புதன், 13 மார்ச், 2024

திராவிடர்களும் ஆளுநரும் - முரசொலி !

நா பெ கணேசன்:  திராவிடர்களும் ஆளுநரும் - முரசொலி !
அசல் மனு தரும சாஸ்திரத்தின் பத்தாவது அத்தியாயத்தின் 33 வது சூத்திரத்தில் "பௌண்ட்ரகாஷ் சௌட்ர த்ரவிடா காம்போஜாயவநா ஷகா பாரதா பஹ்ளவாஷ் சீநா கிராதா தரதாகஷா" என்கிறது.
மகாபாரதத்தில் "திராவிடம்" வருகிறது.
காஞ்சிபுராணத்தில் "திராவிடம்" இருக்கிறது.
தாயுமானவர் "திராவிடம்" சொல்கிறார்.
தஸ்யூக்கள், அடிமைகள், திராவிடர்கள், சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிறார் அம்பேத்கர்.
"தமிழ் - தமிழன் - தமிழம்" என்று சொல்லத் தெரியாத வட இந்தியர்களால் - அதாவது "ழ" என்ற எழுத்தை உச்சரிக்க முடியாதவர்களால் திராவிடம் என்று உச்சரிக்கப்பட்டது என்பதே பாவாணர் போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் முடிவு.
"மொழி வரலாறு" எழுதிய மு. வரதராசனார் அவர்கள், வால்மீகி இராமாயணத்திலும், மனு நூலிலும், பாரதத்திலும், பாகவதத்திலும் திராவிடர் என்ற சொல் வழக்கு உள்ளது என்கிறார்.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் குமரிலப்பட்டர் என்பவர் ஆந்திர திராவிட பாஷா என்ற தொடரை வழங்கியுள்ளார். அவர் கருத்துப்படி ஆந்திரா என்பது தெலுங்கைக் குறிக்கவும், திராவிடம் என்பது தமிழைக் குறிப்பதாகிறது.


1573 இல் தாரநாத் என்பவர் எழுதிய புத்தமத நூலில் "திரமிள" என்ற சொல் தமிழைக் குறிக்கிறது.
தென்னாட்டு மக்களை பொதுவாகக் குறிக்க திராவிடர் என்ற சொல்லை வடநூல்கள் வழங்குகின்றன.
தமிழில் உள்ள ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்கள் "திராவிட வேதம்" என்று குறிக்கப்படுத்தலும் உண்டு.
சங்கராச்சாரியார் திருஞானசம்பந்தரை "திராவிட சிசு" என்று கூறியுள்ளார்.
விந்திய மலைக்கு தெற்கே வழங்கிய மக்களை மகாராஷ்டிரர், ஆந்திரர், திராவிடர், கருநாடகர், கூர்ச்சரர் என்று பகுத்து பஞ்ச திராவிடர் என்று கூறும் மரபும் வடமொழியில் காணப்படுகிறது. தமிழைத் திராவிடம் என்ற பெயரால் குறிப்பிட்டமைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
தமிழ் என்ற சொல்லுக்கு நேரான வடசொல் திராவிடன் என்பதைக் கால்டுவெல் எடுத்துக்காட்டியுள்ளார்.
தமிழ், திராவிடம் என்பவை வேறுபட்ட இரண்டு சொற்கள் போல காணப்படினும் ஒன்றன் திரிபே மற்றது என்கிறார் மு. வ.
"தமுளியா என்ற திரிபை டச்சு பாதிரிமார்களும், தமிழிரி என்ற திரிந்த வடிவத்தை ரோமர்களும், தெஹிமோலோ என்ற திரிபைச் சீனரும் வழங்கியது போலவே தமிழொலி பயிலாத ஆரியர், தமிழ் என்பதையே தமிளோ, தரமிளோ, திரமிளல்ம், திரவிடம், திராவிடம் எனத் திரித்து வழங்கினர் எனக் கொள்வதே பொருந்தும்" என்கிறார் மு.வ.
இரா. இராகவய்யங்கார் தான் எழுதிய "தமிழ் வரலாறு" நூலில், "வடமொழியாளர், த்ரமிளர் எனத் தமிழ்மொழியாளரையும், த்ரமிளம், த்ராவிடம் என அவர் நாட்டினரையும், மொழியினரையும் குறித்தனர் என்பது உண்மை" என்கிறார். "விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள நாட்டைப் "பஞ்ச திராவிடம்" என்று வடநூலார் வழங்குதல் நூல்களிற் கண்டது. "ஐவகைத் திராவிடத்தினும் வேறாய்த் தெற்கே தலைசிறந்தது தமிழே யென்பதும்" என்று சொல்லும் அவர், காஞ்சி புராணத்தில் இருந்தும் மேற்கோள் காட்டுகிறார். "எவ்வினையுமோப்புதலாற் றிராவிட மென்றியல் பாடை" என்கிறது.
"திரவிடம்" என்ற சொல்லைத் தமிழைக் குறிக்கப் பயன்படுத்துகிறார் தாயுமானவர். "வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்" என்கிறார் தாயுமானவர்.
நிகண்டுகள், மற்ற நூல்களில் திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு குறித்து மொழியாராச்சியாளர் கே.வி. இராமகிருஷ்ணராவ் தனது ஆய்வுக்கட்டுரையில் பல்வேறு மேற்கோள்களைச் சுட்டி காட்டுகிறார்.
7, 8, 11 ஆகிய நூற்றாண்டுகள் என்று சொல்லப்படும் நாமதீப நிகண்டில் தமிழ் என்பதற்கு "திராவிடம்" என்ற சொல்லை சிவசுப்பிரமணிய கவிராயர் பயன்படுத்தி இருக்கிறார்.
9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம், நாட்டில் பேசப்படும் 18 மொழிகளுள் ஒன்றாக திராவிடத்தைக் குறிப்பிடுகிறது.
"காந்தத்து உபதேசக் காண்டம்" என்ற நூல் அகத்தியருக்கு சிவபெருமான் திராவிடத்தின் இலக்கணத்தை எப்படி சொல்லிக் கொடுத்தார் என்கிறது.
பிரயோக விவேகம் நூலின் ஆசிரியர் சமஸ்கிருதச் சொல்லான திரமிளம் தான் தமிழ் என்றாகி இருக்கவேண்டும் என்று மாற்றி சொல்கிறார்.
"பௌண்ட் ரகாஷ் சௌட்ர த்ரவிடா காம்போஜாய வநா ஷகா பாரதா பஹ்ளவாஷ் சீநா கிராதா தரதா கஷா" என்கிறது மனுதரும சாஸ்திரத்தின் 10 வது அத்தியாயத்தின் 33 வது சூத்திரம். அதாவது பௌண்டாம், ஒளண்டாம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தாதம், கசம் - ஆகிய இத்தேசத்தை ஆட்சி செய்தவர்கள் அனைவரும் சூத்திரனாய் விட்டார்கள் என்கிறது மனுசாஸ்திரம்.
திராவிடர்கள் தகுதியிழந்த விலக்கப்பட்ட சத்திரியர் மற்றும் விர்ஸபனுடைய மகனான திராவிடர் வழி வந்தவர்கள் என்ற பொருளில் மனு சொல்வதாகவும் வடமொழி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
பாரத ராசசூய பருவத்து வியாசர், "திராவிடர் காமதேனுவின் பால்மடியிலிருந்துண்டானவர்" என்கிறார்.
வியாசபாரதம் சபா பருவத்தில் பாண்டிய நாட்டின் மணலூர்புரத்து அரசன் மலயத்துவச பாண்டியனை அருச்சுனனுக்கு மாமனாகச் சுட்டப்படுகிறது. மகாபாரதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தகுதியிழந்த சத்திரியர்களின் பட்டியலில் திராவிடர் என்போர் தென்னிந்தியாவைச் சேர்ந்தோர் என்று உள்ளது.
"அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம்
  சிந்து சோனகம் திரவிடம் சிங்களம்
  மகதம் கோசலம் மராடம் கொங்கணம்
  துளுவம் சாவகம் சீனம் காம்போசம்
  பருணம்பிப் பரமெனப் பதிணென்பாடை" என்னும் திவாகரம் நிகண்டு கூறுகிறது.
நாலாயிர திவ்ய பிரபந்தம் "திராவிட வேதம்" என்று அழைக்கப்பட்டது.
திருவாய்மொழியை "திராமி டோயுபனிஷத்" என்கிறார்கள். அதாவது தமிழ் உபநிடதம் என்று பொருள்.
பக்தி தோன்றியது "திராவிடத்தில்" என்கிறது பாகவதம். "உத்பந்நா திராவிடே" என்கிறது பாகவதம்.
பாகவத புராணம் சத்தியவிருதனை திராவிடர்களின் அரசன் என்கிறது.
ஏழாம் நூற்றாண்டில் குமாரிலபட்டர் ஆந்திர திராவிட பாஷா என்கிறார்.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த விசிஸ்டாதுவத இலக்கியம் "திரமிடாச்சார்யார்" என்று குறிப்பிடுகிறது.
தசகுமார சரித்திரம் திராவிட நாட்டைக் குறிப்பிட்டு அதில் காஞ்சி நகரம் உள்ளதாகச் சொல்கிறது.
கி.பி. 470 இல் வச்சிர நந்தி என்ற சமண முனி தனது சமயத்தைப் பரப்புவதற்காக "திரமிள சங்கம்" என்ற சங்கத்தை மதுரையில் உருவாக்கினார்.
யுவான்சுவாங் தமிழகம் வந்தபோது தன் குறிப்புகளில் காஞ்சியை திராவிட நாட்டின் தலைநகராகச் சொல்கிறார்.
பழங்காலத்திலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டுகளில் சமஸ்கிருத மொழியில் காணப்படும் திரவிட, திராவிட, திரமிட ஆகியவையும், பிராகிருத மொழியில் சொல்லப்படும் தமில, தமிள, த்ரமிட, திரமிள முதலிய பொதுப்பெயர் தமிழ் மொழியைத்தான் சுட்டுகின்றன என்கிறார் மொழியியலாளர் கே.வி. இராமச்சந்திரராவ்.
நன்றி: முரசொலி
...........................
1) கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திரிபிடகா புத்த வாய்மொழி இலக்கிய மூலம் இந்தியாவில் அந்தக் காலத்தில் மூன்று முக்கிய மொழிகள் இருந்ததாகவும் அவை மாகதி, அந்தகா, தமிள...
 2) திரிபிடகா இலக்கியத்துக்கு கி.பி.5-ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய தம்ம பாலாவும் அந்த காலத்தில் மாகதி, அந்தகா, தமிள ஆகிய மூன்றும்தான் முக்கிய மொழிகளாக இருந்ததாக கூறியிருக்கிறார்.
 3) கி.பி. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பவுத்த மகாயான நூலாகிய லலிதா விஸ்தாரத்தில் புத்தர் கற்ற பல மொழிகளில் ஐந்தாவதாகக் "திராவிடி" என்று தமிழ் குறிப்பிட்டிருக்கிறார்.
 4) சுமார் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் லலிதவிஸ்தரம் என்னும் பௌத்த நூலில் 64 வகை எழுத்துகள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் திராவிடி என்னும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 5) கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சேர்ந்த வராகமிகிரர் தம் நூலில் "த்ரவிட" என்று தமிழைக் குறிப்பிட்டிருக்கிறார்.  
 6) கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டரின் தந்திர வர்த்திகாவில் "திராவிடாந்திர பாஷா" அல்லது "திராவிட பாஷா" என்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன. இவை முறையே தமிழ், தெலுங்கையும் அல்லது தமிழ் மற்ற திராவிட மொழிகளையும் குறிக்கின்றன.
 7) கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பட்டபாணன்,  தன் காதம்பரி என்னும் உரைநடைக் காப்பியத்தில் சந்திரபீடம் என்பவள் காளி கோவிலில் தமிழகத் துறவியைச் சந்தித்தபோது ""ஜரத் த்ரவிட தார்மிகஸ்ய இச்சய நிஸ்ருஷ்டை"" என்று வருணித்துள்ளான். இங்கு, த்ரவிட என்ற சோழ தமிழக என்ற பொருளில் கையாளப் பட்டிருக்கிறது.
 😎 சமண ஆகம நூலாகிய சுருதாவதாரம் என்னும் சமஸ்கிருத நூலின் ஆசிரியராகிய பூதபலி குறித்து ""தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ரவிட தேஸான்"" என்று குறிப்பு வருகிறது. இங்குத் த்ரவிட என்ற சொல் தமிழ் என்ற பொருள் தருகிறது.
 9) ஒரு சிவனடியாரைப் பற்றித் (திருஞான சம்பந்தரை) குறிப்பிடுகையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதி சங்கரர் "திராவிட சிசு" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
10) கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் தமிழ் என்ற பொருளில் "திராவிட பாஷா" என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.
11) கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் நாகவர்மா சாந்தோம்புதி என்ற கன்னடக் கவிதை பற்றிய நூலில் ""திராவிடாந்திர கர்னாடாதி சட் பஞ்சாசத் பாஷைகளுள் - "" என்ற தொடரைப் பயன்படுத்தியிருக்கிறார். இங்குத் திராவிட என்ற சொல் தமிழைக் குறிக்கிறது.
12) கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகவர்மனின் கன்னடக் காதம்பரி என்னும் காவியத்தில் ""ஹாஸ்ய பீபத்ஸாதி நாரா ரஸங்களிம் தொந்திக் ஜரத் த்ரவிள தார்மீக ஜனங்களிம்"" என்று தமிழகத் துறவிகளை ஆசிரியர் வருணித்துள்ளார்.
13) கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பால்குரிகி சோமநாதர் என்ற தெலுங்குப் புலவர் பண்டீதராத்ய சரிதத்தில் பருவதப் பரிகரனத்தில் ""-- அருதெந்தனட்லியம் பரவதேசம்பு...- வருசயி த்ராவிட பாஷ சாங்கமுக"" என்று ஸ்ரீ சைலத்துக்குச் செல்லும் தமிழகப் பக்தர்கள் தமிழில் பாடிக்கொண்டு போவதாகத் தெலுங்கில் பாடியிருக்கிறார்.
14) கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆசார்யரான ஸ்ரீவேதாந்த தேசிகர், ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.
15) கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கங்கா தேவியால் இயற்றப்பட்ட மதுர விஷயம் என்ற சமஸ்கிருத நூல் தமிழகத்தைத் ""திராவிட தேசம்"" என்றும், தமிழ் மன்னர்களைத் "திரமிள அரசர்கள்" என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
16) 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மல்லனாரியனின் பாவ சிந்தாரத்னம் என்னும் காவியத்தில் "" - த்ரிண்யனுகம் திருஞானி சம்பந்திச்... - பணிதெயம் த்ராவிடதோளொ ரெதுதம்..."" என்று திருஞான சம்பந்தர், குலச்சிறையார், மனுநீதிச் சோழன் ஆகியோர்களையும், தமிழையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
17) 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட இராஜசேகர விலாசம் என்ற காவியத்தில் "" - ...பிள்ளை நை நாரரீம்... - பாகிர் தெந்தாதி ஆசமம் த்ராவிடபாஷா பேதம்" எனத் தமிழை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
18) சுமார் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் லலிதவிஸ்தரம் என்னும் பௌத்த நூலில் 64 வகை எழுத்துகள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் திராவிடி என்னும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே சான்றுகளிலிருந்து திராவிட(ம்) என்ற சொல் பழங்காலத்தில் தமிழை மட்டும் குறித்தது என்றும், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தோன்றிய பிறகு தென்னிந்திய முக்கிய நான்கு மொழிகளையும் குறிக்க ஆரம்பித்தது என்றும் தெரிய வருகிறது.
தற்காலத்தில், திராவிட என்ற சொல் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் அனைத்தையும் அல்லது அதனுடன் தொடர்புள்ள பிற மொழிகளையும் குறிக்கிறது.
ஸ்டென் கொனோவ் தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிட என்ற சொல் தோன்றியதாகக் கருதுகிறார்.
ஏ.எல். பாஷம் என்பவர் தமிழ் என்ற சொல் தமிழ், தமிழ, தமில், த்ரமிள, த்ரமிட, த்ரவிட என்று மாறியதாக் கூறுவார்.
தமிழ் –> த்ரமிழ –> த்ரமிட –> த்ரவிட –> திராவிட என்பது மணிப்ரவாள நடை என்று சமஸ்கிரத உச்சரிப்பு மயமாக்கப்பட்ட 'தமிழே' .
தமிழம் என்பது தமிள, தவிள, தவிட என்று பிராகிருதத்தில் திரிந்த பின்பு, தமிள, தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.
………….
தமிழ், தமிழகம்,  தமிழ்நாடு என்ற சொற்கள் சொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் பல இடங்களில் காணப்படுகின்றன
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோடு ((தொல்காப்பியம் பாயிரம் ))
இயற்சொல் தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்கும்... ((தொல்காப்பியம்-சொல்லதிகாரம்: எச்சவியல் அதிகாரம் 2))
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச் சொல் கிளவி - ((தொல்காப்பியம்-சொல்லதிகாரம்: எச்சவியல் அதிகாரம் 4))
தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து...((புறநானூறு 58:13))
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல் ((புறநானூறு 50:8-10))
தமிழ் கெழு கூடல் தண்கோல் வேந்தெ ((புறநானூறு 58:13))
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப ((புறம் 168:18))
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேயத்த பன்மலை இறந்தே ((அகநானூறு களிற்றியானை நிரைபாட்டு 31 வரிகள் 14-15))
தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே ((சிறுபாணாற்றுப்படை 66-67))
இமிழ் கடல் வரைப்பிற் றமிழக மறிய...
தமிழ் முழுதறிந்த தன்மையனாகி...
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாட்டு...
தென் தமிழ்நாடு ஒருங்கு காண...
இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய... ((சிலப்பதிகாரம்))
சம்புத் தீவினுட் டமிழக மருங்கில் ((மணிமேகலை))
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க ((பதிற்றுப்பத்து))
...
திருநாவுக்கரசர் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றே பாடியுள்ளார்.
தென் இந்திய மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைக் குறிக்கும் திராவிடம் என்ற சொல் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும்.
~Pearl~
நா பெ கணேசன்

கருத்துகள் இல்லை: