ஞாயிறு, 18 டிசம்பர், 2022

மெட்ரோ ரெயில் திட்டம்- கிரீன்வேஸ் சாலையில் அடுத்த மாதம் துவங்குகிறது சுரங்கப்பாதை தோண்டும் பணி

மாலைமலர் : சென்னை  சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்ட ருக்கும், மாதவரம் முதல்- சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது.
இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரெயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ ரெயில் நிலையம் செல்வதற்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி நடைபெற உள்ளது. அடையாறு ஆற்றின் கீழே அமைய இருக்கும் இந்த சுரங்கப்பாதை மக்களை வியக்க வைக்கும்படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஆரம்பகட்ட பணிகள் நடந்தது முடிந்துள்ளன. அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதற்காக துளையிடும் ராட்சத எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது பருவமழை பெய்து வந்ததால் சுரங்கப்பாதை தோண்டுவதற்கான பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

அடுத்த மாதம் பருவமழை முழுவதும் ஓய்ந்துவிடும் என்பதால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை தோண்டப்படும்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கும். இது மாதவரம் பால்பண்ணையில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். சுரங்கப்பாதை தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து உள்ளன. சுரங்கப்பாதை அமைக்கும்போது பல பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். அடையாறு மற்றும் திருவான்மியூரில் உள்ள நிலையங்கள், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் மந்தவெளி போன்ற இடங்களுக்கு முக்கியமான இணைப்பாக இருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை: