செவ்வாய், 19 ஜூலை, 2022

போலி பாஸ்போர்ட் விவகாரம்: உண்மை என்ன?

மின்னம்பலம்  - PN Badri : போலி பாஸ்போர்ட் விவகாரம் தமிழகக் காவல்துறையைப் புரட்டிப்போட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார்களைத் தெரிவித்து ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
மதுரை மாநகரம் பகுதியில் உள்ள அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து பலர் போலியான முறையில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.
இதற்குக் காரணம், அப்போது மதுரை காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதமும், ஐஎஸ் ஏசியாக இருந்த சிவக்குமாரும்தான் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
அதைத் தொடர்ந்து உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை விசாரிக்க சிபிஐ வருகிறது, கைது செய்யவும் வாய்ப்புகள் உள்ளது என காவல்துறை வட்டாரத்திலும் ஊடகங்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.  இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று தெரிந்துகொள்ள புலன் விசாரணையில் இறங்கினோம்

2018-2020 இல் மதுரை மாநகர காவல்துறை ஆணையராக பணிசெய்துவந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், குற்றங்களைத் தடுக்கவும் குறைக்கவும், ட்ராபிக் பிரச்சினையைத் தடுக்கவும், ஒரு வார்டுக்கு ஒரு எஸ்.ஐ வீதம் நூறு வார்டுகளுக்கு நூறு பேரை பொறுப்பாக நியமித்தார். மாநகரம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் சிசி டிவி கேமராக்களை அமைத்தார். அடாவடியாகப் பணம் சம்பாதித்த போலீஸ் முதல் ஏசி டிசி வரையில் உள்ள அதிகாரிகளை எச்சரித்து நடவடிக்கை எடுத்துவந்தார். அப்போது அவருக்கு நம்பிக்கையாக இருந்தவர் ஐஎஸ் ஏசி சிவக்குமார்.
அப்போதுதான் அவிநாயபுரம் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணை போலீஸாக இருந்த கந்தசாமி என்பவர், பாஸ்போர்ட் க்ளியரன்ஸ் கொடுத்ததால், இருபதுக்கும் மேற்பட்டவர்கள் போலி பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகள் வெடித்துள்ளது.

பாஸ்போர்ட் விசாரணையைப் பற்றித் தெரிந்துகொள்ளக் கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் கே.உதயகுமாரிடம் கேட்டோம்.

”ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கோர்ட் போலீஸ் இருப்பதுபோல், பாஸ்போர்ட் விசாரணைக்கு என்று ஒரு தலைமைக் காவலரை நியமித்திருப்போம். பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருப்பார்கள். பாஸ்போர்ட் அலுவலகம் அதைச் சரிபார்த்து அந்த நபர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறதா, விலாசம் கொடுத்த வீட்டில்தான் இருக்கிறாரா என ரிப்போர்ட் கேட்டுச் சம்பந்தப்பட்ட எஸ்.பி ஆபீஸ் அல்லது துணை ஆணையர் ஆபீஸ்க்கு அனுப்பி வைப்பார்கள். அங்கிருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வரும். அந்த தபாலை எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர் முகவரிக்குச் சென்று விசாரித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நபரை நேரடியாகக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து டிஜிட்டல் கையெழுத்து, போட்டோ எடுத்துக்கொண்டு உண்மை என்னவோ அதை அனுப்பி வைப்பார்கள். இன்ஸ்பெக்டர் மேற்பார்வை இருக்கும். குற்ற வழக்குகள் இருந்தால் யாரும் மறைக்க முடியாது இதுதான் எங்கள் வேலை” என்றார்.

மதுரை ஐஎஸ் ஏசியாக இருந்த சிவக்குமாரிடம் கேட்டோம். “என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. க்யூ போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தார்கள். கேட்ட கேள்விக்குப் பதில் கொடுத்துள்ளேன். விசாரணையில் இருக்கும்போது நான் எதுவும் சொல்லக்கூடாது. ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன். நாங்கள் எந்த தவறு செய்யவில்லை” என்றார்.

நாம் பாஸ்போர்ட் அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.

“பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட பெரும்பாலான வேலைகள் டாடா நிறுவனமான டிசிஎஸ் சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேற்பார்வை செய்பவர்கள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள். குறிப்பாக பாஸ்போர்ட் ஆபீஸில் வேலை செய்யும் அதிகாரிகள் பலரும் அதிகப்படியான ஆணவத்தில் இருப்பார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு லட்சம் இல்லாமல் வீட்டுக்குப் போகமாட்டார்கள். அதிகாரிகள் ஊழியர்கள் வெளியில் உள்ள ஏஜெண்ட்களோடு நெருக்கமாகத்தான் இருப்பார்கள். இவர்களைக் கேள்வி கேட்கக்கூடிய ஆட்கள் சிபிஐ மட்டும்தான். அவர்களும் நினைத்தபோதெல்லாம் வரமுடியாது. புகார் இருந்தால் மட்டுமே வருவார்கள்.

பாஸ்போர்ட் ஆபீஸில் ஏ, பி, சி, என மூன்று கவுண்டர்கள் இருக்கும். மக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ஊருக்கு அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் விண்ணப்பம் செய்துவிடுவார்கள். வெரிபிகேஷன் செய்வதற்குத் தேதி நேரம் இடம் ஒதுக்கி மெயிலுக்கும் செல்போனுக்கும் மெசெஜ் வந்துவிடும். குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் ஆபீஸுக்கு சென்றால், முதலில் ப்ரி வெரிபிகேஷன் கவுண்டர் இருக்கும். அதில் சென்றால் அங்கே ஒருவர் சான்றுகளை வரிசைப்படுத்தி, ஒதுக்கப்பட்ட நேரம் தேதி சரி பார்த்து, ஏ கவுண்டருக்கு அனுப்புவார். ஏ கவுண்டரில் உள்ளவர் ஒரிஜினல் சான்றுகளைச் சரிபார்த்து பிழைகள் இருந்தால் சரிசெய்து பி கவுண்டருக்கு அனுப்புவார். அவர் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் மீது, குற்ற வழக்குகள் இருக்கிறதா அதற்கான சான்றுகள் உள்ளதா எனச் சரிபார்த்து, சி கவுண்டருக்கு அனுப்புவார். சி கவுண்டரில் உள்ளவர் ஏ மற்றும் பி கவுண்டரில் ரிஜெக்ட் செய்த விண்ணப்பத்தை, சில கோப்புகள் தவறாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு ஒகே பண்ணலாம். அதற்கான அதிகாரமும் ஆப்ஷனும் உள்ளது. அவருக்கு உத்தரவிட கிரான்டிங் ஆபீஸர் இருப்பார் அல்லது சீனியர் சூப்ரெண்ட் பாஸ்போர்ட் ஆபீஸர் இருப்பார்.

பாஸ்போர்ட் ஆபீஸ்களில், இந்தியாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் சிலரைத் தவிர மற்றவர்கள் ஏஜென்டுகளுடன் நல்ல தொடர்பில் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு ஒன்று… புதுச்சேரி பாஸ்போர்ட் ஆபீசில் சீனியர் சூப்ரெண்ட் ஆபீஸராக லட்சுமி என்பவர் இருந்தார். அவர் மீது சிபிஐ வழக்குப் போட்டு விசாரணை நடந்து வருகிறது. அதன் பிறகு ஒருவர் வந்தார். அவர் எந்த நேரமும் போதையில்தான் இருப்பார். டி ஷர்ட் ஆஃப் ட்ராயரில்தான் ஆபீஸ் வருவார். அவருக்குக் காரைக்காலிலிருந்து வரும் ஏஜென்ட்டுகளிடம் உள்ள தொடர்பைப் பயன்படுத்தி பணத்தில் கொழுத்துப்போனார். இவர்களை கட்டுப்படுத்துபவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் வந்தா பார்க்கப்போகிறார்கள்? போலி பாஸ்போர்ட் அதிகரிக்க பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகள்தான் காரணம். சமீபகாலமாக (upc) அப்பர் டிவிஷன் கிளர்க் பதவியில் தமிழகத்தில் உள்ள பாஸ்போர்ட் ஆபீஸ்களில் அதிகமாக வட இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். இவர்களும் பணம் சம்பாதிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றார்கள்.

தமிழகத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியிடம் போலி பாஸ்போர்ட் விவகாரத்தைப்பற்றிக் கேட்டோம்.

“தவறு நடந்திருந்தால் அது தவறுதான் அதை நான் நியாயப்படுத்தவில்லை. பாஸ்போர்ட் வெரிபிகேஷன் செய்வது முக்கியமாகக் குற்ற வழக்கு இருக்கிறதா இல்லையா என்பதை அறியத்தான். மேலும் அவர் விண்ணப்பத்தில் கொடுத்த விலாசத்தில் குடியிருக்கிறாரா என்பதை அறியத்தான். அந்த வேலையை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு போலீஸ்தான் கவனிப்பார். அதற்கும் மேலே போனால் இன்ஸ்பெக்டர் கவனிப்பார். இந்த விவகாரத்தில் எஸ்பி, துணை ஆணையர், ஆணையர் மீது எப்படி குற்றம் சொல்லமுடியும், நடவடிக்கை எடுக்க முடியும்?

சரி நடவடிக்கை எடுப்பதை ஏற்கிறேன், நாடு முழுவதும் ஒரே சட்டம் தான். அப்படி என்றால் குஜராத்தில் அதிகப்படியான போலி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் ஹைதராபாத்தில் போலி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பிகளையும், கமிஷனர்களையும் சிபிஐ கைது செய்துள்ளதா? ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை இப்படி ஒரு அரசியல் செய்வது வேதனையாக உள்ளது” என்கிறார்.

வணங்காமுடி

கருத்துகள் இல்லை: