சனி, 4 மே, 2024

காணாமல்போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

 tamil.abplive.com - ரேவதி :  ஜெயகுமார் தனசிங் கடந்த மே 2 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல்துறையில் புகாரளித்திருந்தார்.
Nellai east District Congress President Jayakumar recovered as dead body after missing - TNN Crime: காணாமல்போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை
திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார்  தனசிங் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் கிழக்கு மாவட்ட தலைவராக இருப்பவர் KPK ஜெயகுமார். கடந்த 02.05.24 ம் தேதி மாலை வீட்டில இருந்து வெளியே சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கூறி உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாப்ரின் புகார் அளித்துள்ளார். மகன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவரான ஜெயக்குமாரை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த கரைச்சுத்துபுதூரை சேர்ந்த KPK ஜெயக்குமாரின் குடும்ப பின்னணி நீண்ட கால காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்டது. காணாமல் போன ஜெயக்குமாரின் தந்தை, காங்கிரஸில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தலைவராக பதவி வகித்தவர். தற்போது ஜெயக்குமாரின் சகோதரர்களும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர். ஜெயக்குமார் கட்சி தாண்டி கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைகள் அமைப்பது என செயல்பட்டு வந்தார். இதற்கு முன்பு நடந்த தேர்தலின் போதும் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், காங்கிரஸ் கட்சிக்காக அதிக அளவில் நிதி செலவிட்டவர் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே  KPK ஜெயக்குமார், கடந்த ஏப்ரல் 30ம் தேதி தனக்கு நேரிலும் போனிலும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உட்பட சில நபர்களின் பெயர் விவரங்களை எழுதி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் தனது வீட்டின் முன்பாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாகவும், தேர்தலின் போது கேட்ட செலவழித்த பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கட்டுமான பணியை மேற்கொண்டு பின் அதற்கான பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சில நபர்களின் பெயர்களை புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என நெல்லை மாவட்ட எஸ்.பி. தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முக்கிய திருப்பமாக தற்போது ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: