புதன், 9 ஆகஸ்ட், 2023

செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனைக்கிடையே தொடரும் அமலாக்கத்துறை விசாரணை

 minnambalam.com -  christopher  :  மருத்துவ பரிசோதனைக்கிடையே தொடரும் அமலாக்கத்துறை விசாரணை!
சட்டவிரோத பணப்  பறிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு இருந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றிரவு 8.30 மணிக்கு மேல் புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்தனர்.
சிறைத்துறை விதிகளின் படி கஸ்டடியில் செல்லும் கைதி சாப்பிட்டு இருக்க வேண்டும் என்பதால் சிறையிலேயே வழங்கப்பட்ட 4 இட்லியை அமைச்சர் செந்தில் பாலாஜி சாப்பிட்டார்.


பின்னர் அங்கிருந்து மிகுந்த பாதுகாப்புடன் அவரை கஸ்டடி எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உயரதிகாரிகள் தங்கும் 3 ஆவது மாடியில் உள்ள அறையில் தங்க வைத்தனர்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி செந்தில் பாலாஜியிடம் நேற்று இரவு விசாரணை ஏதும் நடத்தாமல்,

‘பயணக்களைப்பில் இருப்பீர்கள் என்பதால் ஓய்வு எடுங்கள்’ என்று கூறி பாலும் பழமும் கொடுத்துவிட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை முறைப்படி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை தொடங்கியது. தொடர்ந்து பிற்பகல் 3 முதல் 4 மணி வரையும் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே மதிய உணவுக்காக மினி மீல்ஸ் உணவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

ஆனால் அவர், ”எனக்கு மினி மீல்ஸ் வேண்டாம் தயிர் சாதம் வேண்டும்” என்று கேட்டதால் பிரபல சைவ ஹோட்டலில் இருந்து ’தயிர் சாதம்’ வாங்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் கொடுத்ததாக  சாஸ்திரி பவன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும் என்பதால் நீதிமன்றம் உத்தரவுப்படி ஷிப்ட் முறையில் 2 இ.எஸ்.ஐ மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து வருகின்றனர்.

தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கிய நிலையில், 9 மணிக்கு முடிவு பெற்றுள்ளது.

அவர் மருந்து உட்கொள்ள வேண்டும் என்பதால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி விசாரணை தற்போது முடிவு பெற்றுள்ளது.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளின் மூன்றாம் நாள் விசாரணை நாளை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது.

இன்னும் 3 நாட்கள் விசாரணை நடைபெற உள்ள நிலையில் செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ள சாஸ்திரி பவன் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: