வியாழன், 2 மே, 2024

பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி போட்டு வைத்த மக்கள்.. உ.பி.யில் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்

The body of a snake bite victim was kept tied in the river of Ganga but did not come alive

 tamil.oneindia.com -  Velmurugan P :  லக்னோ: பாம்பு கடித்தவரின் உடலை, ஓடும் கங்கை நீரில் வைத்தால் விஷம் போய்விடும் என சிலர் கூறிய மூடநம்பிக்கையை நம்பிய குடும்பத்தினர்,
கங்கை ஆற்றில் இளைஞனின் உடலை கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.. ஆனால் உயிருடன் அவர் திரும்பவில்லை..
மாறாக விஷம் ஏறி இறந்து போனார். மூடநம்பிக்கை உத்தரப்பிரதேசத்தில் உயிரையே பறித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் உள்ள ஜெய்ராம்பூர் குடேனாவை சேர்ந்த 20 வயது இளைஞர் மோகித் என்பவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 26ம்தேதி புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதிக்குலோக்சபா தேர்தல் நடந்தது.

லோக்சபா தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக ஜெய்ராம்பூர் குடேனா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அதன்பின்னர் ஏப்ரல் 26ம் தேதி அன்று லோக்சபா தேர்தலில் வாக்களித்துவிட்டு வயல்வெளியில் நடந்து வந்துள்ளார். அப்போ பாம்பு கடிக்கு ஆளாகிய மோஹித், வயல்வெளியிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனிடையே இளைஞர் மோஹித்தை பாம்பு கடித்த செய்தி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இதையடுத்து உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள் ஆனால் அவருக்கு உடனே நிவாரணம் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள பைகிரோவுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதனிடையே கிராமத்தினர் சிலர், மருத்துவத்தால் பாம்புக்கடி சரி ஆகாது, ஓடும் கங்கை நீரில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற கூறியுள்ளனர்.

எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த குடும்பத்தினர் இந்த மூடநம்பிக்கையை உண்மை என்று நம்பினார்கள். அந்த மூடநம்பிக்கையால் அவந்திகா தேவி கங்கா காட் பகுதியில் கயிறு கட்டி இரண்டு தினங்களுக்கு மோகித்தின் உடலை கங்கை நதியில் போட்டு வைத்துள்ளார்கள்.

ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவும் அந்த இளைஞரை காப்பாற்றவில்லை மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் உயிர் இருக்கிறதா என கூட சோதிக்காமல் நிதியிலேயே போட்டு வைத்திருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனிடையே ஒரு கட்டத்தில் அந்த இளைஞனுக்கு மீண்டும் சுவாசம் இயல்பு நிலைக்கு திரும்பாததை கண்டு, சோகத்தில் மூழ்கிய அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு கிராமத்திற்கு திரும்பினார்கள்.

மூடநம்பிக்கையால் ஒரு இளைஞரின் உயிர் அநியாயமாக பறிபோய் இருப்பது உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அறியாமையால் மக்கள் செய்யும் சில செயல்கள், உயிரையே பறிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் கசப்பான உதாரணமாக உள்ளது.

நாள் முழுவதும்

கருத்துகள் இல்லை: