ராதா மனோகர் : மக்கள் என்பவர்கள் முதலில் Taxpayers
அரசாங்கத்தின் வருமானம் என்பது மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுக்கு செலுத்தும் வரிப்பணம்தான்.
மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மறைமுக வரிகள் செலுத்துகிறார்கள்
நேரடி வரி என்பது வருமான வரி போன்றவையாகும்
உண்மையான அரசியல் என்பதே வரி செலுத்தும் மக்களின் நலன்களை எப்படி அரசியல்வாதிகள் கையாளுகிறார்கள் என்பதுதான்
உங்களின் பணத்தை நிர்வகிக்கும் உரிமையை தேர்தல்களின் போது அரசியல்வாதிகளுக்கு நீங்கள்தான் வழங்குகிறீர்கள்.
தேர்தல்களின் போதும் அரசியல் பொது வெளியிலும் எப்போதும் மக்கள் தங்களை ஒரு வரி செலுத்துவோர்களாகவே Taxpayers கருத வேண்டும்.
மாறாக மக்கள் தங்களை சிங்களவர்கள் தமிழர்கள் பௌத்தர்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என்றெல்லாம் கருதிக்கொண்டு அர்த்தமில்லாத அரசியலை கையாளும் போதெல்லாம் மக்களின் வரிப்பணம் என்ற முக்கியமான விடயம் அடிபட்டு போகிறது
வீணான இனவாத மதவாத பிரதேசவாத சேற்றுக்குள் மக்களை சிக்கவைக்கும் அரசியல்வாதிகள் மக்களின் பணத்தை நிர்வகிக்கும் பெரிய வாய்ப்பை தந்திரமாக பெற்று விடுகிறார்கள்
சிலர் நேர்மையாகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் வாழ்வை மேம்படுத்துகிறார்கள்
ஆனால் பெரும்பாலோர் மக்களை இனவாத மதவாத பிரதேசவாத விளையாட்டுக்களின் பக்கம் திருப்பி விட்டு,
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வேலையைதான் செய்கின்றனர்.
மக்கள் எப்போதெல்லாம் தாங்கள் வரி செலுத்தும் குடிமக்கள் என்பதை கவனிக்க தவறுகிறார்களோ
அப்போதெல்லாம் சுயநல அரசியல்வாதிகளின் சொத்து பட்டியல் உயர்கிறது!
இதுதான் இன்றைய இலங்கையின் முக்கிய பிரச்சனை.
இலங்கை மட்டுமல்ல வளர்ச்சியடையாமல் பொருளாதார ரீதியில் தள்ளாடும் அத்தனை நாடுகளுக்கும் இது பொருந்தும்.
மறுபுறத்தில் வளர்ச்சியடைந்த ஜப்பான் சிங்கப்பூர் ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில்,
ஒப்பீட்டு அளவிலாவது மக்கள் தங்களை வரி செலுத்துவோர்களாகவே கருதுகிறார்கள்
பொதுவிவாதங்களில் கூட வரிசெலுத்துவோர் என்ற சொல் அடிக்கடி இடம்பெறும்
மாறாக இலங்கை போன்ற வறிய நாடுகளில் மொழி மதம் பிரதேசம் போன்ற விடயங்கள் பற்றிய போலி விவாதங்கள்தான் அதிகமாக இடம் பெறும்.
இந்த விடயங்களில் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் அத்தனை அரசியல்வாதிகளினதும் சொத்து பட்டியல்கள் உயர்ந்து கொண்டே செல்லும்!
டாக்டர் அர்ச்சுனா அவர்கள் சாவகச்சேரியில் மன்னாரிலும் எழுப்பிய குரலானது மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி இருக்கிறது.
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்வில் நேர்மைக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு நிகழ்வாக இவரின் முன்னெடுப்புக்கள் அமைந்திருந்தது .
இந்த விழிப்புணர்வு நிச்சயம் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும்
ஆனால் இந்த விழிப்புணர்வு வழக்கமான மொழி மதம் பிரதேசம் சார்ந்த ஒரு அரசியலாக உருமாறி விடக்கூடிய ஆபத்து இருப்பது போல் எமக்கு தோன்றுகிறது.
எனவே இந்த இடத்தில் டாக்டர் அர்ச்சுனவை விட,
வேறு எவரையும் விட இந்த விழிப்புணர்வு முக்கியமானது என்று கருதுகிறோம்
திரு அர்ச்சுனா அவர்கள் கட்சி பேதமற்று இந்த பொதுக்கருத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
உருவாகியுள்ள இந்த விழிப்புணர்வை
மொழியின் பேராலும்
மதத்தின் பேராலும்
பிரதேச வாதத்தின் பேராலும்
நீர்த்துப்போக செய்ய வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்!
மொழியை இனத்தை பிரதேசத்தை மதத்தை வைத்து செய்யும் அரசியல் என்பது மிகவும் மலிவான அரசியல் தந்திரங்கள்தான்.
நீங்களே குற்றம் சாட்டும் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் பயன்படுத்தும் கேவலமான கருவிகள் அல்லவா அவை?
அன்புள்ள டாக்டரே அவை உங்களுக்கு தேவையா?
உங்கள் உயரம் சற்று அதிகம் அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக