செவ்வாய், 20 டிசம்பர், 2022

டெல்லியில் ரெயில்களை தினமும் கணக்கெடுத்த தமிழக இளைஞர்கள்- பணத்தை வாங்கி பயிற்சி என்று ஏமாற்றப்பட்ட பரிதாபம்

டெல்லியில் ரெயில்களை தினமும் கணக்கெடுத்த தமிழக இளைஞர்கள்- பணத்தை வாங்கி பயிற்சி என்று ஏமாற்றப்பட்ட பரிதாபம்

maalaimalar : ஒண்ணு... ரெண்டு... மூணு.... மொத்தம் 18 கோச். இதில் ஏ.சி. கோச் 3, முன்பதிவு செய்யப்படாதது 2 என்று டெல்லி ரெயில்வே ஸ்டேசன் பிளாட்பாரங்களில் நம்ம வடிவேலு மாதிரி ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள் கணக்கெடுத்து கையில் இருந்த குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டிருந்தார்கள்.
பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை மெதுவாக சென்று திரும்பிய போதும் கணக்கெடுப்பாளர்கள் செல்லவில்லை. அங்கேயே நின்று கணக்கெடுப்பதில்தான் தீவிரமாக இருந்தார்கள்.
இதை கவனித்த இந்தி போலீஸ்காரர்கள் மற்ற பிளாட்பாரங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.


அப்போது 'பையன்களை பார்த்தால் தமிழ்நாட்டுகாரர்கள், நல்ல படித்தவர்கள் போல் இருக்கிறார்கள் என்று விபரத்தை சொல்லவும் மற்றொரு போலீஸ்காரர் 'டேய், நீ என்ன சொன்ன... இதே போல் 5-வது பிளாட்பாரத்திலும் சிலரை பார்த்தேன். 6-வது பிளாட்பாரத்திலும் சிலரை பார்த்தேன் என்று ஒவ்வொரு போலீஸ்காரரும் சொல்லவே சம்பந்தப்பட்ட இளைஞர்களில் சிலரை அழைத்து கேட்டிருக்கிறார்கள்.

உடனே அவர்கள் மிகுந்த ஆர்வத்தில் 'சார், எங்களுக்கு டிக்கெட் பரிசோதகர் வேலை, கிளார்க் வேலை, போக்குவரத்து உதவியாளர் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக தினமும் 8 மணி நேரம் போகும் ரெயில்களையும், வரும் ரெயில்களையும் கணக்கெடுக்க சொல்லி இருக்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார்கள்.

அதை கேட்டதும், "இவுங்க தலையில் எவனோ மிளகாய் அரைச்சிட்டாண்டா' என்று போலீசார் உஷாராகி விசாரித்த போது தான் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

விருதுநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுப்புசாமி (78). இவர் அந்த பகுதியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க உதவிகள் செய்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த சிவராமன் என்பவரது அறிமுகம் சுப்புசாமிக்கு கிடைத்துள்ளது. சிவராமன் டெல்லியில் எம்.பி.க்கள் குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் அறிமுகம் கிடைத்தால் 'டெல்லியில் என்ன காரியம் ஆக வேண்டுமென்றாலும் பார்த்து கொள்ளலாம் என்று அளந்து விடுவாராம்.

அவ்வாறு அவர் அளந்து விட்டதைத்தான் சுப்புசாமியும் நம்பி இருக்கிறார். அதாவது ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் முதல் பல வேலைகள் இருக்கிறது. எனக்கு தெரிந்த விகாஸ் ராணா (25) என்பவர் வடக்கு ரெயில்வேயில் உயர் அதிகாரியாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

அதை நம்பிய சுப்புசாமியும் உள்ளூரில் படித்த சில இளைஞர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவல்கள் பலருக்கும் தெரியவரவே 28 பேர் வேலை கேட்டு அணுகி இருக்கிறார்கள். அனைவருமே பி.இ., எம்.இ. படித்தவர்கள். ரூ.2 லட்சம் முதல் 24 லட்சம் வரை அவர்களிடம் வசூலித்து மொத்தம் 2½ கோடி ரூபாயை விகாஸ் ராணாவிடம் கொடுத்து இருக்கிறார்கள்.

அதை பெற்றுக்கொண்ட ராணா பணி ஆணை வாங்குவதற்கு முன்பு உங்களுக்கு பயிற்சி தேவை என்று ஒரு இடத்தில் தங்க வைத்து சில பயிற்சி புத்தகங்களை படிக்க கொடுத்துள்ளார்.

அந்த பயிற்சிகளில் ஒன்றுதான் இந்த ரெயில்கள் கணக்கெடுப்பும். இந்த பயிற்சிகள் முடிந்ததும் கன்னாட்பிளேசில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வர வேண்டும். ரெயில்வே அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் எல்லோரையும் வெளியே நிற்க சொல்லி விட்டு சான்றிதழ்களுடன் ராணாவும் அவரது கூட்டாளி துபே என்பவரும் உள்ளே சென்றிருக்கிறார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு வெளியே வந்தவர்கள் சில உத்தரவு கடிதங்களையும் வழங்கி இருக்கிறார்கள்.

ஆனால் அவை அனைத்தும் போலி என்பதும் அவர்கள் ஏமாற்றப்பட்டதும் தெரிய வந்தது. இதுபற்றி டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

ஏமாந்த தமிழக வாலிபர்கள் இன்னும் எத்தனை பேரோ, போக போகத்தான் தெரிய வரும்.

கருத்துகள் இல்லை: