சனி, 19 ஆகஸ்ட், 2023

மதுரையில் முன்னாள் அரசு அதிகாரியின் குடும்பமே தற்கொலை; குடிதண்ணீர் கூட வாங்க காசு இல்லாததால் விபரீத முடிவு!

மதுரையில் முன்னாள் அரசு அதிகாரியின் குடும்பமே தற்கொலை

tamil.samayam.com - அன்னபூரணி L : முன்னாள் அரசு அதிகாரியின் குடும்பம் தற்கொலை:
மதுரை மாநகர் தாசில்தார் நகர் அன்பு நகர் ராஜராஜன் தெருவை சேர்ந்த பாண்டியன் என்ற மருத்துவர் சுகாதாரத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது மருத்துவர் பாண்டியன் தனது மனைவி வாசுகி மற்றும் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவர் பாண்டியன் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறிய நிலையில், பாண்டியனின் மனைவி வாசுகி மற்றும் திருமணமாகாத நிலையில் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகிய மூவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். பாண்டியன் பிரிந்துசென்ற விரக்தியில் இருந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளயே முடங்கியுள்ளனர்.


குடிதண்ணீர் கூட வாங்க காசு இல்லாததால் விபரீத முடிவு:

இதன் காரணமாக வீட்டிற்குள்ளயே இருந்த காரணமாக உரிய வருமானமின்றி வீட்டில் பணத்தை செலவு செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று அந்த பணத்தில் இருந்து சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உணவிற்கு வழியின்றி வறுமை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்தாத நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருட்டிலேயே வசித்து வந்துள்ளனர். மேலும் வீட்டில் மோட்டார் பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் இன்றி இயற்கை உபாதைகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில் வசித்து வந்ததோடு, அவ்வபோது வாரத்திற்கு ஒரு முறை மட்டும் குடிநீரை வாங்கி அதனை குடித்தே வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீரும் வாங்காத நிலையில் வீடு பூட்டியே கிடந்துள்ளது.

இதனையடுத்து நேற்று காலை வீட்டை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் அண்ணாநகர் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை திறந்து பார்த்தபோது கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையிலும், வாசுகி மற்றும் உமாதேவி ஆகிய இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குறித்து தடயவியல் கைரேகை நிபணர்கள் ஆதாரங்களை எடுத்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சினேகபிரியா தலைமையிலான் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழுகிய நிலையில் இருந்த மூன்று சடலங்களையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். சொந்த வீட்டில் வசித்த நிலையிலும் வீட்டற்குள்ளயே முடங்கிய நிலையில் குடும்ப வறுமை காரணமாக மூவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக மக்கள் நெருக்கமான பகுதியில் குடியிருந்தும் அருகில் உள்ளவர்களிடம் பேசாமல் வீட்டிற்குள்ளயே முடங்கியதால் அவர்கள் குறித்து பெயர் கூட தெரியாத நிலை ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: