தினமணி : ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை மக்களவைத் செயலகம் வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதிநீக்கம் வாபஸ் குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று முடிவெடுப்பார் என காங்கிரஸ் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை மக்களவைத் செயலகம் இன்று வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் வயநாடு எம்.பி.யாக தொடர்வார் எனவும் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாக முதல் பேச்சாளராக ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
கடந்த மார்ச் 24ல் ராகுலின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் 136 நாட்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது. ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதை இந்தியா கூட்டணி கட்சியினர் கொண்டாடினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இனிப்புகளை பரிமாறி மகிழ்ந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக