செவ்வாய், 29 மார்ச், 2011

மீன்களுக்குப் பின்னால் மீனவர்கள் எப்போதுமே செல்வார்கள் .ஜனாதிபதி ராஜபக்ஷ

இந்திய அனுசரணையில் ஆயிரம் வீடுகள் நிர்மாணப் பணி ஜூலையில் ஆரம்பமாகும்
- கிளிநொச்சியில் முதல் தொகுதி; ஜனாதிபதி ராஜபக்ஷ
வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக இந்திய ஆதரவுடன் நிர்மாணிக்கப்படவுள்ள முதற்கட்ட வீடமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜூலையில் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு நிருபர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்படும். இதற்கான நிலத்தை நாங்கள் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, மீதி 49 ஆயிரம் வீடுகள் தொடர்பாக அமைச்சரவையின் அங்கீகாரத்தை இங்கு பெற வேண்டியுள்ளதெனவும் விரைவில் அதனைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் சுமார் ஒரு வார காலத்தில் அதனைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக இந்து பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.

சம்பூரில் இந்தியாவின் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்ட அனல்மின் உலை அமைப்பதற்கான முன்னேற்றம் குறைவாகவுள்ளது பற்றி கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் மட்டத்தில் அந்தத் திட்டத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இப்போது சகல தொழில்நுட்ப ரீதியான விபரங்கள் தொடர்பான பணிகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.

இறைமை உத்தரவாதத்தை அதனை வழங்குவதற்குள்ள இலங்கை அரசாங்கத்தின் தயக்கம் தொடர்பான கேள்வி குறித்து தெரிவித்த ஜனாதிபதி, அந்த உத்தரவாதம் ஏற்கனவே

வழங்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் இறைமை உத்தரவாதம் வழங்கப்படுவதற்கு திருத்தம் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபரின் அலுவலகம் இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்தது. ஆனால்,இறைமை உத்தரவாதம் வழங்கப்பட்டால் சட்டம் மீறப்பட்டதாக அமையுமென்ற அபிப்பிராயத்தை சட்ட மா அதிபர் அலுவலகம் கொண்டிருக்கிறது.

சுமார் பத்து நாட்களில் இந்த உலை தொடர்பான சகல விவகாரங்களுக்கும் தீர்வு காணப்பட்டுவிடுமென நான் நினைக்கிறேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பரந்துபட்ட பொருளாதார பங்குடைமை உடன்படிக்கையின் (சீபா)கதி தொடர்பாக கேட்கப்பட்டபோது, உள்ளூர் வர்த்தக சமூகத்திடமிருந்து இந்தியாவுடன் பரந்துபட்ட பொருளாதார பங்குடைமை உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் எதிர்ப்புக் காணப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் இங்குள்ள சிலர் தீங்கான அனுபவங்களை இந்தியாவுடன் கொண்டிருந்தனர்,கொண்டிருக்கின்றனர். அந்த விடயங்கள் மீள இடம்பெறுவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

இந்த ஆட்களைச் சூழ ஆதரவாக சமூகத்தில் பலர் உள்ளனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கருத்தொருமைப்பாட்டைக் கண்டறியும் முயற்சியாக இந்த மக்களுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன், இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பாக கால வரையறை இல்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் மேலதிகமாக மின்சக்தி இருக்கின்ற போதிலும் அணு மின்சக்தியைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான விடயமும் நிராகரிக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்நாட்டின் கூடங்குளத்திலுள்ள இந்திய மின்சக்தி உலை தொடர்பாக ஊடகங்களினதும் சிவில் சமூகத்தினதும் ஒரு சாராரினால் கவலைகள் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் மின்சக்தி உலையை அமைக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுக்கும். அணுசக்தி உலையை நிறுவுவது தொடர்பாக இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்த உலையை அமைக்குமாறு இலங்கை இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கும்.

சர்வதேச கடல் எல்லையைத்தாண்டி இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு பற்றிக் கேட்கப்பட்டபோது, மீன்களுக்குப் பின்னால் மீனவர்கள் எப்போதுமே செல்வார்கள் என்ற நிலைப்பாட்டை தான் எப்போதும் கொண்டிருப்பதாக ஜனாதிபதி கூறினார். நான் மீன்பிடித்துறை அமைச்சராகவிருந்தபோதும் இதனைக் கூறியிருந்தேன். இந்த நிலைப்பாட்டை இப்போது நான் மாற்ற முடியாது என்று அவர் கூறியுள்ளார். முன்னர் வட கடலில் 43 சதவீதமான மீனை வடபகுதி மீனவர்கள் பிடித்து வந்தனர்.

இப்போது அத்தொகை 7 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்பது தொடர்பான வடபகுதி மீனவர்களின் கவலைகள் பற்றிக் குறிப்பிடுகையில், "இந்தியா எமது சிறந்த அயல் நாடாகும்' சிறிய அளவில் ஊடுருவல்கள் பற்றி பிரச்சினை இல்லை.

ஆனால், ஆயிரக்கணக்கான இந்தியப் படகுகள் இலங்கை பக்கத்துக்கு வந்து கிரமமாக மீன்பிடித்தால் அது பிரச்சினையாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்
.

கருத்துகள் இல்லை: