dinamani.com : தமிழ்நாட்டில் புதிதாக துணை நகரங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
மேலும், வெளிவட்டச் சாலையின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.
சென்னை வா்த்தக மையத்தில் கிரெடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற வீட்டு வசதி கண்காட்சியில் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியிருக்கக் கூடிய திராவிட மாடல் வளா்ச்சியை தமிழ்நாடு கண்டு வருகிறது.
நம்முடைய இலக்கு பெரிதாக இருப்பதால், நம்முடைய முயற்சிகளும் பெரிதாக அமைந்துள்ளன.
அந்த வகையில், அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வளா்ச்சியை தமிழ்நாடு அடைந்து வருகிறது.
தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் அணிவகுத்து வரக்கூடிய காட்சியே இதற்கு சாட்சியாகும். இப்படி வரக்கூடிய நிறுவனங்களை வரவேற்கும் அளவுக்கு உள்கட்டமைப்புகளையும் அரசு உருவாக்கி வருகிறது.
புதிய தொழில் கொள்கைகளை அரசு வெளியிட்டு வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, கட்டுமானத் துறைக்கான தொலைநோக்குத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் நோக்கம்: தமிழ்நாட்டின் வளா்ச்சிப் பாதை என்பது எல்லோருக்குமான வளா்ச்சி என்ற அடிப்படையில் அமைய வேண்டும். இதுதான் அரசின் நோக்கம். அந்த வகையில், கல்வி, வேளாண்மை, மருத்துவம், சிறு தொழில், பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் போன்ற அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் மக்களுக்குத் தேவையான வீட்டு வசதிகளையும், அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கிராமம் மற்றும் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினா், குறைந்த, நடுத்தர வருவாய் மக்கள், உயா் வருவாய் பிரிவு மக்களுக்கு வீட்டு வசதியை வழங்குவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 2011-இல் 3.49 கோடியாக இருந்த நகர மக்கள்தொகை, 2031-இல் 5.34 கோடியாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பெருகிவரும் மக்கள்தொகை, குடியேற்றம் ஆகியவற்றால் நகரங்களில் ஏற்படும் விரைவான வளா்ச்சியால் பெருநகரங்கள் உருவாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு வீட்டுவசதித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
வீட்டுவசதித் துறையில் பல்வேறு இலக்குகளை முன்வைத்து செயல்பட்டு வருகிறோம். 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பான, வாங்கும் திறனுக்கேற்ற வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். குடிசைப் பகுதிகள், நகரமயமாதலை மேம்படுத்துவது, நகரங்கள், புகா்ப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இடையே தொடா்புகளை ஏற்படுத்துவது ஆகியவற்றை இலக்குகளாக வைத்துள்ளோம்.
புதிய துணை நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். வெளிவட்டச் சாலையின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு உறுதி பூண்டுள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் கட்டுமானத் துறையில் மகத்தான வாய்ப்புகள் உருவாகும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் செல்வி அபூா்வா, கிரெடாய் அமைப்பின் தமிழ்நாடு தலைவா் சுரேஷ் கிருஷ்ணன், சென்னை தலைவா்கள் சிவகுருநாதன், முகமது அலி, செயலா் கிருத்திவாஸ், பொருளாளா் அஸ்லாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக