ஞாயிறு, 16 ஜூன், 2024

மலேசியா வாசுதேவன் - முத்தான ஐம்பது செய்திகள்

May be an image of 1 person and smiling

 Kana Praba :  மனசில் நிறைஞ்ச  மதுரக் குரலோன்  மலேசியா வாசுதேவன்
முத்தான ஐம்பது செய்திகள்!
எம் வாழ்வியலின் அங்கமாகிப் போனவர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன் அண்ணன் இன்று அகவை எண்பதுக்குள் செல்கிறார்.
அவருடைய வாழ்வியலின் ஐம்பது செய்திகளைத் தரலாம் என்று தீர்மானித்து உழைத்ததை இங்கே பகிர்கிறேன்.
இந்தப் பதிவைத் தொகுத்து எழுத மூன்று மணி நேரம் பிடித்தது. ஆகையால் தயவு செய்து என் பெயரை நீக்கி விட்டு வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பகிர வேண்டாம்.
முழுமையான பதிவை என் தளத்தில் படிக்கலாம்radiospathy.com
1. மலேசியா வாசுதேவன் பாடிய முதற் திரையிசை “பாலு விக்கிற பத்மா” பாடல் வி.குமார் இசையில் டெல்லி to மெட்ராஸ் (1972). புகழ்பூத்த கவிஞர் மாயவநாதன் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். மாயவநாதன்  இறந்த பின் அஞ்சலிக் குறிப்போடு படம் வெளியானது. மலேசியா வாசுதேவ் என்ற பெயரில் அறிமுகமானார்


2. இவரின் இசைக்கச்சேரி ஒன்றைப் பார்த்து விட்டு அங்கேயே பாடல் வாய்ப்புக் கொடுக்கிறேன் என்று சொன்ன மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறந்து போகாமல் மூன்றாம் நாளே பாட அழைத்தார். பாரத விலாஸ் (1973) படத்துக்காக “இந்திய நாடு” பாடலில் கூட்டுப் பாடகராகப் (பாடகர் மலேசியா வாசு) பாடினார்.
3. குன்னக்குடி வைத்திய நாதன் இசையில் “காலம் செய்யும் விளையாட்டு” பாடலை “அருட் செல்வர்”  ஏ.பி.நாகராஜன் இயக்கிய குமாஸ்தாவின் மகள் படத்துக்காகப் பாடிய போது மலேசியா வாசு என்று பெயர் போட்டார்.
4. இளையராஜாவின் இசையில் பாடுவதற்கு முன்பே பாவலர் பிரதர்ஸ் இசைக்குழு, நாடக மேடையில் பாடகராக இருந்திருக்கிறார். அந்த நாடக மேடைப் பாடல்களில் அவர் பாடிய ஒன்று தான் பின்னாளில் அன்னக்கிளி கண்ட “மச்சானைப் பார்த்தீங்களா” பாடல்.
5. பெரும் திருப்புமுனையாக “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” (16 வயதினிலே) வாய்ப்பு இசைஞானி இளையராஜா இசையில் கிடைத்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் கெட்டுப் போனதால் பூஜைக்குப் பாடிய ட்ராக் பாடலே இவரின் தலையெழுத்தை மாற்றியது. கானாபிரபா
6. இயக்குநர் ஃபாசிலுக்கு கே.ஜே.ஜேசுதாஸ் போல, இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன் ஆகியோரின் அதிகப்படியான படங்களின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவன்.
7. “ஏ ராசாத்தி ரோசாப்பூ” (என் உயிர்த் தோழன்) பாடலில் மலேசியா வாசுதேவன் குரல் இருக்க வேண்டும் என்று பாரதிராஜா வேண்டிக் கொண்டதால் பின்னர் சேர்க்கப்பட்டுப் பாடல் முழுமையானது.
8. “பொதுவாக என் மனசு தங்கம்” (முரட்டுக்காளை) ரஜினிகாந்துக்கான நாயகத் துதிப் பாடல்களில் இன்று வரை கொண்டாடப்படுவது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் ரஜினிகாந்தை உயர்த்திய ஆரம்பங்களில் மலேசியா வாசுதேவனே அணி செய்தார்.
9. “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” (பொன்மனச் செல்வன்) விஜயகாந்துக்கான முத்திரைப் பாடலாக இன்றளவும் விளங்குகிறது. விஜய்காந்த் மட்டுமன்றி ராமராஜன் பிரபு மோகன், முரளி, அர்ஜுன், பாண்டியன், சத்யராஜ் ஆகியோரின் வெற்றிப் படங்களின் குரலாளனாக இருந்திருக்கிறார்.
10. “வான் மேகங்களே” (புதிய வார்ப்புகள்) வழியாக கே.பாக்யராஜ் என்ற நாயகனின் அறிமுகக் குரலாய் விளங்கியவர் பின்னர் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாக்யராஜ் இணைந்த போதும் நாயகக் குரலாக அதிக படங்களில் இடம்பிடித்தார்.
11. கங்கை அமரன் “மலர்களிலே அவள் மல்லிகை” படத்தின் வழியாக இசையமைப்பாளராக வருவதற்கு மலேசியா வாசுதேவனும் ஒரு தூண்டுதலாக இருந்து வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். அந்தப் படத்தின் கதை, வசனம் மலேசியா வாசுதேவன். அதன் பின் 170 படங்களுக்கு மேல் கங்கை அமரன் இசையமைத்தார்
12. மலேசியா வாசுதேவன் ஒரு இசையமைப்பாளராக கொலுசு, சாமந்திப்பூ , 6வது குறுக்குத்தெரு, பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள்,  உள்ளிட்ட நிறையப் படங்களுக்கு இசையமைத்தார்.
13. இவரின் பூர்வீகம் இந்தியா என்றாலும் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் மலேசியத் தமிழர்களின் முதற்படமான “ரத்தப்பேய்” படத்தின் தயாரிப்பு வேலைகளுக்காக அவர் தமிழகம் வந்து கலை உலகில் நிரந்தரமானார்.
இந்தப் படத்தின் பின்னணி இசை வழங்கியவர் இளையராஜாவின் குருவான ஜி.கே.வெங்கடேஷ்.
14. மலேசியா வாசுதேவனை “கொலுசு” திரைப்படம் வழியாக கே.எஸ்.மாதங்கன் நடிகராக அறிமுகப்படுத்தினார்.
15. பாடகராக ஒரு திருப்பு முனை கொடுத்த அதே பாரதிராஜாவே ஒரு கைதியின் டைரி வழியாக மலேசியா வாசுதேவன் என்ற நடிகர் தொடர்ந்து புகழ்பூத்த நடிகராக விளங்கத் திருப்புமுனை கொடுத்தார்.
16. உஷா வாசுதேவன் இவரின் மனைவி, யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா ஆகிய பிள்ளைகளில் முதல் இருவரும் திரையிசையிலும் கோலோச்சினார்கள்.
17.  நகைச்சுவை நடிகர் சுருளிராஜனுக்காக “உப்புமாவைக் கிண்டி வையடி (கீதா ஒரு செண்பகப்பூ), அது மாத்திரம் இப்ப கூடாது (அச்சாணி) போன்ற பாடல்கள் பாடினார்
18.  நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்திக்காக “எங்கெங்கும் கண்டேனம்மா” எஸ்பிபியும், சுருளிராஜனுக்காக மலேசியா வாசுதேவனுமாகப் ( உல்லாசப் பறவைகள்) பாடியளித்தார். கானாபிரபா
19. கவுண்டமணிக்காக “ஊரு விட்டு ஊரு வந்து” உட்பட ஏராளம் பாடல்கள் பாடினார்.
20. “அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா” என்ற குறும் பாடலை மன்சூரலிகானுக்காகப் பாடிச் சிறப்பித்தார்.
21.  நடிகை ஷோபா நடித்த இறுதித் திரைப்படமான “சாமந்திப்பூ” இசை மலேசியா வாசுதேவனே. அதில் “ஆகாயம் பூமி” என்ற புகழ்பூத்த பாடலை இசையமைத்துப் பாடினார்
22.  Folk Songs of Tamilnadu என்ற திரையிசை சாராப் பாடல் தொகுப்பில் பாவலர் சகோதரர்கள் இசையில் (1973) முன்பே பாடியிருக்கிறார். இசையாற்றுகை வழங்கியவர் இளையராஜா
23. ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே Disco Disco என்ற திரையிசை சாரா இசைத் தொகுப்பில் மலேசியா பாடியிருக்கிறார்.
24. தேவாவின் “கண்ணன் பாமாலை” உள்ளிட்ட திரையிசை சாராப் பக்திப் பாடல்கள் பாடியிருக்கிறார்.
25. “தென்கிழக்குச் சீமையிலே” ( கிழக்குச் சீமையிலே) ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மலேசியா வாசுதேவனுக்குப் பேர் சொல்லும் பாட்டு
26. “காதல் வைபோகமே” (சுவர் இல்லாச் சித்திரங்கள்), “டாடி டாடி” ( மெளன கீதங்கள்) போன்ற முத்திரைப் பாடல்களை கங்கை அமரன் இசையில் பாடினார்.
27. மலேசியா வாசுதேவன் இயக்கிய திரைப்படம் “நீ சிரித்தால் தீபாவளி”
28. “திவ்யா ஐ லவ் யூ” என்ற டெலிஃபிலிம் ஐ மலேசியாவில் இயக்கினார்.
29. “பட்டு வண்ண ரோசாவாம்” (கன்னிப் பருவத்திலே),  நான் ஒரு கோயில் (நெல்லிக்கனி) சங்கர் – கணேஷ் கொடுத்த முத்திரைப் பாடல்கள்
30. “காக்கிச்சட்டை போட்ட மச்சான்” சந்திரபோஸ் இசையில் ஏவிஎம் இன் “சங்கர் குரு” படத்துக்காகப் பாடிய புகழ் பூத்த பாடல்.
31. “நிமிர்ந்த நன்னடை” என்ற சுப்ரமணிய பாரதியார் பாடலை  “எத்தனை கோணம் எத்தனை பார்வை” (வெளிவரவில்லை) படத்துக்காகப் பாடியுள்ளார்.
32. “என்னம்மா கண்ணு செளக்யமா” (மிஸ்டர் பாரத்),” நண்பனே எனது உயிர் நண்பனே” (சட்டம்) உள்ளிட்ட ஏராளம் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு கூட்டாகப் பாடியிருக்கிறார்
33. “சும்மா தொடவும் மாட்டேன்” (முதல் வசந்தம்) பாடலை எஸ்பிபியோடு இணைந்து பாடியதோடு அந்தப் பாடல் காட்சியில் சத்யராஜோடு ஆட்டம் போட்டு வாயசைத்திருக்கிறார்.கானாபிரபா
34. சிவாஜி கணேசனுக்கான பாடகக் குரலாக இளையராஜாவுக்கு முன்பே சங்கர் - கணேஷ் இசையில் “துணை” படத்துக்காக “அன்பே துணை” பாடல் பாடியுள்ளார்
35. தன் அண்ணனுக்கு முன்பே தம்பி கங்கை அமரன், சிவாஜி கணேசனின் “இமைகள்” படத்தின் அனைத்துப் பாடல்களையும் மலேசியா வாசுதேவனைப் பாட வைத்திருக்கிறார்.
36. “பூங்காற்று திரும்புமா” (முதல் மரியாதை) பாடல் ஒன்றே போதும்பா நீ பாடகனாக இருந்ததற்கு அடையாளமாக எத்தனை காலமும் ஆனாலும் பேர் சொல்லும்” என்று சிவாஜி கணேசன் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
37. “பூப்பறிக்க வருகிறோம்” படத்தில் சிவாஜி கணேசனின் மகனாகவே நடித்தார்.
38. வெள்ளை ரோஜா படத்தில் சாந்தமான பாதிரியார் சிவாஜிக்காக “தேவனின் கோயிலிலே”, முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரிக்காக “நாகூரு பக்கத்துல” என்று இரண்டு பரிமாணங்களில் மிளிர்ந்திருப்பார்.
39. எழுத்தாளர் ஜெயகாந்தன் பாடல் எழுத இளையராஜா இசையில் “எத்தனை கோணம் எத்தனை பார்வை” படத்துக்காக “புகழ் சேர்க்கும்” , “எத்தனை கோணம் எத்தனை பார்வை” , “என்ன வித்தியாசம்” ஆகிய பாடல்களைப் பாடியிருக்கிறார்.
40. “பஞ்சு மிட்டாய் சேலை கட்டி” (எட்டுப்பட்டி ராசா) தேவா இசையில் தொண்ணூறுகளிலும் மலேசியா வாசுதேவனால் தன்னால் கலக்க முடியும் என்பதை நிரூபித்தது. இந்த 2K யுகத்திலும் கொண்டாடப்படுவது.
41. “தண்ணி கருத்திருச்சு” (இளமை ஊஞ்சலாடுகிறது) என்ற மலேசியா வாசுதேவனின் புகழ் பூத்த பாடலே அன்றைய காலகட்டத்தில் அவரின் யாழ்ப்பாண இசைக் கச்சேரியின் தலைப்பாக விளங்கியது.
42. “சுராங்கனி” என்ற இலங்கையின் புகழ்பூத்த பைலா பாடலை இளையராஜா இசையில் “அவர் எனக்கே சொந்தம்” படத்தில் திரை வடிவமாகப் பாடினார்.
43. திரையிசைப் பாடல்கள் தவிர ஏராளம் பக்திப் பாடல்களைத் தமிழகத்து ஆலயங்கள் மட்டுமன்றி ஈழத்து ஆலயங்கள் மீதும் மலேசியா வாசுதேவன் பாடியிருக்கிறார். “மணியோசை கேட்குதம்மா” முப்பது ஆண்டுகளாக ஈழத்து இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் கோயிலின் முகப்புப் பாடலாக விளங்குகிறது.
44. தெருக்கூத்துக் கலைஞர் புரசை கண்ணப்பதம்பிரான் எழுதிப் பாடிய “ நந்தன் என்பவன் நானே” பாடலில் இவரும், பாடகர் சாய்பாபாவும் இணைந்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்த கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் இடம்பெற்றது.
45. மலேசியாவில் நடிகராக மட்டுமன்றி இளவயதில் ஜிக்கி குரலில் மேடைப் பாடகராகவும் விளங்கியிருக்கிறார்.
46. பழம்பெரும் பாடகர் சி.எஸ்.ஜெயராமன் குரலில் “ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே” (மணிப்பூர் மாமியார்), “இந்த அழகு தீபம்” ( திறமை) ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.
47. பிறப்பால் கேரளத்தவர் என்றாலும் வெகு அரிதாகவே மலையாளப் பாடல்கள் பாடியுள்ளார். நேரடிப் பாடல்களில் ஒன்று “கல்லெல்லாம்” (அனஸ்வரம்) படத்துக்காக இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆண்டோவுடன் பாடியுள்ளார்
48. திரைக்கு வராத போதிலும் “ஒரு மூடன் கதை சொன்னான்” (நெஞ்சில் ஆடும் பூ ஒன்று), “மலர்களே நாதஸ்வரங்கள்” (கிழக்கே போகும் ரயில்), “ஆழக்கடலில் தேடிய முத்து” (சட்டம் என் கையில்), “ஆனந்தத் தேன்காற்று” (மணிப்பூர் மாமியார்) ஆகியவை மலேசியா வாசுதேவன் பாடிய வகையில் புகழ் பூத்தவை
49. நடிகருக்காகப் பாடாமல், நடிக்கும் பாத்திரத்துக்காகப் பாடுவது எனக்குப் பிடிக்கும் என்பவர் அப்படியாக அமைந்த “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” (16 வயதினிலே), “ஆகா வந்திருச்சு” (கல்யாண ராமன்) ஆகிய பாடல்களை உதாரணம் காட்டுவார்.
50. மலேசியா வாசுதேவனுக்காக அவரின் வாழ்நாளின் இறுதியில் 2010 ஆம் ஆண்டு மலேசியாவில் “கலைமாமணி மலேசியா வாசுதேவனுக்கு ஒரு பாராட்டு விழா” நிகழ்வை மலேசியத் தமிழர்கள் நடத்திய போது எஸ்.பி.பாலசுப்ரமணியமும், கங்கை அமரனும் இணைந்து சென்று கெளரவித்துத் தம் தோழனின் கன்னத்தில் முத்தம் வைத்துப் பிரியாவிடை கொடுத்தனர்.
கானா பிரபா
15.06.2024
ஒளிப்படம் நன்றி: கே.பிச்சுமணி

Parthiban Rathinavelu  :   மலேசியா வாசுதேவன்.
எம்ஜிஆர் திரையுலகின் தொழில்நுட்ப சமாச்சாரங்கள் அனைத்தும் அறிந்தவர்.
எனக்குத் தெரிந்து அவர் தனது திரைப்படங்களை அவரது அரசியல் வளர்ச்சிக்கு பயன் படுத்திக் கொண்டாலும் படத்தின் கதையோட்டத்தை பாதிக்கும் வகையில் சமரசம் செய்து கொண்டதில்லை.
அவர் கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் சுயம்பு.
அவர் என்றும் இயக்குநரின் நடிகர் அல்ல.
சில விதிவிலக்குகள் இருந்தாலும் நான் அறிந்ததில்லை.
எம்ஜிஆரின் இசை அறிவு அபாரமானது.
குறிப்பாக அவர் குரலுக்கு ஏற்ற பாடகர்களை தேர்வு செய்வதில்.
அவர் ஓரளவுக்கு வளரும் வரை சீர்காழி கோவிந்தராஜனை தனது பின்னனிப் பாடகராக வைத்திருந்தார். 'மலைக் கள்ளன்' படத்திற்குப் பிறகு டிஎம்எஸ் ஆஸ்தான பாடகர். ஆனாலும் வேறு சில பாடகர்களை பயன் படுத்தினாலும் சீர்காழிக்கு சமயம் கிடைக்கும் பொழுது எல்லாம் வாய்ப்பு உண்டு.



எம்ஜிஆரின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கிட்டத்தட்ட கடைசி படம் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் கூட தலைப்பு பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடியது தான்.

டிஎம்எஸ் குரல் வளம் இழக்கும் தருணத்தை உணர்ந்து அவர் தனது சொந்தப் படம் 'அடிமைப் பெண்' படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை அறிமுகப் படுத்தினார்.
பின்னர் வந்த அனைத்து படங்களிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கினார்.
ஆனால் ஏனோ அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அதற்குப் பிறகு 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நானறிந்து ஜேசுதாஸூக்கு முதல் வாய்ப்பு.
பின்னர் 'ஊருக்கு உழைப்பவன்', 'பல்லாண்டு வாழ்க' என இரண்டு படங்கள் முழுவதும் அவரைப் பயன் படுத்தினார்.
ஆனால் எனக்குத் தெரிந்து ஜேசுதாஸ் தமிழில் தனக்கு பெரும் வாய்ப்பு தந்த எம் ஜி ஆர், எம்எஸ்வி,  கே வி மகாதேவன் பற்றி பாலுவைப் போல எந்த பேட்டியிலும் புகழ்ந்ததில்லை.
 'விழியே கதை எழுது' பாடல்தான் அவர் அதிகம் பாடுவது.
அதுவும் பாடகி சுசிலாவின் ரசிகராக அந்த fanboy தருணத்தில். அந்தப் படலுக்கே ஒரு தனி வரலாறு உண்டு. இப்பதிவிற்கு அது தேவையில்லாதது. ஆனால் எம் ஜி ஆருக்கு தனது தாய் தமிழ் மலையாளத்தின் மேல் தனியொரு பிரேமை உண்டு.
தனது கடைசி படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் கூட பாடகர்
ஜெயச் சந்திரனுக்கு' வாய்ப்புக் கொடுத்தார்.

சிவாஜி இந்த விஷயத்தில் கொஞ்சம் தத்திதான். யார் பாடினாலும் அதற்கேற்ப வாயசைத்தால் போதும் என்று நினைத்தவர்.
பாலு முதன்முதலில் அவருக்குப் பாடிய 'பொட்டு வைத்த முகமோ' பாடல் ஒலிப்பதிவுக்கு சென்றுவிட்டு "சரி சரி நீ பாடு நான் அதற்கேற்ப நடித்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

பின்னர் சிவாஜிக்கு 'அந்தமான் காதலி' பாடத்தில் ஜேசுதாஸ் "திருக்கோயிலே ஓடி வா" என்கிற வரிகளுக்கு "தெருக் கோயிலே ஓடி வா" என்று பாடியதை விமர்சித்த பொழுது,
பாடலாசிரியரும், இசை அமைப்பாளரும் திருத்தவில்லை என்று தனக்கு தமிழில் பெரும் ஏற்றம் கொடுத்தவர்களை இகழ்ந்து பேசினார்.

இந்த சமயத்தில் அறிமுகமான இளையராஜா, ஜேசுதாசுக்கு அவரது கர்நாடக இசை அறிவிற்காக நிறைய பாடல்களைப் பாட வாய்ப்பு வழங்கினார்.

ஆனால் ஜேசுதாஸால் என்றும் அவரது தாய்மொழி தாக்கமின்றி மற்ற மொழிகளின் உச்சரிப்பு வாயில் வசம்பை வைத்து தேய்த்தாலும் வராது என்பதுதான் உண்மை.
அதற்காக அவர் எந்தவித மெனக்கிடலும் எடுக்கவில்லை என்பதும் வரலாறு. அவ்வளவு மண்டைக் கணம் உள்ளவர். என்ன இருந்தாலும் 'செம்பை வைத்தியநாத பாகவதர்' இடம் கர்நாடக இசை பயின்ற கிறித்தவ ஐயர் அல்லவா!

ஆனால் இசை அறிந்த எனது நண்பன் எப்பொழுதும் சொல்வது ஜேசுதாஸ் கள்ள தொண்டையில் பாடும் ஒரு ஏமாற்றுப் பாடகர் என்று. நிற்க.

மலேசியா வாசுதேவன் என்கிற தலைப்பில் அவரைப் பற்றிப் பேசாமல் வேறு கதைகள் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். அவரும் பிறப்பால் அவரும் ஒரு பாலக்காட்டு மலையாளிதான். ஆனால் மலேசியாவில் ரப்பர் தோட்ட தமிழ் தொழிலாளிகள் மத்தியில் வளர்ந்து தமிழை பிழையின்றி பேச, பாடத் தெரிந்தவர். அவரது முதல் பின்னனிக் குரல் நாகேஷுக்கு எனினும் 'பாரத விலாஸ்' படத்தில் பஞ்சாபியாக வரும் நடிகர் சுந்தர்ராஜனுக்கு  சற்றேறக்குறையக் குறைய டிஎம்எஸ் குரலில் பாடியிருப்பார். அன்று எல்லோரும் அவரை பின் பற்றி பாடுவது தமிழில் அ

வழக்கம். இன்றுவரை மலையாளத்தில் ஜேசுதாஸ் பாடுவது போல.
ஆனால் மலேசியா வாசுதேவன் அப்படியல்ல. அவர் எந்த நடிகருக்கும் ஏற்றவாறு குரல் கொடுப்பதில் வல்லவர். தமிழில் மிகப் பொருத்தமாக அமைந்தது ரஜினிக்கு. கமலுக்கு பாலு அளவு பாடவில்லை என்றாலும் சில பாடல்களை பாலுவை விட மலேசியா வாசுதேவன் பொருந்துவார் என்று இளையராஜா கொடுத்த பாடல்கள் உண்டு. உதாரணமாக 'கல்யாண ராமன்' படத்தில் "காதல் தீபமொன்று ஏற்றி வைத்தேன்" பாடலை சொல்லலாம்.

என் நினைவில் அதற்குப் பிறகு ஒரு பத்தாண்டுகள் கழித்து 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் "கை வச்சாமல் போனாலும் மல்லி வாசம்" பாடலும் உண்டு.
மீண்டும் சிவாஜி. அவர் படங்களுக்கு இசை அமைக்கும் பொழுது இளையராஜாவிற்கு அவர் படங்களில் பின்னணி பாட டிஎம்ஸ் தேவை. குரலுடைந்த அவருக்கும் ராஜாவின் இசைக்கும் பொருந்திப் போகவில்லை. ஆனாலும் முடிந்தவரை சமாளித்தார். சில பாடல்களுக்கு பாலுவை பயன் படுத்தினார். சிவாஜி தவிர்த்து பாலுவின் குரல் யாருக்கும் பொருந்தும். ஆனால் அவரால் கூட சிவாஜிக்கு பாட இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது கை கொடுத்தவர் மலேசியா வாசுதேவன். பல்குரல் வித்தகன் தனது தனித்தன்மை இழக்காத பாடகர்.

மலேசியா வாசுதேவன் சிவாஜிக்கு பாடியது வெகு சில பாடல்களே. அதில் எனக்கு பிடித்த பாடலின் ஒரு புகைப்படத்தை கீழே இணைத்துள்ளேன். பாடலைத் தேடி நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
பிகு: எம்ஜிஆர் திரையுலகை விலகி முழுநேர அரசியல்வாதி ஆகிய பின்பே மலேசியா வாசுதேவன் திரையுலகில் வெளிச்சத்திற்கு வந்தவர். ஒருவேளை.........  அவர் இழந்த மிகப் பெரும் இழப்பு அது என்று கூட சொல்லலாம்.

கருத்துகள் இல்லை: