வெள்ளி, 22 ஜூலை, 2022

அடிமடியிலேயே" கை வைத்து திமுகவுக்கு டேமேஜ்?..குறிவைத்த பாஜக.. ஆதாரங்களை கேட்கும் விசிக.. என்னாச்சு

  Hemavandhana -  Oneindia Tamil News  : சென்னை: உளவுத்துறையை சீண்டி புகார் சொல்லி வரும் தமிழக பாஜகவுக்கு, விசிக அது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளது.
வழக்கமாக திமுக ஆட்சி செய்தால், அதிமுக கேள்வி கேட்கும்.. அதிமுக ஆண்டால், திமுக விமர்சிக்கும்.. இதுதான் நடைமுறை.. ஆனால், இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக மட்டுமே அரசை கடுமையாக சாடி வருகிறது..
அதிமுக செய்ய வேண்டிய போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களையும் பாஜகவே செய்து வருகிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து விட்ட நிலையில், பாஜக இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டும் வருகிறது.
அதனால்தான், திமுகவின் ஊழல் புகார்களை மாநில தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த துவங்கினார்.. இனி மாதந்தோறும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்..

அனைத்து புகார்களையும் ஒரு நோட்புட்டாக தயாரித்து, அதை ஆளுநரிடம் தரப்போகிறோம் என்றும் சொன்னார்..
பாஜகவின் இந்த சீண்டலை திமுக சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது என்று ஏற்கனவே தமிழக காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் எச்சரித்து வருகிறார்கள்..

அதேபோல ஒருமுறை திருமாவளவனும் இந்த எச்சரிக்கையை தந்தார்.. ஆனால், கூட்டணி கட்சியான திமுகவுக்கு இல்லை, அதிமுகவுக்கு அந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.. மாநில அரசுக்கு எதிராக விசிக முன்னெடுக்கும் போராட்டம் குறைந்து விட்ட சூழ்நிலையில், பாஜக பிரதான எதிர்க்கட்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருக்கின்றவா என்று ஒருமுறை திருமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "பாஜகவை பொறுத்தவரையில் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும், நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி, அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று காட்டிக் கொள்வதற்காக பல வேலைகளை செய்து வருகிறது...
அதிமுகவுக்கு மாற்று எதிர்க்கட்சி நாங்கள்தான் என்ற காட்டும் பதற்றத்தில் அரைவேக்காட்டு தனமான அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை செய்யும் அரசியல் திமுகவுக்கு எதிரானது அல்ல அது அதிமுகவுக்கு எதிரானது" என்றார்.

நேற்றைய தினம் ஆளுநரை சந்தித்து அண்ணாமலை திமுக மீதான புகாரை தந்திருக்கிறார்.. குறிப்பாக, உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் குறித்த புகாரை ஆளுநரிடம் தந்திருக்கிறார்.. இதுகுறித்து பாஜகவின் மாநில துணை தலைவர் கேவி ராமலிங்கமும் செய்தியாளர்களிடம் கூறியபோது, "போலி பாஸ்போர்ட் விவகாரத்திற்கு உளவுத்துறை அதிகாரி டேவிட்சன் ஆசீர்வாதம்தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்..
அவரைப்போன்ற தவறான அதிகாரிகள் உளவுத்துறையில் இருப்பதால்தான் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது.. இதற்கான ஆதாரங்களையும் ஆளுநரிடத்தில் வழங்கி இருக்கிறோம்" என்றார்.

இதைதான் விசிக இன்று கேள்வி கேட்டுள்ளது.. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு, பதிவிட்டுள்ள ட்வீட்டில், "திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார் அண்ணாமலை.. இதுவரை அதற்கான ஆதாரங்களை கூட வெளியிடவில்லை. இப்போது உளவுத்துறை ஏடிஜிபி திரு.டேவிட்சன் ஆசீர்வாதம் மீது சுமத்துகிறார். இதுவும் அமைச்சர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு போல ஆதாரமில்லாதது தானா?" என்று கேட்டுள்ளார்.
உளவுத்துறை மீது புகார்களை சொல்லும்போது, அது நிச்சயம் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நேரடியாக கெட்டப்பெயரை பெற்று தரும் என்பதாலேயே, டேவிட்சன் மீது குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனிடையே, நேற்று இரவு அண்ணாமலை திருச்சியில் ஒரு பேட்டி தந்திருந்தார்..
அதில், "மோசமான நிலையில் தான் தமிழக ஆட்சி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், திமுக அரசின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்.. அதனால், எனவே பொறுமையாக இருப்போம்.. 4 வருஷம் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்.. அதனால், அதை பார்த்து முடிவு செய்வோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி-யாக உள்ள டேவிட்சன், கடந்த 2018-ல் மதுரை கமிஷனராக இருந்தபோதே, காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.. சில நாட்களுக்கு முன்புகூட, இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுநர் ரவிக்கும் கடிதம் எழுதியிருந்த நிலையில், இப்போது நேரயாகவே ஆளுநரை சந்தித்து புகார் தந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை: