வியாழன், 1 ஜூன், 2023

ஒன்றிய அரசின் அவசர சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் எதிர்க்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

 தினத்தந்தி : மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் எதிர்க்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
சென்னை,
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய பிறகு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
டெல்லி மாநில மக்களின் நலனுக்காக திமுக அரசு தோள் கொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது.


முழு சுதந்திரம் இல்லையென்றால் அரசை நடத்த முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் எதிர்க்க வேண்டும். மாநிலங்களவையில் சட்டத்தை எதிர்த்து வென்றால் 2024 தேர்தலுக்கு முன் அரையிறுதியில் வென்றது போல் இருக்கும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜகவை வீழ்த்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து பஞ்சாப் முதல்-மந்திரி பக்வந்த் மன் பேசியதாவது:-

அவசர சட்டத்தை எதிர்க்க ஆதரவு கோரி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க வந்துள்ளோம். ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும் அவசர சட்டங்கள் மூலமும் ஆட்சி செய்ய நினைக்கிறது பாஜக. பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டுசெல்ல வேண்டிய நிலை உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை: