ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும்- மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை

 மாலைமலர் : தேர்தலின் போது தாம் எதிர்த்த கட்சிகளுடன் கூட்டணி வைத்து வாக்காளர்களுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும், ராஜ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:
மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு  மகாராஷ்டிரா அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன? இதை நிறுத்தாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் ஹனுமான் சாலிசா ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கும்.


நான் பிரார்த்தனை அல்லது எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானவன் அல்ல. எனது சொந்த மதம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். தேர்தலின் போது நான் எதிர்த்த சக்திகளுடன் கூட்டணி வைத்து வாக்காளர்களுக்கு முதலமைச்சர் துரோகம் இழைத்துவிட்டார்.

மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. தேவேந்திர ஃபட்னாவிஸை முதலமைச்சராக பிரதமர் மோடி குறிப்பிட்டபோது  உத்தவ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான், அவருக்கு முதல்வராகும் எண்ணம் வந்தது. எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவானதில் இருந்து மாநிலத்தில் சாதி அடிப்படையிலான வெறுப்பை பரப்பி வருகிறது. இன்றைக்கு மாநிலத்தில் சாதி பிரச்சனைகளுக்காக மக்கள் போராடுகிறார்கள். அதிலிருந்து நாம் எப்போது வெளியேறி இந்துக்களாக மாறுவோம்? இவ்வாறு ராஜ்தாக்ரே குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: