புதன், 3 ஏப்ரல், 2024

கச்சத்தீவு - ப சிதம்பரம் : அந்நாட்டில் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 தினமணி : புது தில்லி, ஏப். 2: கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான மற்றும் ஆக்ரோஷமான அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டு இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு காங்கிரûஸயும் திமுகவையும் பிரதமரும், பாஜக தலைவர்களும் திங்கள்கிழமை விமர்சித்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்வினையாற்றியிருந்தது.


இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது "எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில், கச்சத்தீவு குறித்து இரண்டாவது நாளாக தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அதன் விவரம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் மற்றவர்களும் அறிக்கைகளை வெளியிட்டு இந்தியா, இலங்கை இடையிலான உறவுகளை மோசமாக்குவதற்கு முன்பு, அந்நாட்டில் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சத்தீவு குறித்து உண்மைக்குப் புறம்பான மற்றும் போர்ப்பகை மூட்டும் அறிக்கைகளை வெளியிட்டிருப்பது, இலங்கை அரசையும் அங்குள்ள 35 லட்சம் தமிழர்களையும் மோதலுக்கு உள்ளாக்கும். மத்திய அரசு தனது போர்க் குணத்தை சீனாவிடம் காட்ட வேண்டும்.

மேலும், கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்பதை 2015 ஜனவரி 27-ஆம் தேதியிட்ட ஆர்டிஐ மூலமாக அனுப்பிய பதிலில் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி. 27-1-2015 அன்று வெளியுறவுத் துறை செயலராக இருந்தவர் ஜெய்சங்கர். இலங்கைக்கு சிறிய தீவு எந்த சூழ்நிலைகளில் சொந்தமாகியது என்பதை இந்தியா நியாயப்படுத்தும் விதமாக அந்தப் பதில் இருந்துள்ளது. ஆனால், வெளியுறவு அமைச்சரும் அவரது அமைச்சகமும் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் பிரதமர்கள் கச்சத்தீவு விவகாரத்தில் அலட்சியம் காட்டியதாகவும், கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் உரிமைகளை பறிகொடுத்ததாக பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் திங்கள்கிழமை குற்றம்சாட்டியிருந்தனர்.

கருத்துகள் இல்லை: