வியாழன், 12 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலையாளிகளில் இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர்


திண்டுக்கல்: தனது வீட்டுக்கு முன்பு நாற்காலியில் பசுபதி பாண்டியன் அமர்ந்திருந்த நிலையிலேயே கொலையானார். அவர் நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியாத அளவுக்கு அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியுள்ளனர் கொலையாளிகள். மிகக் கொடூரமான கொலையாக இதை போலீஸார் வர்ணிக்கின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக தற்போது போலீஸ் பிடியில் நான்கு பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர். பசுபதி பாண்டியனின் வீட்டுக்கு அருகில் இவர் தங்கியிருந்தார். இந்த நால்வருக்கும் கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.திண்டுக்கல் நந்தவனப்பட்டி மக்கள் இன்னும் பசுபதி பாண்டியன் கொலையின் அதிர்ச்சி குறையாமல் உள்ளனர். பசுபதி பாண்டியன் கொல்லப்பட்ட பின்னர் அங்கு வந்து பார்த்த மக்கள் அதிர்ந்து போய் விட்டனராம். அந்த அளவுக்கு கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு எட்டரை மணியளவில்தான் கொலை நடந்துள்ளது. அப்போது தனது வீட்டுக்கு முன்புறம் உள்ள ஒரு காலியிடத்தில் தனது ஆதரவாளர்களோடு பேசிக் கொண்டிருந்தார் பசுபதி பாண்டியன். பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக சென்றுள்ளனர். கடைசியில் தனியாக அமர்ந்திருந்தார் பசுபதி பாண்டியன்.

நாற்காலியில் அமர்ந்தபடி யாரிடமோ செல்போனில் அவர் பேசிக் கொண்டிருந்தபோதுதான் 3 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் அவர் முன்பு வந்து நின்றது. அவர்கள் யார், என்ன என்று சுதாரிப்பதற்குள் சரமாரியாக பசுபதி பாண்டியனை அவர்கள் வெட்டத் தொடங்கினர்.

கழுத்து உள்ளிட்ட இடங்களில் அவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் பசுபதி பாண்டியன் சுதாரித்து எழ முடியாத அளவுக்கு நாற்காலியோடு முடக்கிப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். உடலில் மொத்தம் 13 இடங்களில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டிருந்ததாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கழுத்தில் முதலில் வெட்டியதால் அவர் நிலைகுலைந்து விட்டார் என்றும் அதன் பின்னர் உடல் முழுவதும் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பிணமாகி விட்டார்.

மிகக் கோரமாக நடந்த இந்தக்கொலை தொடர்பாக நான்கு தனிப்படைகளை போலீஸார் அமைத்து தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனர். தற்போது போலீஸ் பிடியில் நான்கு பேர் சிக்கியுள்ளனர். மேலும் கொலையாளிகள் வாடகை சைக்கிளில் வந்து கொலையை நடத்தியதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் 3 பேருமே சட்டை போடவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

தற்போது வாடகை சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் உரிமையாளரைப் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பசுபதி பாண்டியன் வீட்டுக்கு அருகே இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தங்கியிருந்தார். அவர் எதற்காக இங்கு வந்து தங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலை நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவருடன் இருந்த 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நிச்சயம் முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கும் என போலீஸார் நம்புகின்றனர். பல்வேறு கட்டப் பஞ்சாயத்துக்களில் பசுபதி பாண்டியன் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுவதால் அவரால் பாதிக்கப்பட்ட யாரோதான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

ஆனால் கொலையைச் செய்தது பாதிக்கப்பட்டவர்களா அல்லது அவர்களால் ஏவி விடப்பட்ட கூலிப் படையினரா என்பது தெரியவில்லை. போலீஸார் அனைத்துக் கோணத்திலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: