வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

மோடி : அடுத்த அவசர நிலைக்கு தயாராகுங்கள் ஜி 20 மாநாட்டில் பிரதமர் எச்சரிக்கை

 மாலைமலர் அடுத்த அவரசநிலைக்கு தயாராகுங்கள்.. ஜி20 மாநாட்டில் பயம்காட்டிய மோடி..!
அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது தான் ஜி20.
முக்கிய சர்வதேச பொருளாதார பிரச்சினைகளில் உலகளாவிய ஒத்துழைப்புடன் உறுப்பினர் நாடுகளுக்கு ஒரு கட்டமைப்பை வடிவமைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் சுழற்சி முறையில் தரப்படுகின்றது.
1 டிசம்பர் 2022 முதல் 30 நவம்பர் 2023 வரை ஜி20 அமைப்பின் தலைவர் பதவியை இந்தியா வகிப்பதால் 2023 ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று இருக்கிறது.


இதையொட்டி ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக்குழு கூட்டம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஜி20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது. இதில் 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், "

அடுத்து ஒரு பெரும் சுகாதார அச்சுறுத்தல் மற்றும் சுகாதார அவசரநிலை வரும் போது அதனை எதிர்கொள்ளும் வகையில் நம்மை நாம் இப்போதே தயார் செய்து கொள்ள வேண்டும். உலக சுகாதாரத்திற்கான பல உலகளாவிய முயற்சிகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒன்றிணைத்து நாம் ஒரே தளத்தில் கொண்டு வர முடியும். இதன் மூலம் ஒரே ஆராய்ச்சியை வேறு வடிவத்தில் வேறொருவர் செய்வதும் அதனால் நேரமும், பணமும் விரயமாவதை தவிர்க்கலாம்."

"நமது புது முயற்சிகள் அனைத்தும் பொது நன்மைக்காக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் அனைவருக்கும் பயன்படும்படி பொதுவானதாக மாற்ற வேண்டும். இதன் மூலம் உலகளாவிய ஆரோக்கிய கட்டமைப்பை உருவாக்குதல் சாத்தியமாகும். "நிக்ஷே மித்ரா" எனப்படும் காசநோய் ஒழிப்பிற்கான நண்பர்கள் அமைப்பின் மூலம் மக்களின் பங்களிப்புடன், இந்தியா, முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கான 2030 ஆம் வருடத்திற்கு முன்னதாகவே காசநோயை ஒழித்து விடும்," என்று மோடி கூறியிருந்தார்.

2020ல் உலகெங்கும் பரவிய கொரோனா பெருந்தொற்றையும் அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் உயிர்சேதம் ஆகியவற்றை மறைமுகமாக குறிக்கும் விதமாகத்தான் இந்த உரையில் மோடி 'அடுத்த சுகாதார அவசரநிலை' என குறிப்பிட்டதாக சமூக வலைதளங்களில் சில பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: