ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு!

 நக்கீரன் :  தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில்
அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்திருந்தது.
இதனையடுத்து கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடும் விழா கலைவானர் அரங்கில் இன்று (18.08.2024) மாலை நடைபெற்றது.


இதனையொட்டி கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னை வருகை தந்தார். இதன் ஒரு பகுதியாக அவர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து கலைஞர் நினைவிடத்தில் உள்ள ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்திற்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு  முதல்வர்  மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். ‘தமிழ் வெல்லும்’ என்று கலைஞர் எழுதிய வரிகளுடன் கூடிய அவரது  உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின்,  நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, கலாநிதி விராசாமி, தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை: