சனி, 4 மே, 2024

6 வயது மகனை டிரெட்மில் ஓட வைத்து கொன்ற தந்தை? நீதிமன்றத்தை அதிர வைத்த வீடியோ

maalaimalar :  “அமெரிக்காவின் நியூ ஜெர்சியை பகுதியை சேர்ந்தவர் கிரெகர். இவருக்கும் பிரெ மிக்கோலியோ என்பவருக்கும் திருமணமாகி ஆறு வயதில் மகன் கோரெ இருந்து வந்தார்.
தனது மகன் கோரெ உடல் பருமனாக இருப்பதாக கூறி, அவனை உடற்பயிற்சி செய்ய கிரெகர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரெகர் தனது மகனை உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து சென்று டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார்.
அதன்படி கோரெ டிரெட்மில்லில் ஓட துவங்கியுள்ளார். சிறிது நேரத்தில் டிரெட்மில்லின் வேகத்தை கிரெகர் கூட்டியுள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய கோரெ டிரெட்மில்லில் இருந்து கீழே விழுந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த கிரெகர் தனது மகன் கோரெவை வலுக்கட்டாயமாக தூக்கி மீண்டும் டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார்.



இவ்வாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தியதில் கோரெ உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையை வைத்து போலீசார் கிரெகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சிறுவன் உயிரிழக்கும் முன்பு உடற்பயிற்சி கூடத்தில் என்ன நடந்தது என்பதை காட்டும் சி.சி.டி.வி. வீடியோ நீதிபதி முன் சமர்பிக்கப்பட்டது.

வீடியோ காட்சியை நீதிமன்றத்தில் வைத்து ஒளிபரப்ப நீதிபதி உத்தரவிட்டார். வீடியோவில், கிரெகர் தனது மகன் கோரெவை உடற்பயிற்சி கூடத்திற்குள் அழைத்து வருவது, மகனை டிரெட்மில்லில் ஓட செய்தது. கிரெகர் டிரெட்மில் வேகத்தை கூட்டியது, டிரெட்மில் வேகம் கூடியதால் கோரெ நிலை தடுமாறி கீழே விழுந்தது என பதைபதைக்க வைக்கும் பகீர் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

மேலும், நிலை தடுமாறி கீழே விழுந்த மகனை சட்டென தூக்கிய கிரெகர் மீண்டும் அவனை டிரெட்மில்லில் ஓட செய்து, மீண்டும் டிரெட்மில் வேகத்தை கூட்டியுள்ளார்.

ஓருகட்டத்தில் உடலில் வலிமையில்லாத காரணத்தால் கோரெ டிரெட்மில்லில் ஓட முடியாதவராக காணப்படுகிறார். இருந்தும், கிரெகர் கட்டாயப்படுத்திய காரணத்தால், கோரெ டிரெட்மில்லில் மீண்டும் ஓட துவங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பார்த்த தாய் மிக்கோலியோ நீதிமன்றத்தில் தனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் நின்றார். நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கிரெகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. “,

கருத்துகள் இல்லை: