ஞாயிறு, 18 டிசம்பர், 2022

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தளர்வு

 tamil.hindustantimes.com -  Muthu Vinayagam Kosalairaman :  நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்துள்ள சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை பதிவாளர் உத்தரவுபடி மதுரையில் தங்கி நாள்தோறும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தி்ல் கையெழுத்திட வேண்டும் என சவுக்கு சங்கருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக 10 நாள்கள் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து வந்த சவுக்கு சங்கர், சென்னையில் கையெழுத்திட அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்டு சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அளிக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் துணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தினமும் ஆஜராவதில் உள்ள சிரமம், வாழ்வாதார பிரச்னை கருத்தில் கொண்டு இந்த நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை பதிவாளர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு உத்தரவு வரும் வரை வாரம்தோறும் திங்கள் கிழமை மனுதாரர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டார்.

பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக ஆறு மாதம் காலம் சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சிறை தண்டனையை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆதாரமில்லாமல் எப்படி விமர்சனம் வைத்தார்? என்று கேள்வியெழுப்பி சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்த அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி சிறையில் வைத்தே அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

கருத்துகள் இல்லை: