து நானும் அவரது தந்தை சுப்பிரமணியும் சேர்ந்து அந்த பணத்தை நக்கீரன் கோபாலிடம் கொண்டு கொடுத்தோம்.
நக்கீரன் கோபால் மிரட்டி ரூ.20 லட்சத்தை வாங்கி மோசடி செய்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளாராம்.

எஸ்.பியிடம் அமைச்சர் கொடுத்த புகார்

இதற்கிடையே, செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. நஜ்முல் கோடாவை சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில்,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால், செய்தியாளர் உமர் அக்தர் மற்றும் அந்த பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பத்திரிகையை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

செருப்புப் போடாமல் அமைச்சராக வலம் வந்த உதயக்குமாரும் புகார்

இதேபோல முதல்வர் ஜெயலலிதா மீது கொண்ட பக்தியால் செருப்பு கூட போடாமல் அமைச்சராக வலம் வந்து அதற்காகவே பதவியையும் இழந்த ஆர்.பி. உதயக்குமார் சாத்தூர் டிஎஸ்பி சின்னையாவை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், இந்திய நாட்டின் வழிகாட்டியுமான தமிழக முதல்வர், தமிழக மக்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து பணியாற்றி வரும் மக்களின் பேராதரவை பெற்ற அம்மா அவர்களின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு 7-ந்தேதி வெளிவந்த நக்கீரன் இதழில் முதல்வர் அம்மாவை பற்றி அவதூறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அந்த வாசகங்களை பார்த்த எனக்கும் எண்ணிலடங்காத சாத்தூர் தொகுதி நிர்வாகிகளும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த மனவேதனையும், மன அமைதியின்மையையும் ஏற்படுத்தி உள்ளது.

தவறான தகவல்களை பொய்யாக பரப்புரை செய்து சமுதாயத்தின் அமைதியையும், சமுதாய நல்லிணக்கத்தையும் சீர்குலைய செய்திட்ட நக்கீரன் கோபால் மீது தக்க நடவடிக்கை எடுத்தும், அந்த வார இதழின் விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியுள்ளார்.

இதேபோல அமைச்சர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு தத்தமது எஸ்.பி. அலுவலகங்களில் புகார் கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: