புதன், 22 பிப்ரவரி, 2023

அன்புஜோதி ஆசிரமம்: அன்பின் பெயரால் ஆதரவற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சி அனுபவங்கள்

அன்பு ஜோதி
ஜுபின், மரியா

 bbc.com :   ஆதரவற்றோரையும் கைவிடப்பட்டோரையும் பராமரிப்பதற்காக நடத்தப்பட்ட அன்புஜோதி என்ற தொண்டு நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் கொடுமைகள்,
அத்தகைய இல்லங்கள் குறித்த கண்காணிப்புகள் மிக பலவீனமாக இருப்பதைக் காட்டியிருக்கின்றன. இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது?
ஒரு சாதாரணமான ஆட்கொணர்வு மனு இவ்வளவு பெரிய குற்றத்தை வெளியில் கொண்டு வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த இல்லத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் பயங்கரங்கள், திரைப்படங்களில் காட்சிகளாக இடம்பெற்றால்,
அவை தணிக்கையைத் தாண்டி வருவதே கடினம். அந்த அளவுக்கு கொடூரமான நிகழ்வுகள் இந்த இல்லத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
திருப்பூரைச் சேர்ந்த ஹலிதீனின் நண்பர் சலீம்கான். இவர் அமெரிக்காவில் வசித்துவந்தார்.


ஆதரவற்ற தனது மாமா ஜாபருல்லாவை பார்த்துக்கொள்ள ஏதாவது ஆசிரமம் கிடைத்தால்,
அதில் சேர்த்துவிடும்படி ஹலிதீனிடம் சொன்னார். அதன்படி, ஹலிதீன் விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கிவந்த ஆதரவற்றோருக்கான அன்பு ஜோதி இல்லத்தில் ஜாபருல்லாவைச் சேர்த்துவிட்டார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சலீம் கான் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்தபோது, தனது மாமாவைப் பார்க்க அந்த இல்லத்திற்குச் சென்றிருக்கிறார். ஆனால், அவர் அங்கு இல்லை. பெங்களூரில் உள்ள தங்களது இல்லத்திற்கு அவரை மாற்றியிருப்பதாக அன்பு ஜோதி இல்லத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து ஹலிதீனும் சலீம் கானும் பெங்களூரு சென்று, அவர்கள் சொன்ன இடத்தில் பார்த்ததில் அங்கே ஜாபருல்லா இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டுமென்பதை உணர்ந்த ஹலிதீனும் சலீம்கானும், ஜாபருல்லாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தால், அவர்கள் புகாரை ஏற்க மறுப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்துதான் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி வருவாய்த் துறையினர், காவல்துறையுடன் சேர்ந்து இந்த இல்லத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது எந்தவித அனுமதியும் இன்றி இந்த ஆசிரமம் நடைபெற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

மேலும், அங்கு தங்கியிருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள் பாலியல் வன்கொடுமை, அடித்துத் துன்புறுத்தல், குரங்குகளை விட்டு கடிக்கவிடுதல் போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து இந்த ஆசிரமம் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, அங்கிருந்த ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேர் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சுமார் 45 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ள நிலையில், சுமார் 60 பேர் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்த காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.

விக்கிரவாண்டியிலும் சின்ன முதலியார் சாவடி ஆகிய இடங்களில் இருந்த இந்த ஆசிரமத்தின் கிளைகளில் இருந்த 45 பெண்கள் உட்பட 166 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர் விசாரணைகளில், பல்வேறு முறைகேடுகள் இந்த ஆசிரமம் தொடர்பாக நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பாக, 2005ஆம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த ஜுபின் பேபியும் அவரது மனைவி மரியாவும் துவங்கி நடத்தி வந்த இந்த ஆசிரமம், இது போன்ற இல்லங்கள் இயங்குவதற்கு பெறப்பட வேண்டிய முறையான அனுமதிகள் எதுவுமே பெறாமல் இயங்கிவந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

குறிப்பாக, மனநலம் குன்றியோரை தங்களிடம் வைத்துப் பராமரிக்க, மாநில மனநல மருத்துவ ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். அப்படி எந்த அனுமதியையும் பெறாமல், மன நலம் பாதிக்கப்பட்ட பலரையும் இந்த இல்லம் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட பலர் சங்கிலிகளில் கட்டிப்போடப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டே இந்த ஆசிரமத்தில் சோதனை நடத்திய ஆணையம், இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்து, உடனடியாக பதிவுசெய்யும்படி வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், ஆசிரமத்தை நடத்தியவர்கள் அப்படி எதையும் செய்யவில்லை.

விவகாரம் பெரிதாக வெடித்த பிறகு, ஊடகங்களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி, கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் இந்த ஆசிரமம் அனுமதி கேட்டு விண்ணப்பித்ததாகவும் ஆனால், அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால், அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
படக்குறிப்பு,

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணைய குழு

இதற்குப் பிறகு, தமிழ்நாடு காவல்துறையினர் கர்நாடக மாநில காவல்துறையுடன் இணைந்து பெங்களூருவில் ஜாபருல்லா சேர்க்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அதில், ஆட்டோ ராஜா என்பவர் மிகப்பெரிய அளவில் ஆசிரமம் மற்றும் மருத்துவமனை ஒன்றை நடத்திவருவதும் அந்த ஆசிரமத்தில்தான் கடந்த 2021ல் ஜாபருல்லா உட்பட 53 பேரை ஜபீன் பேபி ஒப்படைத்திருந்ததும் தெரியவந்தது.

இதில், ஜாபருல்லா உட்பட சுமார் 15 பேர் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜன்னல் கம்பியை உடைத்துத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், தப்பிச் சென்றவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

அன்புஜோதி இல்லத்தில் தங்கியிருந்தவர்கள் விழுப்புரம் இல்லத்தில் நடந்த கொடுமைகள் குறித்து தங்கள் உறவினர்களிடம் தெரிவித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது தெரிய வந்து கொண்டிருக்கின்றன. இங்கு தங்கியிருப்பவர்களை மிரட்டுவதற்காகவே, இரண்டு குரங்குகள் உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டிருக்கின்றன.

அவை, தங்கியிருப்போர் முரண்டு பிடித்தால் அவர்கள் மீது ஏவ பயன்படுத்தப்பட்டதாகவும் சமீபத்தில் இல்லத்தின் உரிமையாளர்களையே இந்தக் குரங்குகள் கடித்து வைத்ததும் தெரியவந்தது.

மேலும் ஜாபருல்லாவைப்போல அங்கு உறவினர்களால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள் தவிர, சாலையோரங்களில் இருப்பவர்களும் பிடித்துவந்து சேர்க்கப்பட்டுள்ளனர். அப்படிச் சேர்க்கும்போது உள்ளூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும். அது போன்ற ஆவணங்கள் ஏதும் இந்த ஆசிரமத்தில் இல்லை.

சமைப்பதற்கும் ஆசிரமத்தைச் சுத்தம் செய்வதற்கும் அங்கே தங்கவைக்கப்பட்டிருந்தவர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, வேறு மொழி பேசக்கூடிய பெண் மாற்றுத் திறனாளி ஒருவர், ஜுபின் மீது பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர், இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட, பார்வையற்ற தனது அத்தை லட்சுமியம்மாள் (80), மனநலம் குன்றியிருந்த அவரது மகன் முத்துவிநாயகம் (48) ஆகிய இரண்டு பேரை காணவில்லை என்று விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

'அன்புஜோதி' ஜுபின் யார்?

45 வயதாகும் ஜுபின் பேபி கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி மரியா பேபி. எர்ணாகுளத்தில் இருந்தபோது அங்கிருந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னார்வலர்களாகப் பணியாற்றியதாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள், 2005ஆம் ஆண்டில் விழுப்புரத்தில் உள்ள பெரியார் காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சிறிய அளவில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றைத் துவங்கினர். அப்போது 12 பேர் அங்கு சேர்க்கப்பட்டனர். அதற்குப் பிறகு ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பெரிய இடம் தேவைப்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில் குண்டலப்புலியூர் கிராமத்தில் 200 பேருக்கு மேல் தங்கக்கூடிய அளவில் ஒரு கட்டடத்தைக் கட்டி, 2012ல் அங்கு ஆசிரமத்தை இடம்மாற்றினர்.

பல முறை, இங்கு தங்கியிருக்கும் பலரை கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பியதாகவும் காவல்துறையிடம் ஜுபின் தெரிவித்திருக்கிறார். நல்ல சமேரியார் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டு, அந்த அறக்கட்டளை இந்த ஆசிரமத்தை நடத்தி வந்ததாக காட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரி 18ஆம் தேதி இந்த வழக்கு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் மீட்கப்பட்ட பெண்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றிருக்கிறது. நேற்று, சிபிசிஐடி காவல்துறையினர் ஆசிரமத்தில் சோதனை நடத்தி தரவுகளை சேகரித்துள்ளனர்.

இதுபோன்ற இல்லங்களை நடத்துவதற்கு சட்டத்தில் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சட்டங்களின் கடுமையை வைத்துப்பார்க்கும்போது, இது போன்ற ஒரு நிகழ்வு நடந்திருக்கவேகூடாது. ஆனால், இது போன்ற ஆசிரமம் நடப்பது தெரிந்தும், பல முறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டும் இந்த ஆசிரமம் தொடர்ந்து செயல்பட அனுமதித்ததுதான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுபோல நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் பலர் வலுக்கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டதும், இறந்தவர்கள் ஆசிரமத்திற்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆசிரமமும் அதிகாரிகளுக்குத் தெரிந்தே போதுமான அனுமதிகள் இன்றியே இயங்கிவந்தது.

கருத்துகள் இல்லை: