செவ்வாய், 30 ஏப்ரல், 2024

சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜ.க.வின் கைக்கூலிகள் - ஒய்.எஸ்.சர்மிளா சாடல்

 மாலை மலர்  :  அமராவதி   : ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-தெலுங்கு தேசம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரும், ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா நேற்று காக்கிநாடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:


கடந்த 10 ஆண்டுகளில் ஆந்திர மாநிலம் ஒரு அடி முன்னேற்றம் காணவில்லை. சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியால் எந்தப் பயனும் இல்லை.

இருவரும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளனர். ஒருவர் கூட்டணி வைத்தும், மற்றொருவர் மறைமுகமாகவும் பா.ஜ.க.வின் கைக்கூலியாக உள்ளனர்.

ஆந்திராவுக்கு மீள முடியாத வீழ்ச்சியை பா.ஜ.க. கொடுத்துள்ளது. மாநிலத்துக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த அந்த கட்சி, மோசடி செய்துவிட்டது. போலவரம் திட்டத்தை பா.ஜ.க. புறக்கணித்து விட்டது. உண்மை நிலவரம் இப்படியிருக்க சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: