வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மேற்கு வங்கத்திலும் வெடித்தது காங்கிரசின் பிறவி குணம்

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் போட்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.தமிழகத்தை தொடர்ந்து, மேற்கு வங்க காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்விலும், அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திரிணமுல் தலைமையிலான கூட்டணியில், போராடி பெற்ற 65 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.மேலும், 2006ல், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளை தற்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி எடுத்து கொண்டது. இதனாலும், வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தியடைந்த மாநில காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மாநிலத்தின் வடக்கில், பல தொகுதிகளில் சுயேச்சைகளாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வடக்கில் 54 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல், இன்றுடன் முடிவடைகிறது.முராரி தொகுதி, காலம் காலமாக, காங்கிரஸ் வசமிருந்து வருகிறது. இத்தொகுதியை தற்போது, திரிணமுல் கட்சி எடுத்து கொண்டது. இங்கு, கோல்கட்டா ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி நூரி ஆலம் சவுத்ரியை, திரிணமுல் கட்சி நிறுத்தியுள்ளது.இதை எதிர்த்து பிர்பும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மோதகர் உசேன் மகனை, போட்டி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளனர். கடந்த ஊராட்சி தேர்தலில், முராரி தொகுதியின் பல ஊராட்சிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றது.காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்ஜன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா கூறுகையில், "காங்கிரஸ் போட்டியிடும் ஐந்து தொகுதிகளில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரம் செய்ய வரவில்லை' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் மானஸ் புனியா கூறுகையில், "பிர்பும் மாவட்டத்தில் இருந்து தகவல்களை சேகரிக்க, முயற்சித்து வருகிறோம். ஆட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விரட்ட, திரிணமுல் கட்சியுடன் கூட்டணி அமைக்க, மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கட்டுப்பட வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்களை கேட்டு கொண்டுள்ளேன்' என்கிறார்.கடந்த 2001ம் ஆண்டு தேர்தலிலும், இதேபோல் தோன்றிய அதிருப்தி வேட்பாளர்களால், திரிணமுல், காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பல தொகுதிகளில் பாதிக்கப்பட்டது. உள்கட்சி குழப்பம் நடப்பு தேர்தலிலும் குழிபறித்து விடுமோ என, மாநில காங்கிரஸ் தலைமை கவலை கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: