புதன், 21 டிசம்பர், 2022

பரந்தூரில் விமான நிலையம் .. விவசாயிகளிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!

tamil.asianetnews.com  -  Narendran S :  பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஆட்சேபனை… விவசாயிகளிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து, சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து, சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். காஞ்சிபுரம் வட்டத்தில் 7 வருவாய் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 6 வருவாய் கிராமங்கள் என மொத்தம் 13 வருவாய் கிராமங்களில் சென்னை புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் அவர்களுடைய நிலத்தினை கையகப்படுத்த ஆட்சேபணை தெரிவித்ததால், முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர்களிடம் விவசாயிகளை நேரிடையாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தும்படி ஆணையிட்டார்.

அதன்பேரில் கடந்த அக்.15 ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, க.சரவணன், ப.இரவிச்சந்திரன், து.கதிரேசன், செ.கருணாகரன், ச.கணபதி, க.சுப்பிரமணியன், வெ.முனுசாமி, லோ.இளங்கோ ஆகிய விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர், ஒருவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்காகத்தான் வாழ்வாதாரத்திற்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும், சந்தை மதிப்பிற்கு 3.5 மடங்கு இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார் என்றும் கிராம மக்களின் கோரிக்கையை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.


இதனை தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள், மேற்கொள்ள இருந்த நடைபயணத்தை கைவிட்டனர். மேலும் ஏகனாபுரம் கிராமத்தில் நில எடுப்பு செய்யாமல் தவிர்க்கும்படியும், விவசாய நிலம் பாதிக்காத வகையிலும், நீர்நிலைகள் பாதிக்காத வகையிலும், விமான நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் பேச்சு வார்த்தையில் கலந்துக் கொண்ட விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். விமான நிலையம் அமையவுள்ள இடம் மற்றும் அதன் புவியியல் மாற்றம் நீரியல் அமைப்பு குறித்து சம்பந்தப்பட்ட வல்லுநர்குழு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்கள் ஏகனாபுரம் விவசாயிகளுக்கு விளக்கி கூறியதை அடுத்து ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதனை ஏற்றுக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: