ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

தர்மபுரி... வன்னியர் ஓட்டு யாருக்கு? தலித் ஓட்டு யாருக்கு? மற்றவர்களின் ஓட்டு யாருக்கு? ரகசிய விவரம்!


மின்னம்பலம் -Aara : ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில்… ஸ்டார் தொகுதிகளை தேர்ந்தெடுத்து தேர்தலுக்கு பிறகான வெற்றி வாய்ப்பு நிலவரம் பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
இந்த வரிசையில் முதலில் கோவை தொகுதி பற்றி பார்த்தோம். இப்போது அடுத்த தொகுதியாக தர்மபுரி…
பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ. மணி போட்டியிட்டார். அதிமுக சார்பில்  அசோகன் போட்டியிட்டார், நாம் தமிழர் சார்பில்  அபிநயா பொன்னிவளவன் போட்டியிட்டார்.

தமிழகத்தில் மற்ற தொகுதிகளோடு ஒப்பிடும்போது…  தருமபுரி தொகுதி  அரசியல் ரீதியான முக்கியத்துவத்தோடு சாதி ரீதியான முக்கியத்துவமும் பெற்ற தொகுதியாகிறது.  இங்கே அரசியல் காரணங்களை விட சாதிய காரணங்களும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி, அரூர், மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.

மொத்தம் வாக்காளர்கள் 15,24,896.  அதில் பதிவான வாக்குகள் 12,38,183 அதாவது 81.20% சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதை வைத்து திமுக, பாமக ஆகிய கட்சிகள் தங்களுக்கே வெற்றி வாய்ப்பு என்ற  காரணிகளை முன் வைக்கிறார்கள்.

தர்மபுரி தொகுதில் இருக்கும் வாக்காளர்களை சமுதாய ரீதியில்  கணக்கிட்டால்…

வன்னியர் வாக்குகள்     40%,

எஸ்சி/எஸ்டி வாக்குகள் 20%

கொங்கு கவுண்டர்            13%

இஸ்லாமியர்கள்                  3%

கிறிஸ்துவர்கள்                    1%

மற்ற சமூகத்தினர்              23%

என்ற வகையில் இருக்கிறார்கள்.

இந்த மற்றவர்கள் 23% என்பதில் போயர், லம்பாடி, உடையார், நெசவு முதலியார்கள், செட்டியார்கள், யாதவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினர் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், 80% வாக்குப் பதிவில் வன்னியர்கள் பெரும்பான்மையோர் வாக்கு அளித்திருக்கிறார்கள். அதுவும் எங்களுக்கே வாக்கு அளித்திருக்கிறார்கள் என்ற கணக்கு போட்டு சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்று அக்கட்சி நிர்வாகிகள் அடித்துச் சொல்லி வருகிறார்கள்.

மேலும், இதற்கு முன்னுதாரணமாக 2014 நாடாளுமன்றத் தேர்தலை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. அப்போது திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிட்டது.

அந்தத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி வெற்றி பெற்றார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக இரண்டாவது இடமும், திமுக மூன்றாவது இடமும் பெற்றன. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37  இடங்களில் அதிமுக வெற்றிபெற்ற நிலையில் தர்மபுரியிலும், கன்னியாகுமரியிலும் மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.

இதையடுத்து பாமகவுக்கு உதவியதாக  அப்போதைய அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமியின் மீது புகார்களை லோக்கல் அதிமுகவினரே அனுப்பினர். அதன் அடிப்படையில் கே.பி.முனுசாமியின் அமைச்சர் பதவியைப் பறித்தார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.

இந்த 2014 முன்னுதாரணத்தை சுட்டிக் காட்டுகிற பாமகவினர், ‘2014 ஐப் போல 2024 லும் நாங்களே வெற்றி பெறுவோம்’ என்கிறார்கள். அப்படியென்றால்  இரண்டாம் இடம் யாருக்கு என்று கேட்டபோது, ‘இரண்டாம் இடம் திமுகவுக்கும், மூன்றாவது இடம் அதிமுகவுக்கும்’ என்று பாமகவினர் நம்பிக்கையாக சொல்கிறார்கள்.

ஆனால் திமுகவினரோ,  ‘2014 இல் என்ன நடந்தது என்று  எங்களுக்கும் தெரியும். அப்போது வன்னியர்களின் ஓட்டு சிந்தாமல் சிதறாமல் பாமகவுக்கு விழுந்ததற்கு காரணம் இளவரசன் -திவ்யா சம்பவத்தை வைத்து வன்னியர்களிடம் உணர்வு ரீதியாக கட்டமைக்கப்பட்ட அரசியல்தான்.  2013 ஜூலை மாதம் இளவரசன் சடலம் ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டது. அதையடுத்து  திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவங்கள் இரு தரப்புக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தின.  சுமார் ஏழெட்டு மாதங்களாக எரிந்த இந்த விவகாரம் பாமகவுக்கு அரசியல் ரீதியாக பெரும்பலனை அளித்தது. அதுதான் அன்புமணியை வெற்றி பெற வைத்தது.

ஆனால், அதே தர்மபுரி தொகுதியில் 2019  தேர்தலில்  அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து நின்றும் அன்புமணியால் வெற்றி பெற முடியவில்லை. எனவே 2014 தேர்தல் நடந்த சூழலை கருத்தில் கொள்ள வேண்டும். 2014 ஐ 2024 தேர்தலோடு ஒப்பிடக் கூடாது’ என்கிறார்கள் திமுகவினர்.

மேலும் அவர்கள், “ முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அமைச்சர் கே.பி.முனுசாமியின் பதவியைப் பறித்தார். இந்தத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கும் முன்னரே எங்கள் தலைவர் ஸ்டாலின், வெற்றிக்கு மாசெக்களும் பொறுப்பு அமைச்சர்களும்தான் பொறுப்பு என்று தெளிவாக எச்சரித்துவிட்டார். அதனால், தர்மபுரி தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் தான் தன் பதவி காப்பாற்றப்படும் என்பதால் பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கடுமையாக உழைத்திருக்கிறார். மாசெக்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணியனும் தீவிரமாக வேலை பார்த்துள்ளனர்.

அதிமுகவிலுள்ள முக்கிய நிர்வாகிகளான வன்னியர் பிரமுகர்களைத் தொடர்புகொண்ட எம்.ஆர்.கே…. ‘உங்களுக்கு விழுகிற வன்னியர் வாக்குகளை முழுசா வாங்கிடுங்கய்யா.. அப்பத்தான் வன்னியர் வாக்குகள் பிரியும். திமுக வெற்றி பெற்றால்தான் நான் அமைச்சராக தொடரமுடியும்’ என்று பேசி அதிமுகவினரை ஆக்டிவேட் செய்திருக்கிறார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. இவ்வாறு அதிமுகவினரை தூண்டிவிட்டது ஏன் என்பதை தேர்தலுக்குப் பிறகு திமுக எடுத்திருக்கும் ஒரு சர்வே சொல்கிறது.

அதாவது தர்மபுரி தொகுதியில் இருக்கும் முக்கிய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் வாக்களித்துள்ளனர்? அவர்களில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் எவ்வளவு பேர் என்று  ஒரு சாதி ரீதியிலான ஆய்வை திமுக தரப்பு  நடத்தியிருக்கிறது.

அந்த  ஆய்வின் அடிப்படையில் தர்மபுரி தொகுதியில்  வன்னியர் சமுதாயத்தினர்  சுமார் ஆறு லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 5.50 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது வன்னியர்களில்  90% சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.  அதில் திமுக வுக்கு கிடைத்திருப்பது 20% (1,09,792) தான்.

சுமார் மூன்று லட்சம் எஸ்சி எஸ்டி வாக்குகளில் பதிவானது 90%( 2,74,481) அதில் திமுக வுக்கு கிடைத்துள்ள வாக்குகள் 65% (1, 78,412)

கொங்கு கவுண்டர் சமுதாய வாக்குகளில் 1.99 லட்சம் பதிவானது 70% (1, 38,765) அதில் திமுக வுக்கு சென்றது 20% (27, 753)

45,746 இஸ்லாமியர்கள் வாக்குகளில் பதிவானது 70% (32, 022) அதில் திமுக வுக்கு 90% (28,819) கிடைத்துள்ளது.

சுமார் 15,250 கிறிஸ்துவர் வாக்குகளில் பதிவானது 70% (10, 673). அதில் திமுகவுக்கு கிடைத்தது 90% (9, 605)

மற்ற சமூகத்தினர் வாக்குகள் 3,50,726 , பதிவானது 65% (2, 27,971) இதில் திமுகவுக்கு கிடைத்ததாக சொல்லப்படும் வாக்குகள் 70%    (1, 59,579) வாக்குகள்.

இந்த வகையில்  மொத்தம் பதிவான 12,38,183 வாக்குகளில் சுமார் 5,13,960 வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துள்ளதாக தருமபுரி ரிப்போர்ட் திமுகவின் தலைமைக்கு சென்றிருக்கிறது.

அதாவது வன்னியர் ஓட்டுகள் பெரும்பாலும் திமுகவுக்கு வரவில்லை, ஆனால், தலித் ஓட்டுகள் பெரும்பாலும் திமுகவுக்கு வந்திருக்கிறது. அதேபோல இஸ்லாமியர்கள்,  மற்ற சமூகத்தினரின் வாக்குகளும் திமுகவுக்கே வந்திருக்கிறது.  எனவே நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அடித்துச் சொல்கிறார்கள் திமுகவினர்.

இந்த வகையில் எங்களுக்குத்தான் வெற்றி என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

ஆனால் பாமகவினரோ, ‘வன்னியர் வாக்குகளில் பெரும்பான்மை  பாமகவுக்கு விழுந்திருக்கிறது. ஆனால் தொகுதியின் வாக்காளர்களில் 23% உள்ள மற்ற சமுதாயத்தினரின் வாக்குகளில் 70% திமுகவுக்கே விழுந்திருக்கும் என்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை. எனவே எங்களுக்கே வெற்றி’ என்கிறார்கள்.

திமுகவினரும், பாமகவினரும் இப்படி டேட்டா ஷீட் வைத்துக் கொண்டு வெற்றிக் கணக்குகளை போட்டுக்கொண்டிருக்க அதிமுகவினரோ சற்று அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

“திமுகவும், பாமகவினரும் பெருமளவில் செலவு செய்திருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது அதிமுகவினர் செலவு குறைவுதான். ஆனால் அதிமுகவும் கடுமையாக வேலை செய்திருக்கிறோம்.   தேர்தலுக்கு பிறகு எடப்பாடியிடம் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, மாவட்டச் செயலாளர் பாலக்கோடு அன்பழகன் ஆகியோர் சொல்லும்போது… ‘நம்ம கட்சி ஓட்டு நமக்கு வந்துடும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதுதான் இப்போது இங்கே நிலைமை” என்கிறார்கள்.

அதிமுகவினரின் அமைதிக்கு அர்த்தம் தர்மபுரியில் திமுகவுக்கும் பாமகவுக்கும்தான் போட்டி என்பதை அவர்கள் ஒப்புக் கொள்வதாக இருக்கிறது.

வணங்காமுடி

கருத்துகள் இல்லை: