திங்கள், 9 ஜனவரி, 2012

அண்டை மாநிலத்தில் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அப்துல்கலாம் ஆலோசனை

சென்னை: தமிழக நதிகளை இணைத்து நீர்வழிச் சாலைகள் அமைத்தால், அண்டை மாநிலங்களில் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
சென்னை புத்தக கண்காட்சி விழாவில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், சண்முகம் வரவேற்புரையாற்றினார். கவிஞர் சிற்பி, நாகை முகுந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: எனது பத்தாவது வயதில், 1941 ம் வருடம் என்னுடைய சகோதரர், முஸ்தபாகான் அவருடைய நண்பர், எம்.ஜி.ஆர்.மாணிக்கம் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர்கள், இருவரும் கம்யூனிசம் பற்றி அடிக்கடி விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.
அப்போது, கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. அங்கு, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கும். அங்கு, தான் என்னுடைய வாசிப்புப் பழக்கம் ஆரம்பமானது. குறிப்பாக, காரல்மார்க்ஸ், சுத்தானந்த பாரதியார் பற்றிய புத்தகங்கள் படித்தேன். அப்போது, ஆரம்பித்த வாசிப்புப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தால், கற்பனைத் திறன் அதிகரிக்கும். நல்ல கற்பனைத் திறன்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். சமீபத்தில், இரண்டு புத்தகங்கள் படித்தேன். அவை என்னை வெகுவாக கவர்ந்தன. முதல் புத்தகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பேராசிரியர் தொகுத்த, "உழுதவன் கணக்கு' என்ற புத்தகம். இன்றைய விவசாயம் எவ்வாறு வரையறுக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகிறது.

இயற்கை விவசாயத்தில் தொழில்நுட்ப மாற்றங்களை புகுத்த வேண்டும். துள்ளிய பண்ணைய பயிர் பாதுகாப்பு என்கிற நோக்கோடு, விவசாயத்தை அணுக ஆரம்பித்தால் விவசாயம் செழிக்கும். தனிமனித வருமானமும் பெருகும் என்கிற பல்வேறு நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கும் இப்புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். மற்றொரு புத்தகம், காந்திகிராம பல்கலைக் கழக பேராசிரியர் சோம.ராமசாமி, "செயற்கைக்கோள் பார்வையில் தமிழக நதிகள்' என்ற புத்தகம். செயற்கைக்கோளின் வழியாக தமிழக நதிகளின் வழித் தடங்கள் பார்த்து புதுப்பாதை அமைப்பது குறித்தது. அதில், பல்வேறு அற்புதமான கருத்துக்கள் அமைந்துள்ளன. செயற்கைக்கோளின் வழியாக, தமிழகத்தில் உள்ள நதிகளின் பிறப்பிடம், செல்லும் வழித்தடம், சமவெளியின் அளவு, பாயும் வேகத்தின் அளவு போன்றவற்றை மையமாக வைத்து, நதிகளை இணைத்து நீர்வழிச் சாலைகள் அமைக்க வேண்டும்.

நீர்வழிச் சாலை அமைத்தால் தமிழகத்தில், 100 டி.எம்.சி., தண்ணீரை தேக்க முடியும். இதனால், எப்போதும் வளம் கொழிக்கும். அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு, தமிழக இளைஞர்கள் அவசியம் கை கொடுக்க வேண்டும். மற்ற சக்திகளை தாண்டிலும், இளைஞர்களின் சக்தி நாட்டையே மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தது. இளைஞர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்; புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும்; உறக்கத்தின் போது வருவதல்ல கனவு; நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு; புத்தகம் கனவை வளர்க்கும்; கனவு படைப்பை வளர்க்கும்; படைப்பு சிந்தனையை வளர்க்கும்; சிந்தனை அறிவை வளர்க்கும்; அறிவு வளம் கொடுக்கும்; ஆதலால், அனைவரும் புத்தகம் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; படிக்கிற பழக்கம் அதிகரித்தால் வாழ்வு வளம் பெறும்.இவ்வாறு, அப்துல்கலாம் பேசினார்.

கருத்துகள் இல்லை: