சனி, 25 பிப்ரவரி, 2023

ஈரோடு கிழக்கு கருத்துக்கணிப்பு ..இ வி கே எஸ் இளங்கோவன் பிரமாண்ட வெற்றி . 2 வது இடத்தில அதிமுக 3 வது இடத்தில நா த க

 tamil.oneindia.com - Vignesh Selvaraj :  சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி, டிடிவி தினகரனும் போட்டியில் இருந்திருந்தால் நாம் தமிழர் கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் என ராஜநாயகம் குழுவினர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் நிலையில், களத்தில் மொத்தம் 77 வேட்பாளர்கள் உள்ளனர். காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெல்வார் என்பது குறித்து பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலில் மக்கள் ஆய்வு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வெற்றி உறுதி..



கருத்துக்கணிப்பு முடிவுகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, யாருக்கு ஆதரவு அதிகம், எந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என பேராசிரியர் ச.ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 135 வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 1590 பேரிடம் கடந்த பிப்ரவரி 21 முதல் 23ஆம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

காங். வேட்பாளருக்கு வெற்றி முகம்
இந்த கருத்துக்கணிப்பின்படி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39.5 முதல் 65 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு 24.5 முதல் 41 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 9.5 முதல் 17 சதவீத வாக்குகளைப் பெறுவார், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 2 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாதகவுக்கு செம ஆதரவு
முதல்முறை வாக்காளர் உள்ளிட்ட 21 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 21 வயதிற்குள்ளான வாக்காளர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில், நாம் தமிழர் கட்சி 29.5 சதவிகிதம் ஆதரவும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 28.5 சதவிகித ஆதரவும் உள்ளது. அதிமுகவுக்கு 17 சதவிகிதம், தேமுதிகவுக்கு 3 சதவிகித ஆதரவு கிடைத்துள்ளது.

ஒருவேளை இப்படி நடந்திருந்தால்
அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனிச் சின்னங்களிலும், அமமுகவின் வேட்பாளரும் களத்தில் நின்றிருந்தால் நாம் தமிழர் கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் என இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அப்படி ஒரு சூழல் அமைந்திருந்தால் காங்கிரஸ் கட்சி 43.5 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், நாம் தமிழர் கட்சி 19.5 சதவீத ஆதரவுடனும் இரண்டாம் இடைத்தையும் பெற்றிருக்கும் என இந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்ட் மிஸ்
அதிமுக எடப்பாடி பழனிசாமி அணிக்கு 15.5 சதவீத ஆதரவும், பன்னீர்செல்வம் அணிக்கு 5 சதவீத ஆதரவும், அமமுகவிற்கு 7 சதவீத ஆதரவும் கிடைத்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஓபிஎஸ் பின்வாங்கியதாலும், அமமுக குக்கர் சின்னம் கிடைக்காததால் போட்டியில் இருந்து விலகியதாலும், மொத்தமாக அதிமுக ஆதரவு ஓட்டுகளை கைப்பற்றுகிறாராம் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் தென்னரசு.

எடப்பாடிக்கு கைகொடுத்த ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எடுத்த முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு கைகொடுத்துள்ளதாக இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இல்லையென்றால், எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளரை முந்தி நாம் தமிழர் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கக் கூடும் என விளக்குகிறது இந்த ராஜநாயகம் குழுவினரின் கருத்துக்கணிப்பு.

எதிரொலிக்குமா?
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சிக்கு நல்ல ஏற்றமாகவே அமைந்துள்ளது. சுமார் 10 சதவீத வாக்குகளை நாதக இந்த இடைத்தேர்தலில் பெற்றால், அக்கட்சியின் பலம் அதிகரித்ததாகவே கருதப்படும். ஈரோடு கிழக்கில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக அருந்ததியர் மக்கள் கொந்தளித்து வரும் நிலையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


In the Erode East by-election field, if Edappadi Palaniswami - O. Panneerselvam fielded separate candidates and DTV Dinakaran was also in the contest, Naam Tamilar Party would have won the second place, according to the survey conducted by Rajanayagam's people studies.

கருத்துகள் இல்லை: