செவ்வாய், 2 ஏப்ரல், 2024

சீன விவகாரத்தை திசை திருப்பவே மோடி கச்சத்தீவு பிரச்சினையை எடுக்க காரணமே - டிஆர்பி ராஜா

tamil.oneindia.com  - Mani Singh S : சென்னை: கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, சீன விவகாரத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து இருப்பதாக சாடியுள்ளார்.
தழிழக பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். அதைப் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். 

May be an image of map and text that says 'Press 10 serEen EAKING 1:21:09 PM 01/04/2024 அருணாச்சல் 30 இடங்களில் சீனப் பெயர்கள் HUSSIA CHINA krunadal INDIA 11 குடியிருப்புகள், 12 மலைகள், ஆறுகள், ஏரி, மலைக்கு மாண்டரின் மொழியில் பெயர் கூட்டியுள்ளது SABAN 11E சீனாவின் நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்த ஜெய்சங்கர், சீனாவின் நடவடிக்கை முட்டாள்தனமானது து என கருத்து SathiyamTV'

அதில், " சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்க போவது இல்லை. கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியது இடம்பெற்றிருந்தது.


இந்த விவரங்களை முன்வைத்து பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் பதிலடி தந்து வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

இலங்கையுடனான நட்புறவுக்காக 1974-ல் கச்சத்தீவு வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும் கூட, வங்கதேசத்துடன் எல்லைகளைப் பரிமாற்றம் செய்துதான் இருக்கிறார். 10 ஆண்டுகளில் இப்போது திடீரென எல்லை பிரச்சனை, இந்திய நிலப் பகுதி பற்றி எல்லாம் மோடி விழித்துக் கொண்டிருக்கிறார்" என்று சாடியிருந்தார்.

இதனிடையே இன்று மோடி தனது எக்ஸ் தளத்தில், "கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பாக வெளியாகும் புதிய தகவல்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களைப் பேண திமுக எதுவுமே செய்யவில்லை என்பது புலப்படுகிறது" என்று சாடியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், பிரதமர் மோடியை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, சீன விவகாரத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து இருப்பதாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக டிஆர்பி ராஜா கூறுகையில், நமது நாட்டிற்குள் ஊடுருவி நமது ஊர்களுக்கு சீனப்பெயர்கள் சூட்டி வரும் சீனாவை கண்டு தொடை நடுங்கும் முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு, சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்கவா துடிக்கிறது. இதற்குதான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, இந்தியாவிற்கு சொந்தமான அருணாச்சலப் பிரதேசத்தை எந்த ஒரு ஆதாரமும் இன்றி உரிமை கொண்டாடி வரும் சீனா, அங்குள்ள பல கிராமங்களுக்கு புதிய பெயர்கள் என்று சீனா ஒரு லிஸ்டை அறிவித்துள்ளது. இது குறித்து சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "மாநில கவுன்சில் (சீனா அமைச்சரவை) ஜாங்னானில் உள்ள சில இடங்களுக்கு புதிய பெயர்களைத் தயார் செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. 11 மாவட்டங்கள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு நிலப்பகுதியின் பெயர்களை மாற்றியதாக சீனா கூறியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. இதனால், தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலிலே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமாக அரசியல் தலைவர்களின் மொத்த கவனமும் தமிழ்நாடு பக்கம் திரும்பியுள்ளது.

இந்த முறை கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என வியூகம் வகுத்து வரும் பாஜக, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடியும் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார். அடுத்த சில நாட்களில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார். இதனிடையே, தமிழக அரசியலில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: