திங்கள், 29 மே, 2023

40சதவீத கமிஷனால் கதறும் கான்ட்ராக்டர்கள்!

40 percent commission of the screaming contractors!  40சதவீத கமிஷனால் கதறும் கான்ட்ராக்டர்கள்!

 தினமலர் : ''இன்னும் ஆட்டம் அடங்கலை ஓய்...'' என, 'பில்டர்' காபியை பருகிய படியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சி கூட்டத்தை, தொடர்ந்து நடத்தாம ரத்து பண்ணிட்டே போறா...  கடந்த,  ௨௫ம் தேதி கூட்டம் நடத்தி, 140 தீர்மானங்களை நிறைவேற்ற இருந்தா ஓய்...
''ஆனா, கவுன்சிலரா  இருக்கற, 'மாஜி'யின் மகன் முட்டுக்கட்டையால கூட்டத்தை ரத்து பண்ணிட்டா...  கூட்டம் நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி, அடிப்படை வசதிகளுக்கான பணிகளை துவங்க இருந்தா ஓய்...
''ஆனாலும், 'கட்டிங்' பேரம் படியாம போனதால, 'மாஜி'யின் மகன் கூட்டத்தை நடத்த விடாம தடுத்துட்டார்... இத்தனைக்கும், இவரது அடாவடியால தான், அவரது பதவி, தந்தை பதவிகளை சமீபத்துல பறிச்சிருக்கா... அப்புறமும் அடங்க மாட்டேங்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''சரி, ஆசீம் நாளைக்கு பேசுறேன்...'' என, மொபைல் போனை, 'கட்' செய்தபடியே வந்த அன்வர்பாய், ''உதவியாளர்கள் கெத்து காட்டுறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.

''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்றது தான், சார் - பதிவாளர்கள் வேலை... ஆனா, தமிழகம் முழுக்க, 200 இடங்கள்ல, முழுநேர, சார் - பதிவாளர்களுக்கு பதிலா, உதவியாளர்கள் தான் பொறுப்புல இருக்காங்க பா...

''ஒரு, சார் - பதிவாளர் தவறான பத்திரத்தை பதிவு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திட்டா, அவரை பதிவு அல்லாத பணிக்கு மாத்திடுவாங்க... ஆனா, சார் - பதிவாளர்களுக்கு இருக்கிற இந்த விதி, உதவியாளர்களுக்கு இல்லை பா...

''இப்படி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதா, 20க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் மேல குற்றச்சாட்டு இருக்குது... ஆனாலும், 'எங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது'ன்னு அவங்க கெத்தா வலம் வர்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கமிஷன் கேட்கிறதுலயும் ஒரு வரைமுறை வேண்டாமா வே...'' என்ற ஆதங்கத்துடன், கடைசி தகவலுக்குள் நுழைந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஆம்பள்ளி சுற்று வட்டார பகுதிகள்ல போன மாசம் கட்டிய கழிவுநீர் கால்வாய், 15 நாள்லயே இடிஞ்சு விழுந்துட்டு... அந்த கிராமத்துலயும், ஊத்தங்கரை பகுதியிலயும், தரமில்லாத, 'எம்.சாண்ட்' பயன்படுத்தி, கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணிகளை, ஊரக வளர்ச்சி துறை கான்ட்ராக்டர்கள் செய்யுதாவ வே...

''இது பத்தி கான்ட்ராக்டர்களிடம் கேட்டா, 'ஆளுங்கட்சியினர், ௨௦ பர்சன்ட், கலெக்டர் ஆபீஸ்ல ௧௦, பி.டி.ஓ., ஆபீஸ்ல, ௧௦ன்னு, ௪௦ சதவீதம் கமிஷன் தொகை கேட்காவ... மீதம் இருக்கிற, 6-0 பர்சன்ட் தொகையில, பணிகளையும் தரமா செஞ்சு, எங்களுக்கான லாபத்தையும் எப்படி எடுக்கிறது'ன்னு எதிர் கேள்வி கேட்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

''கலெக் ஷன், கரப்ஷன், கமிஷன் இல்லாத ஆட்சி தருவோம்னு, தேர்தல் பிரசாரத்துல ஸ்டாலின் முழங்கியது இன்னும் என் காதுல ஒலிச்சுண்டே இருக்கு ஓய்...'' என்றபடியே, குப்பண்ணா எழ, மற்றவர் களும் கிளம்பினர்.

கருத்துகள் இல்லை: