வியாழன், 23 பிப்ரவரி, 2023

ஈரோடு கிழக்கு; திமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல்; இருவர் கைது - என்ன நடந்தது?

vikatan.com : ஈரோடு கிழக்கு; திமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல்; இருவர் கைது - என்ன நடந்தது?
நாராயணசுவாமி.மு, க .தனசேகரன்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. அடுத்தடுத்து தலைவர்களின் முற்றுகையால் ஈராேடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் திக்குமுக்காடிப் போயிருக்கின்றனர்.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு வீரப்பன்சத்திரம், தெப்பக்குளம் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சிலர் வாகனத்தில் அந்த வழியாக பிரசாரம் செய்தபடியே வந்திருக்கின்றனர்.
தி.மு.க - நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல்
அப்போது அந்தப் பகுதியில் நின்றிருந்த தி.மு.க-வினர், நாம் தமிழர் கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினரும் பதிலுக்கு கோஷம் எழுப்பியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தி.மு.க-வினர் கற்களை எடுத்து எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, நாம் தமிழர் கட்சியினரும் கற்களை தி.மு.க-வினர் மீது வீசியிருக்கின்றனர். மேலும், தி.மு.க-வினர் இரும்புக் கொடிக்கம்பங்களால் நாம் தமிழர் கட்சியினரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவர்களும் பதிலுக்கு தி.மு.க-வினர்மீது தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இருதரப்பினரையும் விலக்கிவிட முயன்றனர். ஆனால், இரு தரப்பிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், போலீஸாரையும் இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை விலக்கிவிட்டனர். இந்தத் தகவலறிந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது சீமான், ``இதுதான் திராவிட அரசியல். இவர்களை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும்” என்று மைக்கில் கூறியபடியே வந்தார். அவர் வந்த வாகனத்தின்மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் சீமான் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே வந்து சாலைமறியலில் ஈடுபட முயன்றார். தகவலறிந்து மாவட்ட எஸ்.பி சசிமோகன், டி.எஸ்.பி ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் சீமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.

அதற்குள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. தேர்தலை நிறுத்துவதற்காக இது போன்ற செயலில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபடுவதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர்.

சீமான் பிரசாரம்
நாம் தமிழர் கட்சியின் தரப்பில், ``அமைதியான முறையில் பிரசாரம் மேற்கொண்டிருந்த எங்களை, அவர்கள்தான் முதலில் தாக்கினர். ஆளுங்கட்சியாக இருப்பதால் தி.மு.க-வுக்குச் சாதகமாக காவல்துறையினர் செயல்பட்டுவருகின்றனர். கலவரத்தைத் தூண்டிவிட தி.மு.க-வினர்தான் முயற்சி செய்தனர்" என்று குற்றம்சாட்டினர்.

இந்தத் தாக்குதலில் தி.மு.க தரப்பில் மேட்டுப்பாளையம் தி.மு.க நகரச் செயலாளர் முகமது யூனுஸ் (56) உள்ளிட்ட ஆறு பேரும், நாம் தமிழர் கட்சி தரப்பில் சென்னையைச் சேர்ந்த ரவிக்குமார், புதுக்கோட்டையைச் சேர்ந்த மதன் (22), விழுப்புரம் மாவட்டம், வளையப்பட்டைச் சேர்ந்த முத்துகுமரன் உள்ளிட்ட ஐந்து பேரும், போலீஸார் தரப்பில் சிறப்பு காவல்படையைச் சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த பிரபுதேவா, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புமணி, நிஷாந்த்குமார் ஆகியோரும் காயமடைந்தனர். நேற்று இரவு நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் கோவையைச் சேர்ந்த கணேஷ்பாபு, ஈரோடு திண்டலைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவரை போலீஸார் இன்று கைதுசெய்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: