சனி, 16 மார்ச், 2024

கேணல் கருணாவும் திருமேனி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரனும்! உண்மையில் நடந்தது என்ன?

Peut être une image de 5 personnes
Col Karuna
 

May be an image of 8 people
Col karuna

M R Stalin  Gnanam :     கிழக்குப் பிளவின் இருபதாண்டு நினைவுகள்
அன்றொருகாலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யாராலும் 'அசைக்க முடியாத' சக்திகளாய் இருந்தனர்.
1976ம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான ' திருமேனி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்' எவராலும் வெல்லப்பட முடியாத 'அமானுஷ' சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.
இந்தப் புலிகள் அமைப்பு  உருவாகியதிலிருந்து 2004ஆம் ஆண்டு வரையான 27 வருடகால வரலாற்றில் அது கடந்து வந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.
ஆனாலும் அவையனைத்தையும் தமது மூர்க்கத்தனமான இராணுவ பலத்தின் மூலம் வெற்றிகொண்டு நின்றவர்கள்தான் புலிகள்.
ஆனால் 2004ம் ஆண்டில் புலிகள் அமைப்பும் அதன் தலைவர் பிரபாகரனும் எதிர்கொள்ள நேர்ந்த 'கிழக்கு பிளவு' அவர்களுக்கு வரலாறு காணாத சவாலொன்றை விடுத்தது.
அதனை அவர்கள் வெற்றிகொண்டு தாண்டிச் செல்ல முடியவில்லை. காரணம் அது இராணுவ ரீதியாக மட்டுமன்றி அரசியல் கோட்பாட்டு ரீதியான சவாலாகவும் எழுந்து நின்றது.



புலிகள் அமைப்பில் 20 வருடகால அனுபவம் மிக்க மூத்த தளபதிகளில் ஒருவராகவும்  மட்/அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட தளபதியாகவும்  இருந்தவர் கேர்ணல் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகும். அவர் தலைமையில் 2004ஆம் ஆண்டில் புலிகளுக்குள் இருந்து வெளிக்கிளம்பிய நெருக்கடியேஅந்தக் கிழக்குப் பிளவுக்கு காரணமாயிற்று. வரலாற்றையே புரட்டிபோடும் வல்லமை கொண்டிருந்த அப்பிளவின் பின்னால் பல்வேறுவிதமான அரசியல்,சமூக,வரலாற்று மற்றும் பொருளாதார காரணிகள் இருந்தன.

குறிப்பாக ஈழத்தமிழரிடையே அதாவது வடக்கு, கிழக்கு அரசியல் வரலாற்றில்  நீண்ட காலமாக கோலோச்சி வந்த யாழ்-மேலாதிக்க கருத்து நிலையே அதன் அடிப்படையாகும்.  இத்தகைய யாழ் மேலாதிக்க மனநிலையில் இருந்து புலிகள் அமைப்பாலும் வெளிவர முடியவில்லை. இம்மேலாதிக்க கருத்தியலானது புலிகள் அமைப்புக்குள்ளும் மெல்ல மெல்ல வியாபிக்கத் தொடங்கியது. அப்போதிருந்தே புலிகளுக்குள் இந்தக் கிழக்கு பிளவுக்கான 'கரு' கட்டத் தொடங்கி விட்டிருந்தது எனலாம்.
இறுதியாக  2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து புலிகள் உருவாக்கிய நிர்வாக கட்டமைப்பினுடைய  32 துறைசார் செயலாளர்களாகவும்  வடக்கு மாகாணத்தையே சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டனர். இத்தகைய எதேச்சயதிகார முடிவுகள் யாழ்-மேலாதிக்க கருத்தியலின் பிரதிநிதிகளாகவே தமிழீழ விடுதலைப் புலிகளும் இருப்பதை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியது.
வடக்குப் போர் முனைகள்  

நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த தொடர்ச்சியான யுத்தம்  காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்தமை காரணமாக புலிகளின் 'ஆட்சேர்ப்பு'என்பது 1990ஆம் ஆண்டின் பின்னர் கிழக்கு மாகாணப் போராளிகளையே  நம்பியிருக்கவேண்டிய நிலைக்கு உள்ளானது.  
இவ்வாறாக 'தமிழ்' மண்ணைக்காக்க கிழக்கிலிருந்து சென்று வடக்கு போர் நிலைகளில் களமாடிய 4000 போராளிகளின் உடலங்கள் வடக்கு மண்ணிலேயே புதைக்கப்பட்டன. ஆனால் போராட்டக்களத்திலும் பொது இடங்களிலும் வடக்கு மண்ணின் சாதிய மனோநிலை காரணமாக கிழக்குப் போராளிகள் பராபட்சத்துக்குள்ளாக்கப்பட்டு வந்தமை தொடர்ந்தது. யுத்த முன்னரங்குகளில் பலியிடப்படுவதற்காக கிழக்கு போராளிகளே அதிகளவில் நிறுத்தப்பட்டார்கள். மறுபுறம் ஜெயந்தன் படையணி போன்ற கிழக்கு வீரர்களின் யுத்த வெற்றிகளுக்கு உரிய கெளரவத்தை வழங்குவதில் வடக்குத்தளபதிகளும் ஒரவஞ்சனை காட்டிவந்தனர்.

1997 ஆம் ஆண்டில் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலொன்றை ஜெயசிக்குறு என்னும் பெயரில் இலங்கை இராணுவம் முன்னெடுத்தது. அத்தாக்குதலை முறியடிப்பதில் புலிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த யுத்தமானது  மாதக்கணக்காக தொடர்ந்தது.அப்போதுதான்  கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான போராளிகளுடன் வந்த கருணாம்மான் அந்த யுத்தத்தின் புதிய கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்கின்றார். உக்கிரமான அந்த யுத்தம் கிழக்குப் போராளிகளின் அபரீதமான இழப்புகளின் பலனாக வெற்றிகொள்ளப்படுகின்றது. அது மட்டுமன்றி கெரில்லா யுத்த பாணியிலிருந்து விலகி மரபார்ந்த நேரடிச்சமர் புரியவல்லமை  கொண்டவர்கள் புலிகள் என்னும் செய்தியை உலகுக்குச் சொல்லியது அவ்வெற்றியேயாகும். அன்றிலிருந்து கருணாம்மான் மீதான காழ்ப்புகளும் அவருக்கெதிராக குழிபறிப்புகளும் புலிகளின் வடக்கைச்சேர்ந்த மூத்த தளபதிகளுக்குள் உருவாகத் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் இடம்பெற்ற ஆனையிறவு மீட்பு  யுத்தத்திலும் வெற்றியின் நாயகர்களாக இருந்தவர்கள் கருணாம்மான் தலைமையிலான ஜெயந்தன் படையணியினரேயாகும். ஜெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவரான றோபட் தலைமையிலான  போராளிகளே ஆனையிறவு முகாமின் இறுதி வெற்றியை அறிவித்தனர். ஆனால் அவர்கள்  சார்பாக ஆனையிறவு முகாமில் வெற்றிக்கொடியை ஏற்றும் 'கெளரவம்' கருணாம்மானுக்கு வழங்கப்படவில்லை.  
இது கிழக்குப் போராளிகளிடையே பாரிய விரக்தியையும் கோபக்கனலையும் உருவாக்கிய வரலாற்றுச்சம்பவமாகும்.  புலிகளின் பிரச்சர வெளியீடான நிதர்சனம் போன்ற வீடியோக்களில் கிழக்குப் போராளிகளின் வெற்றிச்சமர்கள் குறுக்கப்பட்டும் தணிக்கைக்குள்ளாகியும் வெளியிடப்பட்டன. களமுனையில் முக்கிய பாத்திரம் வகிக்கும் கிழக்குத் தளபதிகளின் குரல்களுக்கு மாற்றாக  வடக்குத்தளபதிகளின் வீரபிரதாபங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தவேண்டாம் என்று கிழக்குப் போராளிகளுக்கு கருணாம்மான் போன்றவர்கள் வருடக்கணக்காக சமாதானம் சொல்லிக்கொண்டே வந்தனர்.

ஆரம்ப காலங்களில் தங்கள் மீது காட்டப்பட்டுவந்த  இத்தகைய மாற்றான்தாய் மனப்பான்மைகளை கிழக்குப்போராளிகள் மெளனமாகவே கடந்து வந்துகொண்டிருந்தனர். ஆனால்  மெல்ல மெல்ல புலிகள் அமைப்புக்குள் கிழக்குப்போராளிகளின் எண்ணிக்கையும் அவர்களின் முக்கியத்துவமும்  பெரும்பான்மையடையத் தொடங்கியது. அவ்வேளையில்  தமது பலமே புலிகளின் முதுகெலும்பாக இருப்பதனை அவர்கள் உணரத்தொடங்கியபோது மேற்படி பாரபட்ச அணுகுமுறைகளுக்கெதிராக சிறு சிறு எதிர்ப்புணர்வுகளை  அவர்கள் வெளிக்காட்டத் தொடங்கினர்.
இதன் காரணமாக யாழ் குடா நோக்கிய நகர்வுக்கான தாக்குதல்களில்  கிழக்குப்போராளிகளின் படையணிகளுக்கும் வடக்கு படையணிகளுக்கும் இடையே சிறு சிறு உரசல்கள் தொடங்கி விட்டிருந்தன. யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதில் கிழக்குப் போராளிகள் முன்னணி பாத்திரம் வகித்துவிடக்கூடாது என்பதில் வடக்குத்தளபதிகள் கவனமான காய்களை நகர்த்தினார். அவ்வாறு நடத்து விட்டால் யாழ்ப்பாண நகரில் கருணாம்மானால் புலிக்கொடி ஏற்றப்படும் நிகழ்வை யாராலும் தடுக்க முடியாது போகும் என்பதனால் ஜெயந்தன் படையணிகளுக்குரிய களமுனை ஆயுத,மற்றும் உணவு வளங்கல்களில் திட்டமிட்ட தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. ஜெயந்தன் படையினர் நிலைகொண்டிருந்த ஒரு காவலரனில்  கட்டளையை மீறி தடை தாண்டிச்செல்ல முற்பட்ட பொட்டம்மானுடைய ஜீப் வண்டிக்கு துப்பாக்கிச் சூடு நடத்துமளவுக்கு நிலைமை  மோசமடைந்திருந்தது.

இதுபோன்ற பல காரணங்களால் யாழ்  குடாவை கைப்பற்றும் நகர்வுகளிலிருந்து மெது மெதுவாக ஜெயந்தன் படையணியினர் பின்வாங்கத்தொடங்கினர். இறுதியாக யாழ் குடாவைக் கைப்பற்றும்  அத்திட்டம் புலிகளால் கைவிடப்பட்டது. சுருங்கச் சொன்னால் ஜெயசிக்குறு வெற்றி,ஆனையிறவு வெற்றி போன்று  யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்கள்  மட்டக்களப்பு போராளிகள்தான் என்கின்ற  வரலாறு எழுதப்படக்கூடாது என்பதற்காகவே அம்முயற்சி கைவிடப்பட்டது.
கருணம்மானின் கிழக்கு நோக்கிய நெடுந்தூர நடை

இந்நிலையில்தான் 2001ஆம் ஆண்டு வரை வடக்கில் பல்வேறு யுத்தங்களை வெற்றி கொண்ட கருணாம்மான் மீண்டும் கிழக்குமாகாணத்துக்கு திரும்புகின்றார். சுமார் 4500 கிழக்குப் போராளிகளில்  4000 பேரை  பலிகொடுத்தநிலையில் அவருடன் திரும்பியவர்கள் வெறும் 600 பேரேயாகும். மணலாற்றில் இருந்த ஜெயந்தன் படையணியின் முகாமிலிருந்து  கிழக்கு நோக்கிய அப்பயணம் தொடங்குகின்றது. பிரபாகரனின் உரிய அனுமதி பெறப்படாமலேயே கருணாம்மான் இம்முடிவினை எடுத்திருந்தார்.  பல நாட்களைக்  கடந்த நெடுந்தூர நடை பயணத்தின்போது போராளிகளது யுத்த அனுபவங்களைக் காவியமாக்கும் நோக்கில் புலிகளின் ஆஸ்தான எழுத்தாளர் மணலாறு விஜயன் அவர்களுடனேயே பயணிக்கின்றார்.   
ஜெயசிக்குறு, ஆனையிறவு மீட்புச் சமர், யாழ்குடா நோக்கிய நகர்வு போன்ற ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய பல்வேறுபட்ட களமுனைகளைக் கடந்துவந்த அந்தப் போராளிகளின் அனுபவங்கள்,சாகஸங்கள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், திகில்கள்,இழப்புகள்,சிரமங்கள், படிப்பினைகள்  என்று அனைத்தையும் ஆவணப்படுத்துவதே அவரது நோக்கம்.

ஆனால் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிய கதைபோல அவர் எதிர்பார்த்த விடயங்களை விட வடக்கு போர்முனைகளில் 'மட்டக்களப்பார்' என்பதற்காக சக போராளிகளிடமும் தளபதிகளிடமும் தாம் எதிர்கொள்ள நேர்ந்த பாகுபாடுகளும், ஒதுக்கல்களும்,ஒரவஞ்சனைகளும், அவமானங்களும் ஏளனங்களும் பற்றியே போராளிகள் தமது  மனக்குமுறல்களை கொட்டித்தீர்த்தனர்.
அவற்றையெல்லாம் ஒரு எழுத்தாளனாக அவர் தொகுத்துக்கொண்டாலும் அவை நூலாகத் தொகுக்கப்பட்டபோது  'திறீலும் திகிலும்' என்னும் அந்நூலை  வெளியிடுவதற்கு புலிகளின் அரசியல்துறை தடைவிதித்து பறிமுதல் செய்தது.
கருணாம்மான் கிழக்குக்கு சென்றபின்னர் எதிர்காலத்தில்  புலிகளின் பிரதான கட்டளைத் தலைமையகத்தை மட்டக்களப்பு நோக்கி நகர்த்தவேண்டிய அவசியம் உள்ளமையால்  முழு கிழக்கு மாகாணத்தையும் புலிகளின் கட்டுப்பாடில் கொண்டுவருவதற்கான படைத்துறை கட்டுமானங்களை தயார் செய்யுமாறும் பிரபாகரன் கருணாம்மானுக்கு கட்டளையிட்டார்.
அதன்படி 1995-2000 வரையான காலப்பகுதியில் வடக்கு போர்முனைகளில் இழக்கநேர்ந்த படைபலத்தை மீளக் கட்டியெழுப்புமாறும் கேட்டுக்கொண்டார்.
அதன்பொருட்டு  கிழக்கில் ஆயுதமுனையில் 'ஆள்பிடி படலம்' தொடங்கியது. பின்னர் அது  'வீட்டுக்கொரு போராளி' என்னும் கட்டாய 'ஆட்சேர்ப்பு திட்டம்' என அறிமுகப்படுத்தப்பட்டது. புலிகளது கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மாகாணத்தின் மூன்றின் இரு பகுதி நிலப்பரப்பு முழுவதும்  இத்திட்டம்  அமுலாக்கப்பட்டது. அத்திட்டத்துக்கு 'ஒப்படைப்பு' பெயரிடப்பட்டது. அதாவது  ஒவ்வொரு குடும்பமும் தம் சார்பில் ஒருவரை நாட்டுக்காக போராடுவதற்காக தியாகம் செய்து ஒப்படைக்க  வேண்டும் என்னும் நிலை உருவாக்கப்பட்டது.

இவ்வாறாக ஆயிரமாயிரமாய் சிறுவர்களும் இளைஞர்களும் பாலின வேறுபாடின்றி புலிகளுடன் இணைக்கப்பட்டனர். படுவான்கரைப் பெருநிலப்பரப்பின் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் தினமொரு இடங்களை குறித்து ஒப்படைப்பு நிகழ்வுகள் அறிவிப்புச் செய்யப்பட்டன. பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை அங்கு  கூட்டிச்சென்று  புலித் தளபதிகளின் கரங்களில் அவர்களை ஒப்படைத்தனர். வெருகல்,கோராவெளி,தாந்தாமலை போன்ற கோவில் திருவிழாக்களில் பங்குபெறும் இளைஞர்களைக் குறிவைத்து தினம் தினம் ஆட்சேர்ப்புகள் இடம்பெற்றன. இவ்வாறாக பருவமடையாத பெண்குழந்தைகள் கூட நூற்றுக்கணக்கில் பயிற்சி பாசறைகளுக்கு கவர்ந்து கொண்டு செல்லப்பட்டனர். மட்டு-அம்பாறை படையணிகள் தொகை சுமார் ஏழாயிரத்தைத் தாண்டுகின்றது.  ஜெயந்தன் படையணி,விநோதன் படையணி,விசாலகன் படையணி,அன்பரசிப் படையணி,மதனா படையணி,ஜோன்சன் மோட்டார் படையணி என்று பாசறைகள் பெருகுகின்றன.  ஆயிரக்கணக்கான படையணிகளை  ஒரே வேளையில் வைத்து பராமரிக்கக்கூடியளவு வசதி வாய்ப்புக்களைக்கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன.

இத்தகைய கட்டாய  ஆட்சேர்ப்பு குறித்த செய்திகளை கிழக்கில் அன்றிருந்த ஊடகவியலாளர்கள் எவரும் வெளிக்கொணரவில்லை. அதற்கும் மேலாக  'தராக்கி சிவராம்' போன்ற கிழக்கின் பிரபல ஊடகவியலாளர்கள் பொது மக்களே தமது குழந்தைகளை தாமாக விரும்பி முன்வந்து 'மகிழ்ச்சியுடன் புலிகளிடம் ஒப்படைக்கின்றார்கள்' என்று செய்திகளை வெளியிட்டனர்.   'குழந்தைப்போராளிகள்' என்கின்ற வார்த்தையைக்கூட மனித உரிமை அமைப்புகள் மறந்தேனும் உச்சரிக்க முன்வரவில்லை.
ஆனால் யாழ்-பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி போன்ற ஒரு சில அமைப்புகளே இவை பற்றிய செய்திகளை வெளிக்கொணர்ந்தன. புலிகளின் ஆட்சேர்ப்பு,மற்றும் அதன் காரணமாக படுவான்கரை பகுதியில் பெரும்பான்மையான பாடசாலைகள் (மாணவர்களின் போதிய வரவின்மை காரணமாக) செயலிழந்து காணப்பட்டமை என்பவற்றையிட்டு ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி வெளியிட்ட அறிக்கை தினகரன் பத்திரிகையில் 18/11/2001 அன்று  வெளிவந்திருந்தது. அவ்வறிக்கையில் கிழக்கில் இடப்பெற்ற கட்டாய  ஆட்சேர்ப்பு குறித்த விடயங்களை பகிரங்கம் செய்ததோடு இந்நிலை தொடருமானால் கிழக்குவாழ் மக்கள் தமிழீழ கோரிக்கையிலிருந்து விலகி 'சுதந்திர கிழக்கு' ஒன்றுக்கான கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டி வரும் என்றும் முன்னெச்சரிக்கை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிளவுபட்ட பொட்டம்மானின் புலனாய்வுப்பிரிவு
புலிகளின் புலனாய்வுத்துறையைப் பொறுத்தவரையில் அது இரண்டு வகையாகச் செயற்பட்டது. தேசியப் புலனாய்வுத்துறை,இராணுவப் புலனாய்வுத்துறை என அவை அழைக்கப்பட்டன.  கிழக்கில் இயங்கிய தேசிய புலனாய்வுத்துறை பொட்டம்மானின் வழிகாட்டலில் தளபதி ரெஜினோல்ட் தலைமையிலும் இராணுவப் புலனாய்வுத்துறையானது  கருணாம்மானின் வழிகாட்டலில் தளபதி ரமணன் தலைமையிலும் இயங்கிவந்தன.

அதேவேளை வடக்கு களமுனைகளில் பொட்டம்மான் தலைமையிலான  புலனாய்வுத்துறையினருக்கும் ஜெயந்தன் படையினருக்கும் இடம்பெற்ற முறுகல் நிலை கிழக்கு மாகாணத்திலும் தொடர ஆரம்பித்தது.முதலில்  கிழக்கில் இயங்கிய இருவகையான புலனாய்வுத்துறைகளுக்கும் இடையே முறுகல் நிலை உருவானது. பொட்டம்மான் மற்றும் கருணாம்மான் போன்றோரிடையேயான அதிகாரப்போட்டிகளே அதன் பின்னணியில் இருந்தன. இப்பூசல்கள் தேசிய புலனாய்வுத்துறை வடக்கு /கிழக்கு என இரண்டாகப் பிளவுபடும் நிலைக்கு இட்டுச்சென்றது. அதன் விளைவாக கிழக்கில் தேசிய புலனாய்வுத்துறை பொறுப்பாளரான ரெஜினோல்ட் உட்பட்ட  சுமார் 30 வரையான போராளிகள் பொட்டம்மானின் தலைமையின் கீழ் செயற்பட முடியாதென கருணம்மானிடம் சரணடைந்தனர்.  

2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  கிழக்கில் மாவீரர் தினம் மிக பிரமாண்டமான முறையில் நடைபெறுகின்றது. நீண்டகாலத்துக்குப் பின்னர் கருணாம்மானின் பங்குபெற்றுதலோடு நடைபெறும் மாவீரர்தினம் என்பதால் வெகு விமர்சையாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் மாலைப் பொழுதில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான அம்பிளாந்துறை கிராமத்தில் வைத்து புலனாய்வுத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தரான யாழ்-நெல்லியடியைச் சேர்ந்த அற்புதம் மாஸ்டர் பயணித்த வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலில் அவர் உயிர் பிழைத்தபோதும் தனது காலை இழக்கவேண்டிவந்தது. இச்சம்பவமானது கிழக்கு மாகாணத்திலுள்ள புலிகளின் கட்டமைப்புகளை வடக்குப்  பொறுப்பாளர்கள் வழிநடாத்துவதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகள் கிழக்கில் தொடங்கிவிட்டமையை உணர்த்தியது.

அதேபோன்று 2001 ஆம் ஆண்டு  மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தினக்கதிர் பத்திரிகைக் காரியாலயம் மீதான இனந்தெரியாதோரின் தாக்குதலும் கூட  இத்தகைய புலிகளின் உள்ளக முரண்பாட்டு பின்னணியில் இடம்பெற்றதாகவே அறியப்பட்டது. அதன்காரணமாக அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் அப்பத்திரிகை நின்று போக நேர்ந்தது.

இவ்வித சம்பவங்களை விசாரிப்பதற்கோ ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ வன்னியிலிருந்த பிரபாகரனாலோ பொட்டம்மானாலோ முடியவில்லை.
ரணில்-பிரபா போர் நிறுத்த ஒப்பந்தம்

2002ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் மத்தியஸ்தம் ஊடாக  ஏற்பட்ட புலிகள்-இலங்கையரசு சமாதான ஒப்பந்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளுக்காக  புலிகளின் பிரதிநிதிகளாக அரசியல் ஆலோசகர் பாலசிங்கம்,அரசியற் துறை பொறுப்பாளராகிய தமிழ் செல்வன் மற்றும் கருணாம்மான் போன்றவர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்காரணமாக அவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வரத்தொடங்கினர்.
அது மட்டுமன்றி சமாதான பேச்சுகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்த கருணாம்மான் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் அமைதியான வாழ்வையும் அவர்களின் வாரிசுகள் தேவையான உலகத்தரம் மிக்க கல்வியையும் பெரும் வாய்ப்பை பெற்றிருக்கும் நிலையில் தாங்கள் ஆயிரமாயிரமாய் ஏழை எளிய மக்களின் குழந்தைகளை யுத்தத்தில் பலியிட்டுக்கொண்டிருப்பதனை எண்ணிப்பார்க்கின்றார்.  

புலிகளின் பொறுப்பாளர்களாகவும் பிரச்சாரகர்களாகவும் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் போராட்டத்தின் பெயரால் கோடீஸ்வரர்களாக மாறிவருவதையும் அவதானிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கின்றது.
2002ஆம் ஆண்டில் முதலாம் மற்றும் இரண்டாம்  கட்ட பேச்சு வார்த்தைகள் தாய்லாந்திலும் மூன்றாம் கட்ட  பேச்சுவார்த்தை நோர்வேயிலும் இடம்பெறுகின்றது. இந்த மூன்றாம்  கட்டப் பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வு ஒன்றுக்குரிய முன்வரைபுகளில் கையெழுத்துடுவது குறித்த இழுபறி நிலை ஏற்படுகின்றது. இறுதியாக கையெழுத்திட்டு விட்டு இலங்கைக்கு திரும்புகின்றனர் தமிழ்ச்செல்வனும் கருணாம்மானும். அந்த கையெழுத்திட்ட வரைபுகளை தலைவரிடம் காட்டுகின்றனர்.
உங்களை கையெழுத்திடவா அனுப்பினேன்? என்று குமுறிய பிரபாகரன் அப்பிரதிகளை கிழித்து கருணாம்மானின் முகத்திலே வீசுகின்றார். இச்சம்பவமானது 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம்பெறுகின்றது.

ஒவ்வொரு தடவையும்  வெளிநாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்துவிட்டு கொழும்பு வந்திறங்கும் கருணாம்மானும் தமிழ்ச்செல்லவனும் கட்டுநாயக்காவிலிருந்து இலங்கை விமானப்படையினரின்  ஹெலிக்கொப்டர்களில் நேரடியாக வன்னிக்கு பயணமாவார்கள். அங்கு பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை விபரங்களை முழுமையாக ஒப்புவித்தபின்னரே கருணாம்மான் வன்னியிலிருந்து மட்டக்களப்புக்கு வந்து சேருவது வழக்கமாயிருந்தது.
ஆனால் மேற்படி சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு விட்டு வெளிநாடுகளில் இருந்து கொழும்பு வந்து சேர்ந்தவுடன் தமிழ்ச்செல்வனை வன்னிக்கு தனியாக அனுப்பிவிட்டு கட்டுநாயக்காவிலிருந்து  ஹெலிக்கொப்டர் மூலம் நேரடியாக மட்டக்களப்புக்கு  வரத்தொடங்கினர் கருணாம்மான்.  இது  பிரபாகரனுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியது.

அதன்காரணமாக இறுதியாக 2003ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் யப்பானில் இடம்பெற்ற ஆறாம் கட்டப் பேச்சு வார்த்தைக்குரிய குழுவிலிருந்து  கருணாம்மானின் பெயர் நீக்கப்பட்டது. அந்தப் பேச்சு வார்த்தையோடு புலிகளுக்கும் இலங்கையரசுக்குமான உறவு கிட்டத்தட்ட முறிவடையும் நிலைக்கு வந்துவிட்டது எனலாம். அடுத்த யுத்தத்தை ஆரம்பிக்கும் திட்டத்தில் பிரபாகரன் மூழ்கின்றார்.

இதற்கிடையே சமாதான காலத்தை தொடர்ந்து நிதி,நீதி,நிர்வாகம்,அரசியல்,காவல்,கல்வி  என்று சகல துறைகள் சார்ந்தும் புதிய கட்டமைப்புக்களை புலிகள்  உருவாக்குகின்றனர். அத்தோடு அவற்றுக்கான தனித்தனி துறைச் செயலாளர்கள் 32 பேர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாய் இருந்தனர். இந்நிலையானது கிழக்குப் போராளிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உருவாக்குகின்றது. ஏற்கனவே பொட்டம்மானின் கட்டுப்பாட்டில் இயங்கிய புலனாய்வுத்துறை கருணம்மானின் கட்டுப்படின் கீழ் இயங்குகின்றது. அதனைத் தவிர ஏனைய துறைசார் பணியாளர்கள் வடக்கில் இருந்து கிழக்கில் பணியாற்றுவதற்காக வந்திறங்குகின்றனர். குறிப்பாக தமிழீழக்  காவல்துறையினரின் செயற்பாடுகள் கிழக்கில் முடுக்கிவிடப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு என்னும் பெயரில் கிழக்கிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வடக்கு மாகாண காவல்துறைப் பொறுப்பாளர்கள் மேலாண்மை செலுத்தத் தொடங்கினர். இது கிழக்குப் போராளிகளிடையே பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது.

'வடக்கு வாழ்வதற்காக நாம் அங்கு சென்று மடிந்தோம். அவர்களோ கிழக்கை ஆள்வதற்காக இங்கு வந்திருக்கின்றார்கள்.'என்கின்ற கோபக்கணைகள் கிழக்குப் போராளிகளிடத்தில் அனல் கொண்டு வீசத்தொடங்கின. வடக்கில் இருந்து வரும் துறைசார்ந்த பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட முடியாதென பல போராளிகள் குரலெழுப்பித்தொடங்கினர். மட்/பழுகாமத்தில் தமிழீழ காவற்துறையினருடன் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்ட மூன்று போராளிகள் களுவாஞ்சிக்குடி இராணுவ முகாமில் சரணடையுமளவுக்கு நிலைமைகள் மோசமடையத் தொடங்கின. கிழக்கில் புலிகளின் நிர்வாகம் எதிர்கொள்ளும் குழப்பநிலைமைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமானால் வன்னியிலிருந்து தலைமைப்பீட உறுப்பினர்கள் கிழக்குமாகாணத்துக்கு நேரடியாக களமிறங்கவேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.  
மட்டக்களப்புக்கு வந்த பொட்டம்மான்
ஏறக்குறைய 2003ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் யப்பானில் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்ததிலிருந்து சமாதானத்துக்கான வாய்ப்புகள் அருகத் தொடங்கி விட்டன. புலிகளைப் பொறுத்தவரையில்  கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பநிலைமைகளை விரைவாகத் தீர்க்காவிடின் அடுத்த யுத்தத் தயாரிப்புக்கள் பற்றி எண்ணிப்பார்க்க முடியாது.
எனவே பிரபாகரன்  பொட்டம்மானை மட்டக்களப்புக்கு அனுப்ப முடிவெடுக்கின்றார். அதன்படிஅங்குள்ள குழப்பநிலைகளை தீர்க்க முயலுமாறும் படையணிகளைப் பார்வையிட்டு தேசிய புலனாய்வுத்துறையை மீளக் கட்டியெழுப்புமாறு அறிவுறுத்தியும் பொட்டம்மானை 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்.

மட்டக்களப்புக்கு வந்த பொட்டம்மான் கிழக்கின் நிலைமைகள் குறித்து கருணாம்மானுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துகின்றார். பிரச்சனைகளின் அடிப்படையை விளக்கிய கருணாம்மான் யுத்த நிறுத்த  காலத்தில் சமாதானச் செயலகம் ஊடாக வழங்கப்பட்ட  நிதியொதுக்கீடுகள் பெரும்பான்மையாக வடக்குக்கே செலவு செய்யப்படுவது பற்றியும் அங்குள்ள தளபதிகள் அனைவரும் கொக்ககோலா,பால்மா, மற்றும் இரும்பு, சீமெந்து, போன்ற வியாபாரங்களில் ஈடுபடும் சர்வதேச கம்பெனிகளின் தொழில்சார் முகவர்களாக மாறிவருவது  பற்றியும் தனது விசனத்தைத் தெரிவித்தார். சர்வதேச தரத்திலான சொகுசு வாகனங்கள்  கொழும்பின் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்க முன்பே வன்னியிலுள்ள புலிகளின் தளபதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் கிடைத்து விடுகின்றது. மீள் கட்டுமானப்பணிகள் வடக்கில் மிக அசுர வேகத்தில்  முடுக்கி விடப்பட்டுள்ளன ஆனால் கிழக்கில் யுத்த இடிபாடுகளுக்குள்ளேதான் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்."
இந்நிலையில் வடக்கிலிருந்து வந்த காவல்துறையினரும் ஏனைய பொறுப்பாளர்களும் நடந்து கொள்ளுகின்ற விதங்கள் போராளிகளிடையே பெரும் அதிருப்தி அலையொன்றை தோற்றுவித்துள்ளது என்பதை இலாவகமாக எடுத்துச் சொல்லுகின்றார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட பொட்டம்மான்  செவிடன் காதில் ஊதிய சங்குபோல தான் வந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்துக்கொண்டு வடக்கு நோக்கி புறப்பட்டார். அதாவது கீர்த்தி தலைமையில் நீலன் இளங்கோ போன்றவர்களை இணைத்து புதிய புலனாய்வுத்துறையை உருவாக்கி விட்டு வன்னிக்கு புறப்படுகின்றார். அது கருணாம்மானுக்கு பலத்த கோபத்தினை உருவாக்குகின்றது.
மட்டக்களப்பிலிருந்து திரும்பிய பொட்டம்மானால் பிரபாகரனுக்கு  வழங்கப்பட்ட  அறிக்கையில்  மட்டு-அம்பாறை படைக்கட்டுமானங்களினதும் அவற்றின் நிர்வாகம், கட்டமைப்பு,வழங்கல்கள் பற்றிய சிறப்புகளை எடுத்துச்சொல்லியிருந்ததோடு அத்தகைய படைத்துறைக் கட்டுமானம்  ஒன்று கருணம்மானின் முழுக்கட்டுப்பாடில் இருப்பதன் ஆபத்தையும்  சுட்டிக்காட்டியிருந்தது. இதன்காரணமாக அதன் பெரும்பகுதியை உடனடியாக வன்னிப்பெருநிலப்பரப்புக்கு இடமாற்றம் செய்யுமாறும் பரிந்துரைத்திருந்தது.
பிரபாகரனிடம் வந்த அவசரச்செய்தி
இந்நிலையில்தான் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பிரபாகரனிடமிருந்து அவசரத் செய்தியொன்று  கருணாம்மானுக்கு வருகின்றது. அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனுடைய 'செட்' மூலமாக கருணாம்மானுடைய 'செட்' க்கு அச்செய்தி வருகின்றது. அம்மானின் 'செட்' பொறுப்பாளர்  மாதங்கன் அச்செய்தியை வாசித்து அம்மானின் பிரதான மெய்ப்பாதுகாவலரான காஸ்ரோவிடம் ஒப்புவிக்கிறார். அதனை காஸ்ட்ரோ அம்மானின் உதவியாளர் லத்திப்பிடம் சொல்லுகின்றார்.
"கருணாம்மானை வன்னிக்கு வருமாறும் வரும்போது  2000 படையணிகளை நகர்த்திக்கொண்டு வருமாறும்  தலைவர் சொல்லியிருக்கிறார்". அதற்கான பதிலாக  "இப்போது வரமுடியாது" என பதிலிறுக்கப்படுகின்றது.
மீண்டும் அரை மணி நேரத்தில் ஒரு செய்தி வருகின்றது. அதுவும் மாதங்கன் - காஸ்ட்ரோ-லத்திப் என்று அம்மானுக்கு செய்தி சொல்லப்படுகின்றது. "ஹெலிக்கொப்டர் அனுப்புகின்றேன் உடனே கருணாம்மான் வன்னிக்கு வரவும்." என தலைவர் அழைத்துள்ளார்.
அதற்கு பதில் இவ்வாறு சொல்லப்படுகின்றது. "ஹெலிக்கொப்டர் அல்ல
ஃபிளைட் அனுப்பினாலும் வரமாட்டேன்."  ஆனால் லத்திப் அந்த பதிலை செய்தித்தொடர்பாளர் மாதங்கனுக்கு சொல்லவில்லை.  
மீண்டும் நான்கு நாட்கள் கடந்த பின்னர் அதாவது பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வன்னியிலிருந்து அழைப்புவருகின்றது. "தலைவர் அவசரமாகப் கருணாம்மானுடன் பேசவேண்டும் உடனடியாக வன்னிக்கு வரவும்"

இச்செய்தி வந்தவுடன் கருணாம்மான் வன்னிக்கு செல்லவில்லை.சென்றால் அவர் திரும்பி வரப்போவதுமில்லை. பிரபாகரனுக்கு பக்கத்தில் இருபது வருடங்கள் இருந்த கருணாம்மான் இது புரியாதா? எனவே அதற்கு பதிலும் அளிக்கவில்லை.  ஆனால் அன்றைய தினமே கருணாம்மானின் மனைவியும் குழந்தைகளும் அவரது உதவியாளரான லத்தீப் என்னும் சிறுவனும் குகனேசனின் உதவியுடன் இந்தியாவுக்கு செல்வதற்காக கொழும்பு நோக்கிப் அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனடியாக மட்டக்களப்பு-அம்பாறை பிரதேசங்களில் இருந்த முக்கிய தளபதிகள் கருணாம்மானால் அழைக்கப்படுகின்றனர். பெப்ரவரி 29ஆம் திகதி நிலைமைகளை சக தளபதிகளுக்கு விளக்குகின்றார் கருணாம்மான். மீண்டும் யுத்தத்துக்கு 2000 போராளிகளை வன்னிக்களமுனைக்கு அழைத்துச்செல்வது குறித்து அனைவருமே அதிருப்தி தெரிவிக்கின்றனர். கரிகாலன், பிரபா,ரமேஷ்,
என்று மூத்த தளபதிகள் அனைவரும் இதில் பங்கெடுக்கின்றனர்.

இறுதியாக 'தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கிழக்குப் போராளிகள் 6000 பேரும் கருணாம்மான் தலைமையில் பிளவுபட்டு நிற்கின்றோம்' என்னும் செய்தி மட்டு-அம்பாறை  அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் அவர்களின் கையெழுத்துடன் 2004 ஆம் ஆண்டு மார்ச் 03நாள் பகிரங்கப்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: