வெள்ளி, 22 ஜூலை, 2022

ராணுவம் மூலம் ( gotagogama) போராட்டகாரர்கள் துரத்தப்பட்டது ஏன்? அதன் பின்னணி என்ன?

 Ashroff Ali-அஷ்ரப் அலீ  : கோட்டா கோ கம-நடைபெற்றது என்ன?
ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் இன்று நண்பகல் அளவில் அங்கிருந்து அகன்று அதனை மீண்டும் அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர்.
அதற்கிடையில் இன்று நள்ளிரவு திடீரென்று ராணுவத்தினரைக் களமிறக்கி, போராட்டக்காரர்களை அடித்து நொறுக்கி, ஓடவிட்டும் இழுத்துச் சென்றும் அங்கிருந்து அகற்றி ஜனாதிபதி செயலகத்தை அரசாங்கம் மீட்டெடுத்துள்ளது.
போராட்டக்காரர்கள் தாங்களாகவே அகன்று செல்ல இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் அரசாங்கம் படையினரைக் களமிறக்கி அவர்கள் மீது கடும் தாக்குதல் ஒன்றைத் தொடுத்து அவர்களை அங்கிருந்து பலவந்தமாக வௌியேற்றக் காரணம் என்ன? இதுதான் இன்று பலருக்குள்ளும் எழுந்துள்ள கேள்வி. பதில் தேடிக் கொள்ளத் தெரியாமல் பலரும் பகிர்ந்து கொள்ளும் கேள்வி.
நான் கடந்த ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான  என் பதிவுகளில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு வந்துள்ளேன். அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உற்று நோக்கியவர்களுக்கு இன்று நடைபெற்ற விடயத்தின் பின்னணியில் நான் என்ன சொல்ல வந்தேன் என்ற விடயம் தௌிவாக புரிந்திருக்கும்.


ரணில் விக்கிரமசிங்க என்பவர் இலங்கையின் மிகப் பெரும் லிபரல் ஜனநாயகவாதி. ஆசியாவின் மூத்த ஜனநாயகவாதி. அவரிடம் காரியம் சாதித்துக் கொள்வதற்கும், காரியத்தைக் கெடுத்துக் கொள்வதற்கும் இடையிலான வித்தியாசம் ஒரு நூலிழைதான்.
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை யார் என்ன சொன்னாலும் ஜனநாயகத்தின் மீது அபார பற்றும், ஈர்ப்பும் கொண்டவர். எதையும் லிபரல் ஜனநாயக ரீதியாக அணுகும் தன்மை கொண்டவர். அவரது எதிராளிகள் கூட மிக மோசமான விமர்சனங்களை மென்மையான வார்த்தைகள் கொண்டு வீசியெறியும் போது சிரித்துக் கொண்டிருப்பவர். ஆக்ரோசமாக விவாதிக்கவும் அவர் தயார். ஆனால் வார்த்தைகளின் எல்லை தாண்டி சொற்களில் அல்லது செய்கையில் வன்முறையை வௌிப்படுத்தி விட்டோமானால் ஓட ஓட விரட்டி அடிப்பார். அதுதான் அவரது சுபாவம்.
அதன் காரணமாகத் தான் அவரை ஆண்மையற்றவன் என்றெல்லாம் வர்ணித்த ராஜித, கரு ஜயசூரிய போன்றோரைக்கூட மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொண்டு அவர்களுடன் இணைந்து செயற்பட்டார். ஆனால் உன்னை விட்டேனா பார் என்று சவால் விட்ட சஜித் பிரேமதாசவுக்கு தனிவழி செல்ல வைத்து திக்குத் தெரியாத காட்டில் வழிதொியாமல் தவிக்க விட்டுள்ளார்.
அதே பின்னணியில் இன்றைய சம்பவத்தை எடுத்து நோக்கினால்,. போராட்டக்காரர்கள் அவர்களாக அறிவித்தபடி மத்தியானம் இரண்டு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தை விட்டு அகன்று செல்ல இடமளித்திருந்தால்........?
அங்கிருந்து அகன்று செல்ல முன்னாடி போராட்டக்காரர்கள் ஒரு ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள். வெற்றிப் பூரிப்புடன் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை அதிகாரிகளிடம் கையளித்திருப்பார்கள்.  
அதுமாத்திரமன்றி தாங்கள் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் அரசாங்கத்துக்கும் கடுமையான தொனியில் எச்சரிக்கைகளை விடுத்து, நிபந்தனைகளை முன்வைத்து வெற்றிப் பேரிகையுடன் அங்கிருந்து அகன்று சென்றிருப்பார்கள்.
அதன் பின்னர் காலிமுகத்திடல் போராட்டம் நிலைக்கின்றதோ இல்லையோ, இந்தப் போராட்டக்காரர்கள் மிகவும் வலுவான முறையில் அரசாங்க செயற்பாடுகளில் தலையீடுகளை மேற்கொள்ளத் தொடங்குவார்கள். அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள்.  கோரிக்கைகளை முன்வைப்பார்கள். நிபந்தனைகள் விதிப்பார்கள். எச்சரிக்கை செய்வார்கள்.  அவர்களைச் சுற்றிலும் பாரிய சமூக செல்வாக்கும், சக்தியும் அதிகரிக்கும்.
ஆனால் அதற்கு இடமளிக்காது இன்று நள்ளிரவில் ராணுவத்தினரைக் கொண்டு கடுமையான தாக்குதல் தொடுத்து  போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டு விட்டார்கள். அதன் மூலம் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் என்ற அழுத்த சக்தி தற்போது அரசியல் களத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது.  போராட்டக்காரர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் காலிமுகத்திடல் அருகே ஒதுக்கப்பட்டுள்ள போராட்டக்களத்துக்கு செல்ல வழியின்றி வீதிகளில் நின்று கோஷம் போடத் தொடங்கியபோதே காலிமுகத்திடல் போராட்டத்தின் வீரியம் செல்வாக்கிழந்து விட்டதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
ரணில் இனி தன் அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ள சமூகத்தின் மத்தியில் ஆழப் பதிந்துள்ள காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் என்ற பிம்பத்தை உடைப்பதில் தான் கவனம் செலுத்துவார். அதனை அழித்தொழிப்பதில் தான் அவரது ஆட்சியின் நிலைக்கும் தன்மையும் வெற்றியும் அடங்கியுள்ளது.
கோட்டா அதிகாரத்தில் இருந்தவரை போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்து அவர்களை விரட்டியடிக்க முயன்றார். ஆனால் கடைசியில் போராட்டக்காரர்களின் கை ஓங்கி தப்பினோம் பிழைத்தோம் என்று கோட்டாபய நாட்டை விட்டே தப்பியோடும் நிலை ஏற்பட்டது.
ஆனால் ரணிலின் அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல்  அதனை விட அதிக ரிஸ்க் எடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் அழுத்தங்கள், கண்டனங்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிந்து கொண்டே நூல் பிசகாமல் கடுமையான தாக்குதல் ஒன்றின் மூலம் போராட்டக்காரர்கள் அடக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் ஆதிக்கம் நிலவிய இடத்தில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்.
ரணில் அதிகாரத்துக்கு வந்தால் இப்படித்தான் நடப்பார் என்று  தெரிந்து தான் அவருக்கு 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வெல்ல வைத்துள்ளனர்.
ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வரவேண்டாம் என்ற போராட்டக்காரர்களின் வன்முறைத்
தொனியிலான எச்சரிக்கைக்கு போராட்டக்காரர்களின் கோட்டைக்குள் புகுந்து ரணில் பதிலடி கொடுத்துள்ளார்.  அதன் மூலம் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கியுள்ளார். இப்போது பொதுமக்கள் மத்தியில் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான நம்பிக்கை, அவர்களின் போராட்டத்தின் வெற்றி மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். போராட்டத்துக்கான ஆதரவும் படிப்படியாக மங்கிப் போகும்.
மஹிந்த ராஜபக்‌ஷ.  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்ற அடாவடி அரசியல்வாதிகளுக்கு ஆதரவாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து வந்து உணவும், சோமபானங்களும் வழங்கி அவர்களைக் கொண்டு போராட்டக்காரர்களைத் தாக்க ஏவி விட மட்டும் தான் தெரியும்.  ஆனால் ரணில் அப்படியல்ல. ராஜபக்‌ஷ குடும்பம் பயணிக்க அச்சப்பட்ட பாதைகளில் எல்லாம் ரணில் அநாயாசமாக பயணிக்கத் தலைப்படுவார்.  அவர்கள் காலடி வைக்கவே தயங்கிய இடங்களை எல்லாம் தாவிக் கடந்து சென்றுவிடுவார். அதுதான் ரணிலின் அரசியல் ஆளுமை மற்றும் சாமர்த்தியம் ஆகும்.
அதன் காரணமாக கோட்டாபய மற்றும் மஹிந்தவுடன் கடைப்பிடித்த மோதல் வழிமுறைகளை ரணிலுடன் அதே வடிவத்தில் கடைப்பிடிக்க முடியாது, அதில் வெற்றி கிடைக்கவே கிடைக்காது
அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பற்ற வைக்கப்பட்ட தீயில் தன் பாரம்பரிய வீட்டையும் இழந்து  அதில் இருந்த பாரம்பரிய உடைமைகளையும் இழந்து போயுள்ள ரணிலுக்கு இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை.
ஆகவே ரணிலுடன் உணர்ச்சி மற்றும் மூர்க்க அரசியல் செய்வதற்குப் பதில் அரசியல் ரீதியான வழிமுறைகளில் முட்டி மோத கற்றுக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து அச்சுறுத்தும் பாணியிலான செயற்பாடுகளின் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை அடக்கி விட முடியாது. ஆர்ப்பரித்து திமிர்த்து எழும் குணம் கொண்டவர். கடைசியில் நம் ஆட்டத்தை முடித்து விடுவார்.
போராட்டக்காரர்களின் தலைவர்களாக தங்களை கருதிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் ஒருவிடயத்தை தௌிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  ரணிலை விரட்டியடிக்க போராட்டக்களங்களில் ஆட்களை நிறைப்பதோ, ஹேஷ்டேக்குகள் மூலம் போராட்டங்களை முன்னெடுப்பதோ,  சந்திக்கு சந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதோ ஒருபோதும் பலன் தரப்போவதில்லை. ஏனெனில் ஆனானப்பட்ட ஜே..வி.பி.யின் ஆயுதக் கிளர்ச்சியை அடக்கிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளில் எஞ்சியிருக்கும் மூத்த அரசியல்வாதியான அவருக்கு இது போன்ற போராட்டங்கள் எல்லாம் அல்வா சாப்பிடுவது போன்று கணப் பொழுதில் அடக்கி, முறியடித்து விடுவார்.
அதற்குப் பதிலாக ஜனநாயக கட்டமைப்புக்குள் நின்று சமூக, அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து பாரிய ஜனநாயக எதிர்ச் சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதே ரணிலை வெற்றி கொள்ள ஒரே வழியாகும். 2019ல் மொட்டுக்கட்சி அவ்வாறான கிராமிய மட்ட அமைப்புகளை திட்டமிட்ட வகையில் உள்வாங்கி, ஒருங்கிணைப்பதில் கண்ட வெற்றிதான் ரணிலை அரசியல் அநாதையாக்கியது.
அதற்குப் பதிலாக லைவ் ஹீரோக்கள், கீபோர்ட் வீரர்கள், அரசியலில் முளைத்து மூன்று இலை விடாத காளான்கள் எல்லாம் தங்களைத் தாங்களே போராட்டத்தின் அச்சாணிகளாக,  போராட்ட இயக்கத்தின் தலைவர்களாக தொடர்ந்தும் எண்ணிக் கொண்டு இந்தப் போராட்டத்தை வழிநடத்த முற்பட்டால், இன்றைக்கு நடந்தது ஒரு ஒத்திகைதான். இனி வரும் காலங்களில் கல்லறைகளும் நமக்காக காத்திருக்கும் நிலை ஏற்படலாம்.
ஆகவே அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களை முன்னிறுத்தி, முன்னிலைப்படுத்தி அவர்களின் பின்னால் ஜனநாயக ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட்டு பாரிய மக்கள் ஆதரவுத் தளம் ஒன்றை உருவாக்குவதன் ஊடாகவே இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டம் வரை நகர்த்திச் செல்ல முடியும்.  இல்லையேல் நீங்களும் உங்கள் இன்னுயிர்களை இழந்து, உங்களை நம்பிப் பின்தொடர வருகின்றவர்களையும் இக்கட்டில் தள்ளிவிட்டுப் போக முயற்சிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ள நேரிடும்.
ஒருகாலத்தில் ஜே.வி.பி.யின் ஆக்ரோசம் மிக்க தலைவர்களாக செயற்பட்ட டளஸ் அலஹப் பெரும, சம்பிக ரணவக ஆகியோர் இன்று எவ்வாறு 180 பாகையில் முற்றாக யூடேர்ன் அடித்து தங்களை மாற்றிக் கொண்டு அரசியல் ரீதியான செயற்பாடுகளின் ஊடாக தங்கள் தலைமைத்துவத்தைக் கட்டமைத்துக் கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து கொஞ்சம் கவனம் செலுத்திப் பாருங்கள். அதற்குள் ஆயிரம் படிப்பினைகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
(காலிமுகத்திடல் தாக்குதல் நடைபெற்ற தகவல் அறிந்து நேற்றிரவு அவ்விடத்தை ​நோக்கி விரைந்து, களத்துக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்ட புத்திஜீவிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட உரையாடலில் எனக்கும் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அதன் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது)

கருத்துகள் இல்லை: